தலைப்பு-தேர்தல்சீர்திருத்தம்,திரு : thalaippu_therthalcheerthirutham_ilakkuvanarthiruvalluvan

1/2

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2

 

   உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.

    சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர் வலியுறுத்துவனவற்றுள் பின்வரும் நான்குதான் முதன்மையாக உள்ளன.

 கல்வித்தகுதி வரையறை

  1. தொகுதிச் சார்பாளர் இறந்தால் இடைத்தேர்தல் தேவையில்லை. அவர் சார்ந்த கட்சியே உரியவரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
  2. தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை
  3. வாக்குகள் அடிப்படையிலான சார்பாண்மை( விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்)

 இவை நமக்கு எவ்வவாறு ஏற்றன அல்ல என இனிப் பார்ப்போம்.

 1.கல்வித்தகுதி வரையறை

  சில நாடுகளில் உள்ளது போல் இல்லாமல், ஆண், பெண், அலி என்ற பால் பாகுபாடின்மை, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்மை, படித்தவன் படிக்காதவன் என்ற வகைப்பாடின்மைதான் இந்தியத் தேர்தல் முறையின் மிகப்பெரிய சிறப்பாகும். அவ்வாறிருக்க கல்வித்தகுதி  வரையறுக்க வேண்டும் என்பது அடிபபடையையே ஆட்டம் காணச் செய்யும். கல்வித்தகுதி என்றால் எந்த அளவு கல்வித்தகுதி, ஆணிற்கும் பெண்ணிற்கும்  ஒரே வகைக் கல்வித்தகுதியா என்றெல்லாம் சிக்கல் வரும்.

   2011 ஆண்டுமக்கள்தொகைக்கணக்கெடுப்பின்படி இந்தியாவில் படித்தவர்கள்  எண்ணிக்கை 74 விழுக்காடு (ஆண்கள் 82.14 விழுக்காடு;பெண்கள் 65.46  விழுக்காடு)

தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 80.33% (ஆண்கள் 86. 81%; பெண்கள் 73. 86%) (விக்கிபீடியா)

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் படித்தவர்களே தேர்தலுக்கு நிற்கின்றனர். அதே நேரம் படிப்பிற்கும் பண்பிற்கும் பணியாற்றுவதற்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.

 படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான், போவான், ஐயோவென்று போவான்.

என்றார் பாரதியார். (இப்பாடல்வரிகள்  பாவம் செய்தால்என்றும் சூதும் வாதும் செய்தால்என்றும் தவறாகக் குறிக்கப்படுகின்றன.)

 ஆனால் படித்தவர்கள்தாம் எவ்வாறு சூதும் பாவமும் செய்வது எனவும் படித்தவர்களாக இருக்கின்றனர். அதன்விளைவே நம் நாடு ஊழலின் உறைவிடமாக மாறியுள்ளது.

   பழங்குடியினர் வகுப்பிலோ வேறு சில வகுப்பிலோ படித்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். படிப்பின்மையைக் காரணம் காட்டி அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிப்பது முறையற்றது அல்லவாஎனவே, தேர்தல் போட்டிக்குரிய தகுதியாகப் படிப்பைச் சேர்க்காத சிறப்புடைய நம் தேர்தல் முறையை மாற்றிப்படிப்பை அளவுகோலாகக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரும் தவறாகும்.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் — நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா — அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

 என நாம் பாரதியின்  கட்டளைகளைப் பின்பற்றுவதில்லையே! மாறாக,

  நாம் பாதகம் செய்பரை அடிபணிதலும், முகமன் கூறி வாழ்த்துதலும் நம் இலக்கு என்று இருக்கும் பொழுது எங்ஙனம் நம் சார்பளார்கள் நல்லன ஆற்றுவார்கள்!  அவர்கள் குற்றங்கள் செய்தாலும் புகழப்படும்பொழுது குற்றங்களை நிறுத்தாமல் தொடரத்தானே செய்வார்கள்.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்,

பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்

(பாரதியார்) என மக்கள் சார்பாளர்கள் இருக்க வேண்டும்.

ஆனால்,

கடமையாவன செல்வத்தைப் பெருக்குதல்

குடும்பத்தைஉயர்த்துதல்

பிறர் துயர்களைப் பொருட்படுத்தாமை

பிறர்நலம் மறத்தல்

 என்பனவே இன்றைய அரசியலர்களின் இலக்காக மாறிப்போனபின்பு நாம் தேர்தல் முறையைக்  குறைகூறிப் பயன் என்ன? எனவே, கல்வியை வேட்பாளருக்கோ வாக்காளருக்கோ தகுதியாக வரையறுக்காமல் அனைவருக்குமான கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

  1. இடைத்தேர்தல் தேவையில்லை என்பது:

  ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி உறுப்பினர் போன்ற மக்கள் சார்பாளர்  இயற்கை எய்தினால் அல்லது  பதவி விலகினால் அத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இடைத்தேர்தல் என்பது ஆட்சியில் உள்ளவர்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும் பிற கட்சியின் முன்னேற்றங்களை அறியவும் உதவுகின்றது. வெறும் செலவு அடிப்படையில் இதனை வேண்டா என்பது தவறாகும். மக்களாட்சியின் மாண்பினை அறிய  உதவும் இடைத்தேர்தலைச் செலவு காட்டி இல்லாமல் ஆக்குவது முறையற்றதாகும்.  சீர்திருத்தம் என்ற பெயரில் அச்சார்பாளர் சார்ந்த கட்சியே மாற்று உறுப்பினரைத்  தெரிவு செய்து அனுப்பலாம் என்பது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். கட்சித்தலைமை தான் விரும்பியவர் தேர்தலைச் சந்திக்கத் தகுதியற்றவராக இருப்பின்மக்களிடம் செல்வாக்கு பெற்ற  ஒருவரைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்யும். அடுத்து அவரை மிரட்டியோ வேறு பேர  அடிப்படையிலோ விலகச் செய்யும் தான் விரும்புபவரை எளிதில் மக்கள்சார்பாளராக ஆக்கி விடும்.

   நடைப்பயிற்சி செல்லும் பொழுது அரசியல் கொலைகள் நிகழும் நம் நாட்டில் மக்கள்சார்பாளரின் உயிர் பறிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவரே கட்சிச் செல்வாக்கு அல்லது தலைமையின் குடும்பத்தைச் சேர்ந்தவர் போன்ற முறையில் மக்கள் சார்பாளராக ஆக்கப்படுவார். இதனைக் கற்பனை என எண்ணக்கூடாது.  ஒரு கட்சியைச்சேர்ந்தவருக்குப் பிற கட்சியைவிட அவரது கட்சியிலேயே மிகுந்த எதிர்ப்பு இருக்கும் பாழ்செய்யும் உட்பகையே இன்றைய கட்சிகளின் போக்கு. இதுவரை நிகழ்ந்த பல கொலைகளும் அந்தந்தக் கட்சிக்காரர்களாலேயே நிகழ்ந்தன என்னும் உண்மையை நாம் மறக்கக்கூடாது. எனவே, யாரோ ஒருவர் கொல்லைப்புற வழியில் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள்சார்பாளராக ஆவதற்காக அப்பாவி ஒருவர் உயிரிழக்க வேண்டுமா? இதை ஏற்றுக்கொண்டால் அரசியல் கொலைகள் பெருகும் என்பதில் ஐயமில்லை.

  இதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. கட்சி  சார்பில் அல்லாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மறைவு போன்றவற்றால் அத்தொகுதி ஒழிவிடமானால் என்ன செய்வது?

   வெற்றி பெற்றவர்  வேறு கட்சியில் சேர்ந்தபின்னர் இயற்கை எய்தியிருந்தால் எக்கட்சிக்கு மாற்று உறுப்பினரை அனுப்பும் உரிமை உண்டு? மன்ற உறுப்பினர்களையும் வேட்பாளர்களையும் விலைக்குவாங்கும் நம் நாட்டில் இந்த நடைமுறை   எப்படி ஏற்றதாகும்?

   எனவே, இடைத்தேர்தலைச் செலவின் அடிப்படையிலோதேர்தல் ஊழல்களை ஒழிக்காமல் அவற்றின் அடிப்படையிலோ ஆளுங்கட்சி அதிகாரத்தைப்பயன்படுத்துகின்றது என்று சொல்லியோ வேண்டா என்பது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
 ஊக்கார் அறிவுடை யார்.
(திருவள்ளுவர், திருக்குறள் 463)

  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை  முற்பகுதி

அகரமுதல 131, சித்திரை 18, 2047 மே 01, 2016

Akaramuthala-Logo

 

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum(தொடர்ச்சி 2/2 காண்க.)