11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

அரசுகளுக்கு வேண்டுகோள்.

ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று)  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி நிறுவன இணைவேந்தர் முனைவர் சோதி முருகன் சிறப்புரை ஆற்றினார். உலகத்தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவரும்  சடடக்கதிர் ஆசிரியருமான வி.ஆர.எசு.சம்பத்து, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நேற்றைய தலைவர் முனைவர் பொன்னவைக்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உ.த.ஆ.நிறுவனத்தின் இந்நாள் தலைவர் பொறி.அரசர் அருளாளர் நன்றி நவின்றார்.

தொடக்கத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை வழங்கினார்.

கருத்தரங்க அமர்வுரைகளின் தொகுப்பை முனைவர் முகிலை இராசபாண்டியன் தமிழில் வழங்கினார்; அடுத்து அதனை ஆங்கிலத்தில் முனைவர் வெ.முருகன் வழங்கினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் பின் வரும் இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

1. இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும்  உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2. தமிழ் நிறுவனங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை உரிய காலத்தில் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

பேராளர்களும் தமிழன்பர்களும் அடங்கிய அவையினர் கைகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆதரவு தந்தனர். உடன் முனைவர் பொன்னவைக்கோ இவற்றை வழி மொழிந்தார். இரு தீர்மானங்களும் மாநாட்டு அவையினரால் நிறைவேற்றப்பட்டன.

வரேவற்புரையின் பொழுது மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்த இடச்சிக்கல் வந்த பொழுது தன் வேண்டுகோளை ஏற்று ஆசியவியல் நிறுவன வளாகத்தை அளித்ததுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 11ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் சான் சாமுவேல் அவர்களைப் பாராட்டினார்.

சிறப்புரையின் பொழுது இணைவேந்தர் முனைவர் சோதிமுருகன் இனி நடத்த உள்ள கருத்தரங்கங்கள், மாநாடுகளில் தங்கள் வேல்சு நிறுவனமும் இணைந்து பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

முனைவர் சம்பத்து இம்மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அமைதியாக் கூடி அமர்ந்துள்ள அவையோரே சான்று எனப் பாராட்டினார்.

முனைவர் கிருட்டிணகுமார், முனைவர் தாமோதரன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

மாநாட்டின்பொழுது பறைஇசை, பிற நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகியற்றுடன்  சிலப்பதிகாரம் குறிக்கும் 11வகை ஆடல்கள் குறித்த நாட்டிய நாடகமும் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் நாடடிய நாடகமும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன.

மாநாட்டின் குறிப்பிடத்தகுந்த உலக அருவினையான(சாதனையான) சிறப்பு பேராளர்களின் 64 நூல்கள் வெளியிடப்பட்டமையாகும். நூலாசிரியர்கள் மட்டுமல்லாமல் பிறரும் இந்நிகழ்வை வெகுவாகப்பாராட்டினர்.

சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டதும். நிறைவாக. மாநாட்டின் பொழுது தொண்டாற்றிய சாரணர் இயக்கத்தினருக்கு முனைவர் சான்சாமுவேல் பாராட்டிதழ் வழங்கினார்.