(தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்-தொடர்ச்சி)

காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும்


காலநிலை மாற்றம் என்றால் என்ன? கோடைக் காலத்தில் வெப்பமும் குளிர் காலத்தில் குளிரும் கூடுதலாக இருக்கும் என்பதுதான் என்றால், வெப்பதட்பத்தைச் சீர்செய்ய உதவும் மின் பொறிகளின் துணைகொண்டு சமாளித்து விடலாம். பெருமழை பெய்வதுதான் என்றால் குடை அல்லது மழையங்கி கொண்டு சமாளிக்கலாம். புயல்தான் என்றால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். இவையெல்லாம் இடையில் வந்து போகிறவை என்றால் நிலையாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் வழக்கம் போல் நம் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கலாம் அல்லவா?

நாம் புரட்சி செய்ய விரும்புகிறோம் என்றால் அதற்கான பணிகளைச் செய்யலாம். புரட்சிப் பணிகளைப் புறக்கணித்து விட்டுக் காலநிலை மாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அது இடையிடையே வரும் போது ஆவன செய்து விட்டு நம் புரட்சி வேலைக்குத் திரும்பி விடலாம். அப்படித்தானே?

காலநிலை மாற்றமா? புரட்சியா? எது முதன்மை என்றால் புரட்சிதான் முதன்மை என்று நம்பக் கூடிய அன்பர்கள் உள்ளனர். காலநிலை மாற்றம் என்பதே அமெரிக்காவின் பெருமையைக் குலைக்கும் சூழ்ச்சி என்று அந்தப் பக்கம் துரும்ப் பேசுவது போல், இந்தப் பக்கம் சுற்றுச்சூழலியல் பற்றிய தடபுடலே வல்லரசிய சூழ்ச்சி (ஏகாதிபத்திய சதி), தொண்டு நிறுவனங்களின் உள்நோக்கங்கொண்ட புரட்டுவேலை அல்லது மிகைப்படுத்தல் என்று நம்பக் கூடிய புரட்சித் தோழர்கள் சிலரும் இருக்கக் கூடும்.

எஃது எப்படியானாலும் உண்மைகளுக்கு இரக்கமில்லை, பக்கச் சார்புமில்லை. (Facts are ruthless.) காலநிலை மாற்றம் என்பதும், அதன் கொடுந்தாக்கம் என்பதும் மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள். கிரெட்டா துன்பர்க்கு அல்லது நம் தோழர் சமந்தா இட்டுக்கட்டிய புனைகதைகள் அல்ல. சரி, இது ஒரு பக்கம், புரட்சி ஒரு பக்கம் என்று இயங்கலாம்தானே? என்று கேட்கலாம். இரண்டையும் இரண்டாகப் பார்ப்பது இந்தக் கேள்வியில் உள்ள அடிப்படைக் குறைபாடு.

குமுக முரண்பாடுகள் முற்றி அவற்றின் தீர்வுக்காக நடப்பதுதான் புரட்சி! அது எவ்வகைப் புரட்சி என்றாலும் இதுவே உண்மை. காலநிலை மாற்றம் குமுக முரண்பாடுகள் மீது தாக்கம் கொள்ளவில்லை என்றால், அது குமுகத் தாக்கமற்ற வெறும் தட்பவெப்ப மாற்றம் மட்டுமே என்றால் புரட்சி அது பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ள வேண்டியிருக்காது. ஆனால் உண்மை என்ன?
காலநிலை மாற்றம் வறிய நாடுகளையும் வறிய மக்களையும் எப்படியெல்லாம் தாக்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக எந்தப் புரட்சிக்கும் வறுமைதான் ஒழிக்க வேண்டிய இலக்கு, வறுமை ஒழிப்புதான் அடைய வேண்டிய குறிக்கோள் என்றால், காலநிலை மாற்றம் பற்றிய அலட்சியம் எந்தப் புரட்சிக்கும் உதவாது. உழைக்கும் மக்கள் தம்மைத்தாமே விடுதலை செய்து கொள்ள வேண்டுமென்றால், சுரண்டலுக்கு எதிராகப் போராடுவது போலவே காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும் போராடியாக வேண்டும்.

குபேரபுரியாக வண்ணிக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளையே எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவைத் தாக்கிச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிய பத்தில் ஒன்பது பெரும் சூறாவளிகள் 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின் வீசியுள்ளன. இவையனைத்தும் புவி வெப்பமாதலின் விளைவுதான் என்று கண்டறியப் பட்டுள்ளது. இருபதாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கத் தென்மேற்கைக் கொடிய வறட்சி வாட்டி யெடுக்கிறது. மேலை யுலகின் இருபெரும் நீர்நிலைகளான மீட்டு ஏரியும், பொவெல் ஏரியும் விரிந்து பரந்த கோடை வயல் போல் வெடிப்பு விட்டுக் கிடக்கின்றன. இந்த நீர்நிலைகளை நிரப்பும் கொலராடோ ஆறு விரைந்து மறைந்து வருகிறது. அமெரிக்க மேற்கில் நீர் வழங்கலுக்கு இந்த ஆற்றை நம்பியுள்ள 4 கோடி மக்களின் அவல நிலைக்கு முடிவில்லை.

புவியழிந்தால் ஏழை பணக்காரர் எல்லாரும் அழிய வேண்டியதுதான்! உடனுக்குடனான இன்னல்களும் கூட அனைவருக்கும் உண்டுதான்! ஆனால் இன்று காலநிலை மாற்றத்தின் படுமோசமான பொருளியல் விளைவுகள் எங்கெங்கும் வறிய மக்களையே பெரிதும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பீடிக்கப்பட்டுள்ள உலக ஏழைகளில் 50 கோடிக்கு மேற்பட்டோர் வளர்ச்சி குன்றிய நாடுகளில் உள்ளனர். இந்த நாடுகளே காலநிலை மாற்ற அதிர்ச்சிகளின் இடிதாங்கிகளாக இருப்பவை. 2030க்குள் காலநிலை மாற்றத்தினால் இன்னும் 10 கோடிப்பேர் வறுமைக் குழியின் அடியாழத்துக்குப் போய் விடுவர் என்று உலக வங்கி ஆய்வு கண்டறிந்துள்ளது.
வறுமை என்றால் இல்லாமை மட்டுமன்று, வசதியின்மை மட்டுமன்று, ஆள் கடத்தலும் அடிமை வணிகமும் பரவி வருவதும் கூடச் சான்றுகளுடன் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடாகிய கானாவில் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்படும் கொடுமை பெருகி வருகிறது.
இப்போது ஆள் கடத்தலுக்கும் அடிமை வணிகத்துக்கும் எதிரான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் இயேம்சு சொல்கிறார்:

“ஆறு வயதில் என்னை என் தந்தை வோலுடா(Volta) ஏரி மீனவர்களிடம் விற்று விட்டார். 12 குழந்தைகளில் நான்தான் கடைக்குட்டி. என் உடன்பிறந்தவர்களில் பலரும் முன்பே உழைப்புக்குத் தரப்பட்டு விட்டனர். படகுகளில் 17 மணி நேரம் உழைக்க வேண்டும், மீன் வலைகளில் சிக்கெடுப்பது என் வேலை. தூங்க முடியாது. ஒரு வேளைதான் உணவு. என்னோடு விற்கப்பட்ட மற்றக் குழந்தைகளில் பாதிப்பேர் சீரழிக்கப்பட்டும் மற்ற வகையிலும் இறந்து விட்டனர். 13 வயதிருக்கும் போது தப்பி சொந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு நேர்ந்தது கானாவில் மற்றக் குழந்தைகளுக்கு நேரக் கூடாது என்று நினைத்தேன். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கலானேன். கானா பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்று வைப்பக வேலையில் சேர்ந்தேன். ஆனால் எனக்கொரு குறிக்கோள் இருந்தது. கானாவில் ஆள்கடத்தலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அறைகூவும் உச்சங்கள் என்ற அறக்கட்டளையை நிறுவினேன்.”

ஆனால் கென்யாவில் அடிமை வணிகம் குறையவே இல்லை. சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கூடிக் கொண்டே போகிறது.
இயேமுசு சொல்கிறார்: “புவிவெப்ப உயர்வினால் ஆள்கடத்தல் பெருகி வருவதைப் பலரும் அறியவில்லை. ஆனால் வெப்பமாதலின் தீய விளைவுகள் அச்சமூட்டும் படியாக உள்ளன.”

வடக்குக் கானாவில் இந்த ஆண்டு ஒற்றை மாரிப் பருவத்துக்குப் பின் நீடித்த வறட்சி வாட்டுகிறது. பயிர்செய்யும் காலம் மிகவும் குறுகிப் பெரும்பாலான மக்களுக்கு வேலை இல்லை. ஆறுகள் வறண்டு போய் விட்டன. 27 நூறாயிரம் மக்களுக்கு வேலை கொடுக்கும் மீன்பிடித் தொழிலும் ஓய்ந்து விட்டது. பிழைப்பும் வயிற்றுப்பாடும் இழந்து மக்கள் மோசமான முடிவெடுக்கத் தள்ளப்படுகின்றார்கள்.


உரிய வயதடையுமுன்பே குழந்தைகளை மணம் செய்விப்பதும், அடிமைத் தரகர்களிடம் விற்று விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தொலைவாகச் சென்று குதிரை இலாயங்களில் நல்ல ஊதியத்துக்கு வேலை செய்வார்கள் என்பதெல்லாம் பொய். ஆள்கடத்தலுக்கும் பாலியல் தொழிலுக்கும்தான் இந்த வணிகம் வழி செய்கிறது.

பயிர்செய்கை பொய்த்துப் போவதாலும், தண்ணீர்ப் பஞ்சத்தாலும் 2050க்குள் காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்வோர் தொகை 14 கோடிக்கு மேல் போய்விடும் என்பது உலக வங்கியின் மதிப்பாய்வு.
இப்போதே கானாவில் 1,33,000 பேர் அடிமைகளாக்ககப் பட்டுள்ளனர். அடிமை வணிகம் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவி வருகிறது. ஆபிரகாம் இலிங்கன் தலைமையில் அடிமை முறையை ஒழித்து விட்டதாக வரலாறு சொல்லும் அமெரிக்காதான் இன்று காலநிலை மாற்றத்துக்கு வழிகோலும் காலநிலை மாற்றக் கேடுகளின் முதன்மைத் தோற்றுவாயாகி மீண்டும் ஆப்பிரிக்காவில் அடிமை அங்காடி திறக்க வழியமைத்துள்ளது.

கானாவிடமிருந்து விடைபெறுமுன் ஒரு சின்ன ஒப்பாய்வு: மக்கள்தொகையுடன் நிரலளவுக் கரிய உமிழ்வை ஒப்புநோக்கின், ஆள்வாரி உமிழ்வு கானாவிற்கு 0.52 பாரம்(ton). அமெரிக்காவிற்கு 14.24 பாரம்.
கரிய உமிழ்வை அமெரிக்கா குறைத்துக் கொள்ளுமா? ஆளும் வகுப்பான பெருங்குழும முதலாளர்கள் இதற்கு ஒப்புவார்களா? காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றும் அவ்வளவு ‘இலேசுபாசான’ ஒன்றில்லை. ஏனென்றால் அது முதலாண்மைக் கொள்ளையீட்ட (கொள்ளைலாப) வேட்டைக்கு எதிரான போராட்டம். எப்படி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம்?

தரவு: தாழி மடல் 14