தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று
(தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) தொடர்ச்சி)
ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (3)
ஆர்எசுஎசு அமைப்பில் 1990ஆம் ஆண்டு சேர்ந்து முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவர்தான் யசுவந்து சிண்டே.
ஆர்எசுஎசு ஒரு நச்சரவம் என்று சொன்னால் போதாது. அது ஒரு பத்துத்தலைப் பாம்பு போல் பல பிரிவுகள் கொண்டது. விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, பசுரங்கு தள், வித்தியார்த்தி பரிசத்து என்று எத்தனையோ பிரிவுகள். ஆர்எசுஎசு-இன் அரசியல் பிரிவுதான் பாராதிய சனதா கட்சி. யசுவந்து சிண்டே பசுரங்கு தளத்தின் மராத்திய மாநிலத் தலைவராக இருந்தவர்.
சிண்டே நான்டெட்டு நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வாக்குமூலம் ஆர்எசுஎசு பற்றிய அதிர்ச்சிக்குரிய பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. பரவலாகத் திகில் பரப்பும் நோக்குடன் புதுமச் சுடு கருவிகளைப் பயன்படுத்தவும், குண்டு செய்யவும் ஆர்எசுஎசு தலைவர்கள் தனக்கும் ஆர்எசுஎசு செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவெங்கும் குண்டு வெடிக்கச் செய்து முசுலிம்கள் மீது பழி போடுவதுதான் திட்டமாம்! 2003, 2004 ஆண்டுகளில் சிண்டேயும் அவருடன் பயிற்சி பெற்றவர்களும் சலுனா, பூர்ணா, பர்பானி ஆகிய மராத்திய நகரங்களிலும் மசூதிகளுக்குக் குண்டு வைத்தார்கள். தொடர்ச்சியான குண்டுவைப்புகளில் ஐந்தாண்டுக் காலத்தில் 120க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக சிண்டே சொல்கிறார். சிண்டேயின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளுக்குப் பொருந்துகின்றன. 2006 நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னைச் சாட்சியாக விசாரிக்கும் படி சிண்டே கோரியுள்ளார். ஆனால் சிபிஐ இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அது ஏற்கெனவே வழக்கை முடித்து அறிக்கை கொடுத்து விட்டது.
சிண்டே இப்போதும் இந்துத்துவக் கருத்தியலில் நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் ஆர் எசு எசு தலைமை மீது நம்பிக்கை இழந்து விட்டார். தன் சகாக்கள் பலரும் குண்டு செய்யும் முயற்சிகளிலும் குண்டு வைப்புகளிலும் கோரமாக உயிரிழந்தைக் கண்டு வேதனைப்படுகிறார். இந்து தருமத்தின் புகழுக்காக அல்லாமல் பாரதிய சனதா கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக வேண்டி அவர்கள் பலியிடப்பட்டதாக வருந்துகிறார். ஆர்எசுஎசு தொண்டர்கள் திகிலிய (பயங்கரவாத) நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது பற்றி நேராகவோ மற்றவர்கள் வாயிலாகவோ ஆர்எசுஎசு தலைவர்களிடம் எச்சரித்தும் பயனில்லை என்கிறார்.
[தொடரும்]
சொல்லடிப்போம் வாங்க!
அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்
[‘கரோனா’வுக்கான தமிழ்ச் சொல் குறித்து…]
சிபியின் கண்ணோட்டம் சரிதான். எனினும் முடிப் புழு என்பது சரியல்ல. தோழர் தியாகு குறிப்பிட்டது போல் இதற்கு முன்னர் நான் மகுடை என எழுதியதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்!
எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது!
கரோனா என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மணிமுடி/மகுடம். இச்சொல் மாலை, மலர் வளையம் என்னும் பொருள் கொண்ட கரோனே என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.
கரோனா என்பது வட்டவடிவத்தில் இருப்பதைக் குறிப்பதால் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும் கரோனா எனப்படுகிறது. அதுபோல் தோற்றத்தின் அடிப்படையில் வட்டமாக மணிமுடி/மகுடம்/கிரீடம் போல் உள்ள, ஒரு தொற்று நோய்மிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கிரீடம் என்பது தமிழல்ல எனச் சொல்லப்படுகிறது. எனவே, பிற சொற்களில் எது பொருத்தமாக அமைகிறதோ அப்பெயரை இந்நோய்மிக்கு நாம் சூட்டலாம்.
நாம் நேரிடையாக மணிமுடித் தொற்றி என்றோ மகுடம் தொற்றி என்றோ சொன்னால் அவற்றில் இருந்து தொற்றப்பட்ட நோய் எனத் தவறாகப் பொருள் கொள்ளப்படும். இரவீந்திரன் வேங்கடாசலம் ஏறத்தாழ ஒத்துவரும் வகையில் மகுடம் தொற்றி என்றுதான் குறிப்பிடுகிறார். மகுடத்தின் உச்சியில் முள்முடி போல் இருப்பதால் சிலர் அப்படித்தான் முள் தொற்றி அல்லது முள்முடித் தொற்றி அல்லது முள்மூடித் தொற்றி என்கின்றனர். அப்படியானால் முள்ளில் இருந்து தொற்றப்படும் நோய் என்றுதானே பொருள் ஆகும். மேலும், முள்முடி அணிவித்தது இயேசுவின் மரணத்திற்கு முன்பு வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று. சிலர் இதனை எண்ணவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நாம் நேர்ச்சொல்லை அவ்வாறே பயன்படுத்தக் கூடாது. தோற்றத்தைக் குறிக்கும் சொல்லில் இருந்து புதுச்சொல் ஆக்குவதே சிறப்பாக இருக்கும். அவ்வாறு பார்க்கும் பொழுது மகுடத்தில் இருந்து மகுடை என்று நம்மால் சொல் உருவாக்க இயலுகிறது. எனவே, மகுடை என இத்தொற்றி நோய்மிக்குப் பெயர் சூட்டலாம்.
சிலர் மகுடம் தமிழல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டு இச்சொல்லை மறுக்கின்றனர். மகிழ் > மகிழம் > முகுளம் > முகுடம் > மகுடம். மொட்டுப் போன்ற கூம்பிய மணி முடி என அறிஞர்கள் இச்சொல் தமிழ் என்பதை விளக்குகின்றனர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, இதனை, முகம் > முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி, முகடு = உச்சி, வீட்டின் உச்சி, வாணமுகடு, தலை, உயர்வு; முகடு > (முகடம்); > மகுடம். இனி, முகிழ் > முகிழம் > முகுளம் > முகுடம் > மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம் என்று விளக்கித் தமிழ்ச் சொல் என்பதை மெய்ப்பிக்கிறது. பேராசிரியர் பரோ இச்சொல்லைத் தென் சொல்லென்றே கூறுவார் எனவும் குறிக்கிறது.
அடுத்து மகுடைக்கும் கோவிடு 19 (COVID-19) என்பதற்கும் என்ன தொடர்பு அல்லது வேறுபாடு என எண்ணுகின்றனர். Corona Virus Disease 2019 என்பதன் சுருக்கமாகவும் 2019இல் ஏற்பட்டது என்பதைக் குறிக்கவும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இத்தகைய இடங்களில் நாம் மகுடைத் தொற்றி 19 எனக் குறிப்பிட்டால் போதும்.
ஆனால் சிலர் முள்மூடி/முள்முடிக் காய்ச்சல் என்கின்றனர். மேலேவிளக்கியதன் அடிப்படையில் இவை தவறு என அறியலாம்.
சிலர் வைரசு(virus) என்பதைக் கடுநோய் எனக் குறிக்கின்றனர். உரிச்சொல்லாகவும் வரும் ‘கடு’ என்பதற்குக் கடுமை, வலி உண்டாதல், நஞ்சு முதலான பல பொருள்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் இவ்வாறு குறிப்பதாகவும் கூறி முள்மூடிக் கடுநோய் என்கின்றனர். வைரசு என்பதை நோய் நுண்மி என்பதன் சுருக்கமாக நோய்மி என்பதே சரியானதாக இருக்கும். மேலும் முதலில் சொன்னதுபோல் முள்மூடிக் கடுநோய் என்றால் முள் மூடியால் வந்த கடுநோய் எனப் பொருளாகும். இதேபோல் மகுடக்கடு என்பதும் பொருந்தி வராது.
சிபிச்சக்கரவர்த்தி என்பவர், “சிலவிடங்களில் பெயர்களுக்கான மதிப்பை வழங்க வேண்டும். மகுடக்கடு போன்ற பெயர்கள், இருக்கிறதிலே இது தான் கடுமையானது என்று பொருள் தரக்கூடும். ஆனால், அப்படி இருக்க தேவையில்லையே. ஆனால், அதன் மூலப்பெயரான கொரோனா அதன் அடையாளமாகிவிட்டது. எத்தனையோ கிருமிகளில் இருந்து இதை வேறுபடுத்திக்காட்ட இதன் பெயர் ஒன்றே போதுமானது” என்கிறார். கடு என்பது குறித்த கருத்து சரிதான். அதற்காக அயற்பெயரையே பயன்படுத்த வேண்டும் என்பது சரியாகாது. நம் மொழியில் சொன்னால்தான் அதன் கடுமை புரியும்.
கரு, கருமம் அடிப்படையில் காரியம் உருவாகி அதில் இருந்து கிரியம் > கிரியை > கிருமி என்னும் சொல் உருவாகி இருக்கலாம். முருகேசன் மருதாசலம் கேரளாவில் வழங்கும் பணிய மொழியில் இரி என்றால் கிருமி. இச்சொல்லே கிருமியாக மாறியிருக்கும் என்கிறார். இம்மொழி பேசுநர் உதகமண்டலத்திலும் வாழ்கின்றனர். இருப்பினும் நோய்நுண்மியான இதனை நோய்மி எனலாம்.
சொல்லாய்வு தொடர்பான முகநூல் குழுக்களில் பேரா. செ.இரா.செல்வக்குமார், பொறி. மணி.மணிவண்ணன், செய்(நாடார்) முதலான பலரும் தத்தம் கருத்துகளைக் குறிப்பிட்டுக் கொரானாவிற்கான சொற்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து. செயபாண்டியன் கோட்டாளம், “எத்தனைத் ‘தமிழார்வலர்’ இருக்கின்றனரோ அத்தனைப் பெயர்கள் கொண்ட கரோனா வைரசு இறைவனுக்கு நிகரானது. வாழ்க!” என்கிறார். எனினும் பல்வேறு பெயர்கள் இருந்தால், படிப்பவர்கள் வெவ்வேறாகக் கருதிக் குழப்பம்தான் ஏற்படும். சுருக்கமாகவும் தவறான புரிதலுக்கு இடமில்லாததாகவும் மூலச்சொல்லிற்கு ஏற்றதாகவும் சொல் ஒன்றையே நாம் பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் நான் COVID = மகுடை(த்தொற்றி) என்பதைச் சுருக்கமான ஏற்ற சொல்லாகக் கருதுகிறேன்.
சார்சு கொரானா, மெர்சு கொரானா, நாவல் கொரனா என்றெல்லாம் சொல்கிறார்களே! அவற்றைப் பார்ப்போம்.
சீனாவில் 2002 இல் வெங்கடுமை மூச்சுநோய்க் குறி (severe acute respiratory syndrome) கண்டறியப்பட்டது. இதனால் ஏற்பட்ட மகுடைத் தொற்றுக்கு இதன் பெயரையே சூட்டினர். இதன் தலைப்பெழுத்துச்சொல்தான் சார்சு(SARS) என்பது. தமிழில் நாம், சுருக்கமாக வெம்மூ மகுடை எனலாம். 2002இல் 37 நாடுகளில் 8273 பேர் பாதிப்பிற்குள்ளாகி 775 பேர் மடிந்துள்ளனர்.
மத்தியக்கிழக்கு மூச்சுநோய்க் குறி மகுடை நோய்மி (Middle East Respiratory Syndrome Corona virus) என்பதன் ஆங்கிலப்பெயரின் தலைப்பெழுத்துச் சொல்லே மெர்சு (MERS) என்பது. உலக நல்வாழ்வு அமைப்பு (WHO) இதனால் 1638பேர் பாதிப்புற்று 587பேர் இறந்ததாக் குறிப்பிடுகிறது. முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தல் எனப் பல ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது குறிப்பிட்டுள்ளனர். [யமீல் சக்கி (Jamil Zaki) உடன் பலர் 2012, பெரியாசுலோவு(Pereyaslov) உடன் பலர் 2013. பியாலெக்கு(Bialek) உடன் பலர் 2014, அசார்(Azhar) உடன் பலர் 2014 ].
செளதி உயிரறிவியல் இதழ் (Saudi Journal of Biological Sciences) சூலை 2016 முதலான இதழ்களிலும், நோய் கட்டுப்பாடு தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) முதலான அமைப்புகளின் அறிக்கைகளிலும் (2014) பன்னாட்டுப் பொதுநலவாழ்வுக் களஞ்சியம் முதலான தொகுப்பு மலர்களிலும் இவை தொடர்பான கட்டுரைகளையும் செய்திகளையும் காணலாம். இவற்றில் உள்ள கருத்துகள் செவிடன் காதில் ஊதிய சங்குகளாகப் போனவற்றை விளக்கினால் கட்டுரை திசைமாறும்.
2002 இல் வந்த மகுடையைப் புதிய தொற்று என்றுதான் சொன்னார்கள். எனினும் அதற்குப் பெயர் சூட்டியதாலும் இப்போதைய மகுடையின் கொடுங்கடுமைத் தீவிரத்தாலும் இதனைப் புதிய மகுடை நோய்மி என்கின்றனர்.
மகுடையைத் திடீர்ப் பெருக்க (outbreak) நோய் எனலாம். இது கொள்ளை நோயா (epidemic)? என்றால் இத்தொற்று நோய், அதற்கும் மேலான தீங்கானது. ஒட்டுமொத்தமாகத் திருடி வாரிச்சுருட்டிக் கொண்டு செல்வதைக் கொள்ளை(யடித்தல்) என்கிறோம். அதுபோல் உயிர்களைப் பெருவாரியாகக் கொண்டுசெல்லும் நோயைக் கொள்ளைநோய் என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு, அல்லது கண்டம், அல்லது உலகம் முழுவதும் பாதிப்பிற்குள்ளாக்கி உயிர்களைக் கொல்லும் நோயைப் பெரும்பரவல் நோய் என்கின்றர். இவ்வாறு சொல்வதை விட அகண்ட பரப்பில் ஏற்படும் தொற்றுநோய் என்பதால் அகல் பரப்புத் தொற்றி எனலாம். பெரும்பரப்பு என்பது பேரளவிலான பரப்பைக் குறிப்பது. அகல் பரப்பு என்பது முழுமையான பரப்பைக் குறிப்பது.
மகுடை(கரோனா) நோய் பற்றிய சொற்களை அறிந்ததன் மூலம் அந்நோய் பற்றிய விளக்கங்களையும் அறிந்துள்ளோம். இவை தொடர்பான என்.95 கவசம், சமூக விலகல் முதலான பிற சொற்களை அடுத்துத் தனியாகப் பார்ப்போம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 87
Leave a Reply