தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி)
உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்
2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான உரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி அறை ஒன்றில் போய்த் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டுக் கொண்டார். பாரதிய சனதா கட்சித் தலைவர் பண்டாரு தத்துரேயாவின் தூண்டுதலால் கைப்பாவையான பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அடக்குமுறைக்கு எதிராகத்தான் உரோகித் வேமுலாவும் தோழர்களும் போராடினார்கள். ஐதராபாத்து பல்கலைக்கழக ஆட்சி உரோகித்து உள்ளிட்ட ஐந்து மாணவர் தலைவர்களை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போரட்டப் பின்னணியில்தான் உரோகித்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலையல்ல, படுகொலை என்று உரோகித்தின் மாணவத் தோழர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
உரோகித்து இளம் மார்க்குசிய ஒடுங்கியவர்(தலித்து)களில் ஒருவர், இந்துத்துவக் காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் திறமான அரசியல் திட்டம் வகுத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருந்தவர்; அயரா உழைப்பாற்றலும் கொள்கைவழி அரசியல் தெளிவும், மாணவ ஒடுங்கிய (தலித்து) தலைவர்களிடையே திறந்த மனமும் கொண்டவராகத் திகழ்ந்தவர் என்று அவரின் தோழர்கள் சொல்கின்றார்கள். பலகலைக்கழக ஆட்சியால் உரோகித்தும் மற்றவர்களும் குறி வைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் முசுலிம்களுக்கு எதிரான பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் அம்பலமாக்கிப் பலவழிகளிலும் இயக்கம் நடத்திக் கொண்டிருந்தார்கள், பல்கலை வளாகத்தில் ஒடுங்கியவர்(தலித்து)களையும் முசுலிம்களையும் ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டார்கள். இந்துத்துவ பாசிசத்துக்கு எதிரான ஒடுங்கிய(தலித்து) மாணவர்களின் போராட்டம்தான் உரோகித்துக்கும் மற்றவர்களுக்கும் எதிரான அடக்குமுறைக்கு வழிகோலியது.
உரோகித்தின் தற்கொலை முடிவை நம்புவது கடினமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள் சொல்கின்றார்கள். ஒடுங்கிய(தலித்து) மாணவர் தலைவர்களுக்கு எதிரான பொய் வழக்கும் அடக்குமுறையும் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்ற வருத்தம் உரோகித்து வேமுலாவுக்கு இருந்தது என்றும், தன்னுயிர் தந்தாவது மக்களின் உளச்சான்றினைத் தட்டியெழுப்ப அவர் எண்ணியிருக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் இழிவுக்காளாகும் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது புதிய செய்தியன்று என்றாலும் உரோகித்தைப் போன்ற ஒரு தலைவர் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சிக்குரியதே என்கிறார்கள்.
உரோகித்தின் மாணவத் தோழர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்:
“உரோகித்து போய் விட்டார் என்ற உண்மையை மனங்கொள்ள முடியவில்லை. எதுவும் சொல்ல இயலவில்லை. மாணவர் போராட்டம் தொடர்கிறது. ஐதரபாத்து பல்கலை மாணவர் போராட்டத்துக்கு ஆதரவும் தோழமையும் காட்டுவோம்.”
“பல்கலைவளாகங்களில் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலைக்கு இறுதித் தீர்வு சாதிப் பாகுபாட்டினை ஒழிப்பதுதான். இதற்கிடையில் தீண்டாமையால் இழிவுக்கு ஆளான மாணவர்கள் தங்கள் ஒடுங்கிய (தலித்து) ஓர்மையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒடுங்கியர் (தலித்து)களாகப் பெருமையுடன் போராட முன்வர வேண்டும். இதோ என் அருமை நண்பர், இனிய தோழர், நாடெங்கும் புகழ் பெற்ற மாணவர் தலைவர், பல வெற்றிகளை ஈட்டியவர், சுடர்மிகு அறிவாளர், ஒடுங்கிய (தலித்து) மார்க்குசியர். தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு விட்டார். தோழர் உரோகித்து வேமுலா! உங்கள் மறைவு வீண் போகவிடோம்!”
[உரோகித்து வேமுலா ‘நாட்குறிப்புகள்’ நாளைய தாழி மடலில்]
தோழர் தியாகு,
தாழி மடல் 111
Leave a Reply