(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி)

“செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை”

இனிய அன்பர்களே!

இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்?            

அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என அவையினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அண்ணா எழுந்தார், “சிந்து நதி என்னும் அந்த ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரியர்கள் முதன்முதலாக வந்து குடியேறினார்கள்” என்று கம்பீரமாகத் தொடங்கினார். கையொலியால் அவை அதிர்ந்தது. அந்த ஒலி அடங்க நெடுநேரமாயிற்று. தலைப்பையொட்டி ஏறத்தாழ ஒரு மணிநேரம் அண்ணா அழகிய உரை வழங்கினார். தம் கொளகைகளை அழுத்தமாக முழங்கினார். 

[அண்ணாவின் இந்த முழு உரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இது வரை கிடைத்த பாடில்லை.]

யார் இந்த இரா.பி. சேதுப்பிள்ளை? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இந்தச் செய்தியால் தூண்டப்பெற்றது. “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். சேதுப்பிள்ளையின் இந்த ஒரு மேற்கோள் என்னைப் பெரிதும் ஈர்த்தது:

“அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?”

இது கூர்மையான கருத்து என்பது மட்டுமன்று. சேதுப்பிள்ளையின் உரைநடையில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும் என்பதற்கும் இதுவே சான்று.

சேதுப் பிள்ளையிடம் நான் சுவைத்துப் படித்த சில மேற்கோள்கள்:

“வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு. சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன.”

“அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. ‘கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை – அல்லா தந்த நெல்லை – எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் – இதுவன்றோ அறம்?”

 “தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை ” வாடை” என்றார்கள்; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் ” தென்றல்” என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு. தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்.”

காலுடுவெல் வாழ்ந்த இடையன்குடி பற்றிய செய்திகளுக்காக இரா.பி. சேதுப்பிள்ளையின் ‘காலுடுவெல் ஐயர் சரிதம்’ நூலிலிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தேன். தொடர்கிறேன். –

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 236

(பி.கு. ஆறறங்கரையினிலே நூலை https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8lupy&tag=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87#book1/ இணைப்பில்

அல்லது

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/3 இணைப்பில் படிக்கலாம்.)