(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (2)

கறுப்பும் வெள்ளையும்

கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு.

சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் மனநோயுற்ற சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் வசதி இல்லாமல் இருந்த வரை கடலூர் மத்தியச் சிறைதான் மனநோயுற்ற குற்றவாளிகளுக்கான சிறையாக இருந்தது. சென்னை மாகாணம் முழுவதிலிருந்தும் இந்த வகைக் கைதிகள் — ஆண் பெண் இருபாலரும் — கடலூர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். சிறையில் பெண் கைதிகளுக்கென்று ஒரு தனிப் பகுதி இருந்தது. இப்போது பெண் கைதிகள் கிடையாது என்றாலும் அந்தப் பகுதிக்கு பெண்கள் தொகுதி (female ward) என்ற பெயர் மட்டும் நீடிக்கிறது.

காச நோயுற்ற கைதிகளும் கடலூர் மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார்கள். சிறை அருகில் உள்ள காச நோய் மருத்துவ நிலையத்தில் (டி.பி.சானடோரியம்) அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போதெல்லாம் இந்திய மருத்துவப் பணி (ஐ.எம்.எசு.) அதிகாரிதான் சிறைக்குப் பொறுப்பு. அவருக்குக் கீழே மேற்பார்வையர் (Oversear) துணை மேற்பார்வையர் (Deputy Oversear) என்ற வகையில் சிறை அதிகாரிகள் பணியாற்றினார்கள்.

பிற்பாடு கடலூர் மத்தியச் சிறை தென் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கமான குற்றவாளிகளுக்கான சிறை – ‘கறுப்புக் குல்லா சிறை’ – ஆக்கப்பட்டது. சேலம் மத்தியச் சிறை வட மாவட்டங்களுக்கான ’கறுப்புக் குல்லா சிறை’, இப்போது சேலம் மட்டுமே ‘கறுப்புக் குல்லா சிறை’. கடலூர் 1985இல் வழக்கமான சிறைக் குற்றவாளிகளுக்கான சிறை ஆக்கப்பட்டு விட்டது. வழக்கமான குற்றவாளிகள் (habitual offenders) என்பது வேறு, வழக்கமான சிறைக் குற்றவாளிகள் (habitual prison offenders) என்பது வேறு.

கடலூர் மத்தியச் சிறை பெரும்பாலும் தனிக் கொட்டடிகளால் ஆனது. ஒரு வட்டத்தின் ஆரங்கள் போன்ற எட்டுத் தொகுதிகள் – ஒவ்வொன்றும் முப்பது தனிக் கொட்டடிகளைக் கொண்டது. நடுவில் ஒரு வட்ட மைதானம் உண்டே தவிர, திருச்சி சிறை போல் கோபுரம் ஏதும் கிடையாது. எட்டாம் தொகுதியின் முதல் நான்கைந்து கொட்டடிகள் முதன்மைத் தலைமைக் காவலரின் (chief head warder) அலுவலகமாகப் பயன்பட்டன. அந்தக் கொட்டடிகளுக்கு வெளியே தாழ்வாரத்தில் அவர் நாற்காலி போட்டு உட்காரும் இடத்துக்கு நெடுமாடம் ‘(tower) என்ற பெயர் மட்டும் உண்டு.

தோழர் ஏ.எம். கோதண்டராமன் 1973இல் விசாரணைக் கைதியாக கடலூர் சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது இதே எட்டாம் தொகுதியின் முப்பதாம் கொட்டடியில்தான் வைக்கப்பட்டார். அது சிறை வாயிலுக்கு அருகில் இருந்ததே காரணம். வாயிற்பகுதியில் கீழே சிறை அலுவலருக்கும்(Jailor) மேலே கண்காணிப்பாளருக்கும் அலுவலகம் என்பதால் அவர்களால் எந்த நேரமும் எளிதில் கண்காணிக்க முடிந்தது.

கண்காணிப்பு எதற்காக? ஏஎம்கே சிறையிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவர் காவலர்களுடனும் ஏனைய கைதிகளுடனும் பேசுவதையும் பழகுவதையும் தடுக்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்

இந்த நோக்கத்துக்காகவே, ஏஎம்கே. வைக்கப்பட்டிருக்க கொட்டடியிலிருந்து பதினைந்து கொட்டடிகள் காலியாகவே வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பிறகும் இளவர் (minor) கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் கடலூர் சிறையில் தொகுதிகளைப் பிரிக்கும் அடைப்பு வேலிகளோ சுவர்களோ கிடையாது. மற்றும் ஒரு சிக்கல்: ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனிக் குளியல் தொட்டி கிடையாது. குளிப்பதற்காக ஏஎம்கேயைச் சிறை மருத்துவமனைக்கோ, தண்டனைக் காவலர் தொகுதியாக இருந்த பெண்கள் தொகுதிக்கோ அழைத்துச் செல்வார்கள். குளிக்கும் இடத்தில் கூட அவர் மற்ற கைதிகளிடம் பேசிவிடக் கூடாது என்பதற்காகக் காலை எட்டு மணிக்குப் பிறகுதான் அழைத்துச் செல்வார்கள், அந்த நேரத்தில் மற்றவர்கள் எல்லாம் குளித்து முடித்துக் கஞ்சி குடித்து வேலைக்குப் போயிருப்பார்கள். தச்சு, நெசவு, தையல் ஆகியவை சிறையில் நடைபெற்ற முதன்மைத் தொழில்கள். ஒரு மாட்டுப் பண்ணையும் இருந்தது.

சிறையில் கைதிகளின் தொகை அறுநூறுக்கு மேல் இருக்கும். பெரும்பாலானவர்கள் ’வழக்கமான குற்றவாளிகள்’ – கறுப்புக் குல்லாய்கள். சிறைக்குள் குற்றம் புரிந்து அதற்கான தண்டனை என்ற முறையில் சிறை மாற்றம் செய்யப்பட்டு வந்திருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலரும் இருந்தார்கள். அவர்களில் சிலர் – எட்டு ஒன்பது ஆண்டுக்கு மேல் தண்டனை கழித்தவர்கள் – தண்டனைக் காவலர்களாகி, தலையில் தொப்பியும் கையில் தடியுமாய் பாரா கொடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர சிறு எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள்
‘நக்சலைட்டு’ கைதி என்ற வகையில் ஒரத்தூர் கருணாகரனும் விசாரணையை எதிர்நோக்கி அதே சிறையில் இருந்த போதிலும் அவரை ஏஎம்கேயுடன் வைக்கவில்லை.

[கருணாகரன் பற்றிச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உண்டு. பிறகு சொல்கிறேன். அவர் இப்போது சிதம்பரத்துக்கும் சேத்தியாத்தோப்புக்கும் இடையே ஒரத்தூரில் ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறார். பிற பின்…]

இப்படி அறவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்தான் ஏஎம்கே. காவலர்களிடையிலும் கைதிகளிடையிலும் கிளர்ச்சிப் பணி தொடங்கினார். அவர் சிறை அதிகாரிகளைத் தட்டிக் கேட்டு எதிர்த்துப் பேசிய போதெல்லாம் “ஆனானப்பட்ட வங்காளத்து நக்சலைட்டு களையே அடக்கி விட்டோம், நீர் எம்மாத்திரம்?” என்கிற தோரணையில்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். மற்றக் கைதிகளையும் திரட்டிப் போராடுவதுதான் இந்தச் சிறை அதிகாரி களுக்கு ஏற்ற விடையாக இருக்கும் என்று ஏ.எம்.கே. கருதினார்.

[கடலூர் சிறையில் வங்கத்து அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தடியடித் தாக்குதல் பற்றியும் பிறகு சொல்கிறேன்.]

பொதுவாகச் சொன்னால், ‘கறுப்புக் குல்லாய்‘ கைதிகளை அணி திரட்டிப் போராடுவது மிகக் கடினம். பெரும்பாலானவர்கள் கைதேர்ந்த திருட்டுக் குற்றவாளிகள் என்பதால், தன்னலமே குறியாய் இருப்பார்கள். எப்பேர்ப்பட்டவர்களையும் இனிக்கப் பேசி ஏமாற்றும் கலையில் வல்லவர்களாய் இருப்பார்கள். அவர்களை நம்பி இரகசியம் பேசுவது ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதாகும். ஆனால் சிறையில் அவர்கள்தாமே மக்கள்! அதிலும் கடலூர் சிறை போன்ற ஒரு ‘கறுப்புக் குல்லா‘ சிறையில் அவர்களை விடுத்து என்ன செய்ய முடியும்?

யாரும் கறுப்புக் குல்லாயாகப் பிறப்பதில்லை கருப்புக் குல்லாய்கள் ஆகாயத்திலிருந்து வந்து குதித்தவர்களோ பூமி வெடித்துக் கிளம்பியவர்களோ அல்ல. எளிய மனிதர்களைக் குற்றவாளிகளாக்குவதிலும் கறுப்புக் குல்லாய்களாக இறுகச் செய்வதிலும் சமூகத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. குற்றவாளிகளின் நாற்றங்கால்களாகக் காவல் நிலையங்களும் விளைநிலங்களாகச் சிறைச்சாலைகளும் உள்ள வரை, மனிதனைக் கறுப்புக் குல்லாய் ஆக்குவதற்கான முதற்பழி அரசையே சாரும்.

சிறையில் கறுப்புக் குல்லாய்களுக்கு எதிரான பாகுபாடு நடைமுறையில் இருப்பதை ஏஎம்கே கவனித்தார். சிறை அதிகாரிகளும் காவலர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளும் பேசும் போதே கறுப்புக் குல்லாய்களை வேறாகப் பிரித்துப் பேசக் கேட்டார்,

தொடரும்
தரவு: தாழி மடல் 15