தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்!
தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.
எடுத்துக்காட்டிற்கு ஒன்று:- தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில் 95% உரிய ஆவணங்கள் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டுக் கணக்குக் காட்டவேண்டும் என்பதற்காகத்தான் அப்பாவிகளின் ஊர்திகளை மடக்கிப் பணப்பறிமுதல் செய்கின்றனர் எனத் தெரிகின்றது.
மற்றோர் எடுத்துக்காட்டு : கரூரில் அமைச்சரின் மகனுடைய நெருங்கிய நண்பரும் அமைச்சர்கள் பலரின்நட்பு வட்டத்தில் இருப்பவருமான ஒருவர் வீட்டில் இதுவரை இல்லாத அளவிற்குப் பணம் கைப்பற்றப்பட்டதாகச் செய்தி வருகிறது. கைப்பற்றப்பட்டதைவிட, கைப்பற்றாமல் விட்டுவிட்டப் பணத்தின் மதிப்பு பல மடங்கு என்றும் செய்தி வருகிறது. உண்மையான தொகை தெரியாவிட்டாலும் பணஎண்ணி(ப்பொறி)கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளன. 15 நாள் பணம் எண்ணப்பட்டதாகவும் செய்திகள் வருவதால் 12 பொறிகளைக் கொண்டு 15 நாள் எண்ணப்பட்ட பண மதிப்பு பல ஆயிரம்கோடியாகக்கூட இருக்கலாம். இது போன்ற தேர்தல்தொடர்பான பணம் கைப்பற்றப்படும் பொழுது முழுத்தகவலும் தருவதில்லை. முழுமையான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைவிடத் தேர்தல் ஆணையரின் நடுநிலையின்மைக்கு வேறு சான்று தேவையில்லை.
வேட்பாளர் செலவு வரம்பு தமிழ்நாட்டிற்கு உரூபாய் 28 நூறாயிரம்; புதுச்சேரிக்கு உரூபாய் 20 நூறாயிரம். (ஆனால், இந்தியத்தேர்தல் ஆணைய இணையப்பக்கத்தில் வினா விடைப்பகுதியில் பழைய விவரங்களே தரப்பட்டுள்ளன.) தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பைக் கடந்துவிட்டால் உடனடியாக நடிவடிக்கை எடுத்து அவர் போட்டியிடத்தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும்.
வேட்பாளர் எனத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் முன்னரே கட்சியால் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் செலவழிக்கப்பட்ட தொகையும் வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். முதல்வரின் பாதுகாப்புச்செலவு, உகப்பூர்திச்செலவு, கூட்டச்செலவு, அழைத்து வருவோருக்குத் தரப்படும் போக்குவரத்து, உணவிற்கான செலவு ஆகியவையும் அந்தக் கூட்டத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செலவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்ப்பதால் வேட்பாளர் செலவு வரம்பு மிகுந்தால் உரிய வேட்பாளர் தகுதியற்றவர் என உடனே அறிவிக்க வேண்டும். இது பிற கட்சிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு நடவடிக்கை எடுப்பதால் தேர்தல் முடிந்து வழக்குகளை இழுத்தடிக்கும் அவலம் ஏற்படாது.
முதல்வரின் பரப்புரையின்பொழுது ஏற்படும் உகப்பூர்திச் செலவு, பாதுகாப்புச் செலவு முதலியனவும் அவரைக் கட்சி வேட்பாளர் என்ற முறையிலும் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் கருதிப்பார்த்துத்தேர்தல் செலவினக்கணக்கில் சேர்க்க வேண்டும்.
தேர்தல் முடியும் வரை, முதல்வர் இல்லத்தில் முதல்வரின் செயலகம் இயங்கத் தடை விதிக்க வேண்டும்.
முதல்வருக்குச் செலவழிக்கப்படுவது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்றால், 93 அகவையான மூத்த எதிர்க்கட்சித் தலைவருக்கு அதுபோன்ற பாதுகாப்பு தரவேண்டும் அல்லவா? பிற கட்சித்தலைவர்களுக்கும் பாதுகாப்பு தரவேண்டுமல்லவா? அவ்வாறு தந்திருந்தால் வைகோவிற்கும் திருமாவிற்கும் எதிரான தாக்குதல் நடந்திருக்காதே! எனவே, பாதுகாப்பு தருவதில் சமனிலை இருக்க வேண்டும்.
எனவே, இனியாவது தேர்தல் ஆணையரும் தேர்தல் ஆணையத்தின் பிற அலுவலர்களும் அச்சமின்றி நடுவுநிலையுடன் செயல்படுதல் வேண்டும்.
கெடுவல்யான் எனப(து) அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின். (திருவள்ளுவர், திருக்குறள் 116)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 132, சித்திரை 25, 2047 மே 08, 2016
Leave a Reply