(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 5

பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும்

பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்:

புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.”

[கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பிற்காலத்தில் பாசிச இயக்கத்தின் முன்னோடியாக மாறியவர். அவரது இலக்கியப் படைப்புகளில் காமமும் ஒழுக்கக் கேடுமே நிறைந்திருந்தன. டி‘அனுன்சியோ சொந்த வாழ்க்கையிலும் அவ்வாறே இருந்தார். ஒழுக்கக்கேட்டுக்கு அவரும் அவர் படைத்த நாயக நாயகிகளும் எடுத்துக் காட்டாக விளங்கினர்.]

மா இலெனின் பார்வையில், காமக் களியாட்டங்கள் முதலாண்மைச் சீரழிவின் வெளிப்பாடு! மாறாக,

“பாட்டாளி வகுப்பு எழுந்து வரும் வகுப்பாகும். அதற்கு எந்த விதமான போதை அல்லது ஊக்க மருந்தும் தேவை இல்லை. பாலியல் மிகைப்பாடும் தேவை இல்லை. சாராயக் குடியும் தேவை இல்லை. அது முதலாண்மையின் வெட்கக்கேட்டை, அழுக்கை, காட்டுமிராண்டித் தனத்தை, மறக்கக் கூடாது, மறக்காது. வகுப்புகள் (வருக்கங்கள்) என்ற சூழலிலிருந்து, பொதுமை இலட்சியத்திலிருந்து அது மிக மிக வலுவான போராட்ட ஊக்கம் பெறுகிறது. அதற்குத் தேவை தெளிவு, தெளிவு, மீண்டும் தெளிவு. ஆகவே மீண்டும் சொல்கிறேன்: ஆற்றல்களை நலிவுறச் செய்தல் வேண்டா, வீணடித்தல் வேண்டா, அழித்தல் வேண்டா. தன்னை அடக்கியாளுதல், தற்கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது, காதலில் கூட அப்படி ஆகாது.”

பெண்கள் சிக்கல் பற்றிய உரையாடல்தான் திசை மாறிப் பாலியல் சிக்கல்கள் பற்றிய பேச்சாயிற்று. இலெனின் தொடர்கிறார்:

“ஆனால் மன்னியுங்கள் கிளாரா, நம் உரையாடலின் தொடக்கப் புள்ளியிலிருந்து விலகிப் போய் விட்டேன். நீங்கள் ஏன் என்னை வழிப்படுத்தவில்லை? வாய் போன போக்கில் போய் விட்டேன். நம் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எனக்கு ஆழ்ந்த கவலை. அது புரட்சியின் ஒரு பகுதி. தீங்கான போக்குகள் தலையெடுத்தால்,  விதவிதமான களைகளின் வேர்களைப் போல முதலாண்மைக் குமுகத்திலிருந்து புரட்சி உலகிற்குள் அவை படர்ந்தால், முளையிலேயே அவற்றைக் களைதல் நன்று. இந்த வினாக்களும் பெண்கள் சிக்கலின் பகுதியே.”

கிளாரா எழுதிய இலெனின் நினைவுக் குறிப்புகளில் பாலியல் சிக்கல்கள் தொடர்பான இந்தக் கருத்துகள் காலங்கடந்தும் நிலங்கடந்தும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டவை எனக் கருதியதால் தாழி மடலில் அவற்றை எடுத்துக் காட்டினேன். ஈண்டு இது போதும் என அடுத்த செய்திக்கு நகரலாம் என நினைக்கிறேன்.

தரவு – தாழி மடல் 5