தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ
(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி)
திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ
நீதிபதியிடம் ஒரு கேள்வி
இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்?
தாமதம் ஏன்?
வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது. மே 30ஆம் நாள்தான் முறையீடு தரப்பட்டது. இந்தப் பத்து நாள் தாமதத்திற்கு என்ன காரணம்?
வஞ்சிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கருப்பையா தப்படித்து அறிவிப்புச் செய்துள்ளார். ஆனால் அதற்காக, சுப்பிரமணியனும் மற்றவர்களும் எடுத்த நடவடிக்கை அவரை மிரளச் செய்து விட்டது. மறுநாள் அவர் இலால்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் காவல்துறைக்குத் தெரியப்படுத்தவில்லை. ஊர் திரும்ப அஞ்சி கிளியனூரில் உள்ள மாமனார் வீட்டுக்குப் போய்விட்டார். ஒரு வாரம் கழித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த செல்வராசு, செல்வம், கொடியரசு, சக்திவேல் ஆகியோர் அவரை அணுகிக் காவல்துறையில் முறையீடு செய்யும்படி அறிவுரை கூறிய போதும் அவர் மறுத்து விட்டார். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய மூன்று வழக்குரைஞர்கள் அங்கு வந்து அவரைப் பார்த்து, முறையீடு செய்வதற்கு இணங்கச் செய்துள்ளனர். அவரது முறையீட்டை செபசுட் டியன் எழுதி உள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அம்முறையீடு தரப்பட்டது.
தைரியமூட்டிய விடுதலைச் சிறுத்தைகள்
தாமதத்திற்கான இந்தக் காரணம் இரண்டாம் வழக்கிற்கும் பொருந்தும். சூடு போடப்பட்டு மலம் தின்ன வைக்கப்பட்டதில் முருகேசனும் இராமசாமியும் அச்சத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போய் அவரவர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லை. காவல் நிலையத்துக்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தாய்மார்கள் அவர்களுக்கு மருத்துவம் செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சந்தித்துத் தைரியமூட்டினர். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய வழக்குரைஞர்கள் அவர்களை வந்து பார்த்து நடந்தவற்றைக் கேட்டனர். அவர்களை செபஸ்டியன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று முறையீடு ஒன்றை அணியப்படுத்தினர். கருப்பையாவோடு கூட அவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையீடு தந்தனர்.
கருப்பையா, முருகேசன், இராமசாமி ஆகிய மூவரின் முறையீடு குறித்தும் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் புலனாய்வு மேற்கொண்டார்.
சரிநிகரான தனிமனிதர்களா?
முறையீடு செய்வதில் ஏற்பட்ட 10 நாள் தாமதத்திற்கான இந்த விளக்கத்தை நீதிபதி இராமமூர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகத்தில் சரிநிகரான தனிமனிதர்களிடையே ஒரு தாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றிருக்குமானால், அது குறித்து முறையீடு செய்வதில் தாமதம் ஏற்படத் தேவையில்லை. அப்படித் தாமதம் ஏற்படுமானால் அது வேறுவிதமான ஐயங்களுக்கு இட்டுச் சென்று வழக்கையே பாதித்து விடக் கூடும்.
ஆனால் இங்கு தாக்கியவர்கள் ஆதிக்கச் சாதியினர், தாக்கப்பட்டவர்கள் அடிமைச் சாதியினர். அவர்கள் தீண்டாதவர்கள், இவர்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் நிலமுடையவர்கள், இவர்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்து பிழைத்துக் கிடப்பவர்கள். இந்தப் பின்னணியில், தாக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் முறையீடு செய்திருந்தால்தான் வியப்படைய வேண்டும். தங்களுக்காகப் போராடுகிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழக்குரைஞர்களும் தேடிவந்து பார்த்துத் தெளிவும் துணிவும் ஊட்டிய பிறகே அவர்களால் நடந்ததை வெளியில் சொல்லவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யவும் முடிந்தது என்பது முற்றிலும் நம்பத்தக்கதாகவே உள்ளது.
ஆனால் நீதிபதி இராமமூர்த்திக்கோ இது நம்பும்படியானதாக இல்லை. ஏன்? அவர் தன் தீர்ப்பில் எழுதுகிறார்:
“The careful perusal of the evidence of witnesses would show that there was no discrimination prevails in the village. It is also not the case of the prosecution that the village people have been practising untouchability against the SC and ST people in that village.” (தீர்ப்பின் பக்கம் 73).
சாதியை ஒழித்த எழுதுகோல்
இதிலுள்ள ஆங்கில இலக்கணப் பிழையை மன்னித்து விட்டு (தமிழ் தெரிந்த நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பெழுத வேண்டுமா? என்பது தனிக்கேள்வி) கருத்துப் பிழையை மட்டும் கவனத்தில் கொள்வோம். திண்ணியம் ஊரில் சாதிப் பாகுபாடு ஏதும் இல்லவே இல்லையாம்! இந்த வழக்கில் சாட்சிகள் அளித்துள்ள சாட்சியத்தைக் கவனமாகப் படித்து நீதிபதி இதனைக் கண்டுபிடித்தாராம்! அந்தச் சிற்றூரில் அட்டவணைச் சாதியினர்/அட்டவணைப் பழங் குடியினருக்கு எதிராகத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசு தரப்பும் சொல்லவில்லையாம்!
திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றச் சமுதாயத்தினரோடு சமமாக நடத்தப்படுகிறார்களாம்! கூட்டாக வாழ்கிறார்களாம் (equal treatment and joint living). தீண்டாமை இம்மியளவும் இல்லவே இல்லையாம்!
நீதிபதி இராமமூர்த்தியின் எழுதுகோல் ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் திண்ணியத்தில் சாதியை ஒழித்து விட்டது! அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சாதியொழிப்பு வீரர் விருது என்று யாராவது தருவதாய் இருந்தால் அவருக்குத்தான் தர வேண்டும்.
திண்ணியத்தில் தீண்டாமை கிடையாது, சாதிப் பாகுபாடு கிடையாது என்பதற்கு நீதிபதி இராமமூர்த்தி காட்டும் காரணங்கள் என்னவாம்? ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெறும் போது சாதி இந்துக்களில் ஒருவரும் தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவரும் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தாக்கப்பட்டவரான கருப்பையா “என்னிடம் வாங்கிய இரண்டாயிரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் காப்புக் கட்டிக் கொள்ள மாட்டேன்” என்று கூறியதாக சாட்சியம் உள்ளது. இதை வைத்து கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் சமத்துவம், சம மரியாதை நிலவுவதாக முடிவு செய்கிறார் நீதிபதி.
(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல் 106
Leave a Reply