(தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று-தொடர்ச்சி)

அன்பர் குருநாதன் சிவராமன் எழுதுகிறார்…’கம்பிக்குள் வெளிச்சங்கள்

வசந்தத்தின் இடிமுழக்கம்” எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மரணத் தண்டனை வரை சென்றவர் தோழர் தியாகு. காங்கிரசு, நக்குசல் இயக்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) எனப் பல அரசியல் தளங்களில் பயணித்தவர். தனது அரசியல் பாதையைத் தன்னாய்வு செய்து கொள்வதிலும், படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதிலும் சிறிதும் தயக்கம் கொள்ளாதவர் என்பது அவரது எழுத்துகளில் புரிகிறது. மார்க்குசியக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். தற்போது தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டக் களத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார்.

அவரது சிறை அனுபவங்களைத் தொகுத்து வெளியான ‘சுவருக்குள் சித்திரங்கள்‘ (வெளியீடு: விசயா பதிப்பகம்) நூலை நான்கு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். மரணத் தண்டனை பெறுதல், நீதிமன்றப் புறக்கணிப்பு, சிறைவாசிகளின் உரிமைக்கான போராட்டம், உடன் தோழர்களுடனான அரசியல் விவாதங்கள் ஆகியவற்றைத் தொகுத்திருப்பார். அதன் தொடர்ச்சியாகவே அவரது “கம்பிக்குள் வெளிச்சங்கள்” இருக்கும் என்கிற காரணத்தினாலும், அதிக பக்கங்கள் கொண்ட நூல் என்பதினாலும் “கம்பிக்குள் வெளிச்சங்கள்” நூல் சில காலம் என்னிடம் கிடப்பில் இருந்தது.

தற்போது மகுடை(கொரோனா) தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கினால் புத்தகம் வாசிக்க நேரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் “கம்பிக்குள் வெளிச்சங்கள்” (வெளியீடு: விசயா பதிப்பகம்) நூலை வாசிக்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 600 பக்கங்கள் கொண்ட நூலை வாசித்து முடிக்க இரு வாரங்களாவது ஆகி விடும் என எண்ணினேன். ஆனால் தோழர் தியாகுவின் மிகவும் எளிமையான எழுத்துநடை நமது வாசிப்புத் திறனை அதிகமாக்கி விடுகிறது. பணிகளுக்கு நடுவிலும் ஒரு வாரத்திற்குள் இந்த நூலைப் படித்து முடித்து விட்டேன்.

அழித்தொழிப்பும் சிறைப்படுதலும்:

எப்பப் பார்த்தாலும் அழித்தொழிப்பு பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு (தியாகு) அதற்கான காலம் வந்துவிட்டது. உழைக்கும் மக்களைக் கொடுமைப்படுத்தும் வருக்கப் பகைவர்களான சாதி ஆதிக்கப் பண்ணையார்கள்தான் இலக்கு. முதல் அழித்தொழிப்பு முயற்சியில் ஈடுபட்டுப் பின்னர்த் தலைமறைவு வாழ்க்கை – மேலும் சில தோழர்களுடன் இணைந்து அடுத்த அழித்தொழிப்பு நிகழ்விற்கான திட்டமிடுதல் – நக்குசல்களின் முழக்கத்தை எழுப்புதல் – வயல், காடுகளில் தப்பியோட்டம் – பொதுமக்களிடம் அகப்பட்டு அடிவாங்குதல் – பின்னர்ச் சிறைப்படுதல் இப்படித்தான் நூல் ஆரம்பமாகிறது. ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சி போல நகர்கிறது.

அரசியல் விவாதங்கள்:

சிறைப்படுவதற்கு முன்னால் மாணவர் காங்கிரசில் பயணித்த பட்டறிவுகளைப் பகிர்ந்திருக்கிறார் தோழர் தியாகு. அதிலும் குறிப்பாக அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினராக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் தோழர் தியாகு நடத்திய விவாதம் மிகவும் முக்கியமானது. தற்போதைய காங்கிரசு நிலைக்கும் இந்த விவாதம் பொருந்தும். மேலும் மார்க்குசிசுட்டுக் கட்சி மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் ஏ.பி (ஏ.பாலசுப்ரமணியம்) அவர்களிடம் “சீனப் பாதை – இந்தியப் பாதை” குறித்து விவாதித்ததும் இந்த நூலின் முக்கியப் படிப்பினை. 1974இல் போராட்டக் கைதியாகச் சிறை சென்ற மார்க்சிசுட்டு தோழர் மணியரசனுடன் (தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்) “இந்தியப் புரட்சியின் பாதை எது? சீனப் பாதையா? அல்லது இரசியப் பாதையா?” என விவாதிக்கிறார்கள் தோழர்கள் தியாகுவும், இலெனினும். மேலும் தேசிய இனங்களின் தன் வரையறை(சுய நிர்ணய) உரிமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

மார்க்குசின் மூலதனம் மொழிபெயர்ப்பு:

“மார்க்குசு என்னும் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் அவரின் பின்னால் இருக்கும் நண்பர் எங்கெல்சும் நினைவுபடுத்தப்படுவார்” என்று தோழர் தியாகு அடிக்கடி சொல்லுவார். அதே போலத் தோழர் தியாகுவின் நூல்களை வாசிக்கும் போது அவரோடு சிறையில் இருந்த தோழர் இலெனினும் கூடவே பயணிப்பதைக் காண முடியும். அப்படி ஒரு நெருக்கமான தோழமை அவர்கள் இருவருக்கும்..

மார்க்குசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் தோழர்கள் தியாகுவும், இலெனினும். சிறைவாழ்வைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாக காரல் மார்க்குசின் மூலதனம் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்குகிறார்கள். தோழர் தியாகுவின் ஆங்கில அறிவு மொழிபெயர்ப்பிற்கு மிகவும் உதவுகிறது. ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினாலும் பின்னர் பல தோழர்கள் அளித்த நம்பிக்கையின் காரணமாக மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிக்கிறார் தோழர் தியாகு. 1867இல் செருமன் மொழியில் வெளியான மூலதனத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1975 இல் திருச்சி மத்தியச் சிறையில் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. சிறைக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பலர் சிறுசிறு உதவிகள் செய்கிறார்கள்.

செய்தித்தாள் வாசிப்பது, சக சிறைவாசிகளுக்குத் தமிழ், ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பது, சிறைவாசிகளுக்கு மேல்முறையீடு, கருணை மனு, கடிதம் எழுதுவதில் உதவுவது என மிகவும் பயனுள்ள வாழ்வைச் சிறைக்குள் வாழ்ந்திருக்கிறார் தோழர் தியாகு.

“கம்பிக்குள் சித்திரங்கள்” நூலில் மூன்று சிறைவாசிகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

சந்துரு என்கிற சந்திரன்:

மிகவும் ஏழ்மைச்  சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சந்துரு கோபத்தின் காரணமாக ஒரு கொலையைச் செய்து விடுகிறார். வேறு இருவர் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் தானே முன்வந்து கைதாகிறார். பிறர்க்குத் துன்பம் இழைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. தோழர் தியாகுவின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

மனிதாபிமானத்தைப் போலவே போர்க்குணமும் அதிகம் இருப்பதால் தோழர்களிடம் விரைவில் நெருக்கமாகி விடுகிறார். சந்துருவையும், இன்னொரு சிறைவாசியான ஆறுமுகத்தையும் அமர வைத்துச் சிறைக் கொட்டடியில் மார்க்குசிய வகுப்பெடுக்கிறார் தோழர் தியாகு. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் எனப் பாடம் நகர்கிறது, நாமும் மாணவர்களாகி விடுகிறோம்.

பிறப்பால் கிறித்தவர் இல்லை என்றாலும் இயேசுவின் மீது அப்படி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர் சந்துரு. அதனால் அடிக்கடி “ஆத்திகம் – நாத்திகம்” விவாதமும் எழுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் சந்துரு விடுவிக்கப்படுகிறார். அவரைத் தன் வளர்ப்பு மகனாக அறிவித்துத் தன் சகோதரியின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார் தோழர் இலெனின். சிறைக்குள்ளும் இப்படியான உறவுகள் உருவாகின்றன.

வீரையன்:

சாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் கொண்டவர் வீரையன். போதிய ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்ய முடியாத நிலையில், காவல் துறை மிகவும் தந்திரமாக அவரை வைத்தே அவரது கைரேகையைக் குற்றம் நடந்த இடத்திலிருந்த ஒரு பொருளில் படிய வைத்து விடுகிறது. அந்தக் கைரேகையே பின்னாளில் அவரது கழுத்தில் சுருக்குக் கயிறு ஆகி விடுகிறது. அவரின் குற்றத்திற்கு அவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை சரிதான் என்று முதலில் நமக்குத் தோன்றுகிறது. பின்னாளில் அவரது மனமாற்றத்தைக் காணும்போது அவரை ஆயுள் தண்டனையோடு விடுவித்திருக்கலாம் என எண்ண வைக்கிறது. “சிறை என்பது குற்றவாளியைத் தண்டிக்கும் இடம் அல்ல, அவனுக்குள் இருக்கும் மனிதனை வெளிக் கொணரும் இடம்” என்பதற்கு வீரையன் நல்ல எடுத்துக்காட்டு. தனது இறுதி நாட்களில் தோழர்களிடம் வீரையன் சொன்னது: “இங்க இப்பொழுது உங்களுடன் பழகியதற்கு முன்னாடியே பழகியிருந்தேன் என்றால் என் வாழ்க்கைப் பாதையே மாறிப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்”.

தனது இறுதி நாட்களைப் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதற்காக மூலதனம் நூல் மொழிபெயர்ப்பில் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறார் தனது இறுதிநாள் வரை. தனது இறுதிப் பத்து நாட்களைத் தோழர்களிடம் ஒப்படைத்து விடுகிறார். வீரையனிடம் பல இடங்களில் முரண்பட்டாலும் அவருக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள் தோழர்கள்.

வீரையன் தனது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு எழுதும் கடிதங்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்துபவை. வீரையன் இந்த உலகிலிருந்து நிரந்தர விடுதலை ஆகிறார்.

பூ. கருப்பையா:

சிறையில் யாருடனும் பேசாமல், தனித்து இருப்பவர் பூ. கருப்பையா. சில நாட்கள் பழக்கத்திற்குப் பின்னர் தோழர்களிடம் தனது வழக்கு பற்றிச் சொல்கிறார். கொலை வழக்கு ஒன்றில் எந்த தொடர்புமில்லாத அப்பாவி கருப்பையாவை சிலர் சூழ்ச்சி செய்து சிக்க வைக்கிறார்கள். வெளியூர்க்காரன், வேறு சாதிக்காரன் நம்ம ஊரில் நல்லா முன்னேறி வருகிறானே என்கிற பொறாமைதான் காரணம். குற்றவாளியை முடிவு செய்து விட்டு அதற்கு ஏற்ப சான்றர்களைத் தயார் செய்யும் கொடுமையைச் செய்கிறது காவல்துறை. சான்றர்களும் சிறிதும் மனச்சான்று இன்றிக் கருப்பையாவின் மீது குற்றஞ்சாட்டத் துணை போகிறார்கள். நீதிபதிகளும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்காமல் பொதுப் புத்தியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

கருணை மனு கொடுக்கச் சொல்லி தோழர்கள் வலியுறுத்துகிறார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் கருணை மனு இருக்க வேண்டும் என்பதால் அதனை மறுக்கிறார் கருப்பையா. பின்னர்த் தனது பின்னணி, வெளியூரில் தான் நடத்தப்பட்ட விதம், தன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தோழர்கள் உதவியோடு ஒரு கடிதமாக எழுதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறார். ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 15 வருடங்கள் சிறைவாழ்விற்குப் பின்னர் வீடு திரும்புகிறார் அப்பாவி கருப்பையா.

மிசாக் கொடுமை:

1975இல் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசர நிலை (emergency), மிசாக் கைதுகள், மிசாக் கைதிகள் சிறையில் சந்தித்த கொடுமைகள் பற்றி நூலின் இறுதி நூறு பக்கங்களில் விளக்கியிருக்கிறார் தோழர் தியாகு. மிசா பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூலே போதுமானது. குறிப்பாகச் சென்னை முன்னாள் மாநகரத்தலைவரும் அவசரநிலையின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சிட்டிபாபு சிறையில் சந்தித்த கொடூரமான அடக்குமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.கருணாநிதி, அவரது மகன் தாலினைச் சிறையில் சந்தித்ததும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, கி.வீரமணி போன்ற முன்னணித் தலைவர்கள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இவை போக “மெய்வழிச்சாலை அனந்தர்கள்” என்னும் ஆன்மிகக் குழுவினர் பற்றிய அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

சிறை வாழ்வு பற்றி, சிறைக்குள் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் “கம்பிக்குள் வெளிச்சங்கள்”. 

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 87