(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி) 

சாதி என்பது வதந்தி அல்ல! – ரோகித்து வேமுலா

ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா  2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது.

257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட  யாகூபு மேமனுக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் செயற்பாட்டாளருக்கும் இடையே எழுந்த சண்டையைத் தொடர்ந்து உரோகித்து மீதும் அம்பேத்துகர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த  ஐந்து மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது; 2015 சூலையில் மாதந்தோறும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உரூ.25,000 நிறுத்தப்பட்டதுடன் கல்லூரியின் தங்கு விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.  அவர் தூக்கிட்டுக் கொண்டதே ‘உமா அண்ணா’வின் அறையில்தான்! 

உரோகித்தின் தற்கொலையைத் தூண்டியதாகப்  பாரதிய சனதா கட்சியின்  செகந்தராபாத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான   பி. தத்தாத்திரேயா மீதும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவு மீதும் வழக்கு பதியப்பட்டது.

உரோகித்து வேமுலாவின் முகநூல் இடுகைகளைச் “சாதி என்பது வதந்தி அல்ல” என்ற தலைப்பில் அவரது நாட்குறிப்பாக நிக்கிலியா என்றி தொகுத்துள்ளார். அதிலிருந்து சில வரிகள்:

2015 செட்டம்பர் 3:

ஒரு நாள்.

ஒரு நாள்,

நான் ஏன் ஆவேசமாக இருந்தேன்

என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

நான் ஏன் சமூக நலன்களுக்கு மட்டும்

சேவை செய்யவில்லை  என்று புரிந்து கொள்வீர்கள்.

ஒரு நாள்,

நான் ஏன் வருத்தம் தெரிவித்தேன்

என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

அந்த நாளில்,

வேலிகளுக்கு அப்பால் கண்ணிகள்

இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள்.   

ஒரு நாள்,

வரலாற்றில் என்னை மோசமாக,

மஞ்சள் பக்கங்களில் காண்பீர்கள்.

நான் அறிவாளியாக இருந்திருக்கலாம்

என்று நினைப்பீர்கள். ஆனால்

அந்த நாள் இரவு என்னை

நினைவில் கொள்வீர்கள்,

என்னை உணர்வீர்கள்,

மூச்சில் ஒரு புன்னகையை வெளிப்படுத்துவீர்கள்.

அந்த நாளில் நான் உயிர்த்தெழுவேன்.

2014 செட்டம்பர் 7:

[தலைப்பில்லை.]

கடவுள் எனப்பட்டது கல்லாயிற்று,

கல்லெனப்பட்டது கடவுளாயிற்று.

கல்வி வளாகத்தில் அரசியல் என்பது

வாக்குக் கணக்குகளாகச் சுருங்குகிறது

சவர்ணர்கள் வாமனனைத் தழுவிக் கொண்டார்கள்

தேசியவாதிகள் வண்டி வரிசை கொண்டுவந்தார்கள்

‘கம்யூனிசுட்டுகள்’ வழி செய்து கொண்டார்கள்

தீவிரர்கள் நேரந்தவறித் தூங்கி விட்டார்கள்

சமயச் சார்பிலார் ஒதுக்கிடம் தேடினார்கள்

அறிவாளர்கள் இதெல்லாம் தேவையில்லை என்று மௌனமானார்கள்.

ஒடுங்கியர்(தலித்து)கள் இந்தப் போரில் உடைந்து கிடந்தார்கள்

இது அவர்களின் ‘சொந்த’ச் சிக்கல் என்ற முத்திரையோடு

எம்முடைய குரல்கள் எண்ணிக்கையில் குறைவே எனலாம்

எமது தெளிவுரை வீண் எனலாம்

எமது எதிர்ப்பு உம் கலாசார நடையின்

பெருவலிமையின் அடியில்

மடிந்து போகலாம்

ஆனால் தோழர்களே, குறித்துக் கொள்ளுங்கள்

வரலாற்றை அழிக்க முடியாது 

உங்கள் மௌனம் நினைக்கப்படும்

உங்கள் வெறுப்பு மன்னிக்கப்படாது

நீங்கள் வாக்குக் கேட்டு வரும் போது

உங்களோடு கைகுலுக்க மறுப்போம்

நீங்கள் சிரித்தால் பதிலுக்குச் சிரிக்க மாட்டோம்

அந்த நாளில், எமது ஆதரவுக்காக

நீங்கள் அலையும் போது

உங்களைக் கடந்து போவோம்,

உங்கள் கருணைச் சொற்களால்

அசையாமல், தொடப்படாமல்

அந்த நாளில்,

நம்பிக்கையும் இரண்டகமும் விளையாடுவோம்

உம்மைப் போலவே!

தோழர்களே, நினைவிருக்கட்டும்!

2013 ஆகட்டு 3:

தேசச் சரித்துருலு மொழிபெயர்ப்பு:

எந்த நாட்டின் வரலாற்றைப் பார்க்கிறாய்?

பெருமைப்பட என்ன காரணம் உள்ளது?

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

மற்றவர்களைச் சுரண்டுதலே

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதே

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

போர்களில் சிந்திய குருதியில் நனைந்து

திகிலே அதன் முதல்

பேய்க் கூட்டங்கள் அதன் விலை

மாந்தக் குலத்தின் வரலாறு முழுக்க

வக்கற்றவரின் குருதி குடிப்பதே

வலுத்தவர் இளைத்தவரை அடிமைகளாக்கி

கொலைகாரர் புவியின் உரிமையாளராகி

வரலாற்றில் புகழேணி ஏறினர்

புவியில் போர்க் களமாகாத இடம் காண முடியாது

இறந்த காலம் முழுக்கவே இரத்தத்தால்

கண்ணீரால் ஈரமானதே

அழிந்த குடும்பங்கள்

சிதைந்த மக்கள் கூட்டங்கள்

ஆதரவற்றோரின் அழுகைகள்

வரலாற்றில் எதிரொலி

தீநெஞ்சம், தன்னலம்,

குற்ற உடந்தை, அழுக்காறுகள், பூசல்கள்

தந்திரங்கள் மாறுவேடங்களே கருவிகள்

வரலாற்றின் பாதை அமைத்தன

செங்கிசுக்கான், தாமர்லேன்,

நாதிர்சா, கசினி, கோரி,

சிக்கந்தர் – அவர்கள் யார் என்பது பெரிதா?

வைக்கிங்குகள், வெள்ளை ஊனர்கள்,

சிதியர்கள், பார்சிகள்,

பிண்டாரிகள், கொள்ளைக் கூட்டம்

காலத்துக்கு வாள்களால் அமைத்த பாலம்

பட்டினியிலும் வெறித்தனத்திலும்

அறியாமையின் இருண்ட காலங்கள்

அறியப்படாத கடைக்கோடியரின் வழியில்

அணிவகுத்த மக்கள் – [எண்ணம்]

ஒவ்வொன்றும் நமது சாதனை என்று,

நாமே புவியின் ஆண்டைகள் என்று

அரசாட்சிகள் கட்டி செயற்கையாகச்

சட்டங்கள் செய்தனர்.

பிறவகைப் படைகள் எழுந்த போது,

அட்டை வீடாகச் சரிந்தனர்.       ,

போரிட்டுக் கொண்ட படைகளிலிருந்து

எழுந்தது வரலாறு

நிலைத்து நீண்டு சென்ற ஏமாற்று

வலுத்தாரின் கொடுங்குற்றங்கள்

செல்வந்தரின் சூழ்ச்சித் திட்டங்கள்

இன்றுங்கூட? இனி விட மாட்டோம்

ஒருவரை ஒருவர் சுரண்டுதல்

ஓரினத்தை வேறினம் சுரண்டுதல்

இந்த அடிப்படையில் சமூகநீதி

இன்றுங்கூட? இனி நடவாது.

சீனத்தில் ரிக்சா இழுப்பவர்

செக்கு நாட்டு சுரங்கத் தொழிலாளி

அயர்லாந்தில் கப்பல் துடைப்பவர்

தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்

ஓடண்டோட்டுகள், சூலுக்கள், நீக்ரோக்கள்,      

அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த வெவ்வேறு இனத்தவர்

ஒரே குரலில் வரலாற்றின் உண்மை இயல்பைக்

கூவிச் சொல்வார்கள்

எந்தப் போர் ஏன் நடந்தது?

எந்த அரசாட்சி எவ்வளவு காலம் நீடித்தது?

தேதிகள், ஆவணங்கள்

இவையல்ல வரலாற்றின் சாறம்

நண்பனே!

இந்த அரசியின் காதல் செய்திகள்

அந்தப் படையெடுப்புக்கான செலவுகள்

சூழ்ச்சித் திட்டங்கள், கணக்குகள்

இவையல்ல வரலாற்றின் சாறம்

நண்பனே!

வரலாற்றின் இருண்ட மூலைகளில்

ஒளிந்துள்ள கதைகள்

இப்போது தேவைப்படுகின்றன

நைல் ஆற்றங்கரை நாகரிகத்தில்

ஒளித்து வைத்தாலும் ஒளியாத உண்மை:

எளிய மனிதன் எப்படி வாழ்ந்தான்?

தாசு மகாலைக் கட்டியதில்

கல் சுமந்த உழைப்பாளர் யார்?

அரசகுலப் படையெடுப்பில்

எளியார் புரிந்த வீரச்செயல்கள் என்ன?

நண்பனே, மன்னரைச் சுமந்த பல்லக்கு அல்ல,

யார் அந்தப் பல்லக்குத் தூக்கிகள்?

தட்சசீலத்தில், பாடலிபுரத்தில்,

மத்தியதரைக் கடலின் கரைகளில்,

அரப்பா மொகஞ்சதாரோவில்

குரோமன்யான் குகை முகப்புகளில்

வரலாற்றின் விடிவெள்ளிக் காலங்களில்

மாந்தக் கதையின் வளர்நிலை என்ன?     

என்ன நாடு? என்ன காலம்?

சாதித்தது என்ன பேருண்மைகள்?

என்ன சிற்பம்? என்ன இலக்கியம்?

என்ன அறிவியல்? என்ன இசை?

எக்கதிர்கள் நோக்கி இந்தத் துறவு?

என்ன கனவு? என்ன வெற்றி?

[ரோகித் வேமுலாவின் ‘சாதி என்பது வதந்தி அல்ல தொகுப்பிலிருந்து]

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 112