(தோழர்தியாகுஎழுதுகிறார்  147 : வேண்டும்உரோகித்துசட்டம் –  தொடர்ச்சி)

சுசி, கவெ: அரசியல் உயிர்!

இனிய அன்பர்களே!

அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு உரையாற்றியவர் அன்பு நண்பர் சாம்ராசு. தலைவர் மேடையிலோ எதிரில் முன்வரிசையிலோ உட்கார்ந்து கொண்டு தமக்கான புகழுரைகளை மெய்ம்மறந்து கேட்டு மகிழ்ந்து போவதும், அடுத்தடுத்த புகழுரையாளர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சப் போட்டியிடுவதுமான காட்சி தமிழ்நாட்டில் புதிதோ அரிதோ அன்று. இந்தத் தலைவர்களை “மனநோயாளிகள்” என்றுதான் மற்றத் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். ஒருநாளும் அந்த மன நோயாளிகளில் ஒருவனாகி விடக் கூடாது என்ற எச்ச்சரிக்கை உணர்வு எனக்குண்டு.

நற்றுணை மேடையில் என் அரசியல், இலக்கியம், பேச்சு எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். நானும் மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எழுதியதாகச் சொல்லி சிலவற்றைப் படித்துக் காட்டினார்கள். இதையெல்லாம் நாம்தான் எழுதினோமா? என்று எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு காரணம்: எழுதி நீண்ட நாளாகி விட்டது. இன்னும் முக்கியமான காரணம்: குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே அப்படி எழுத வரும். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், ஏதோ இடம் பொருள் ஏவலில் உங்களிடமிருந்து இயல்பாக வெளிப்பட்ட சொற்களை வேறொரு சூழலில் செயற்கையாகப் பேச உங்களுக்கு வராது.

சுவருக்குள் சித்திரங்கள்’, ‘கம்பிக்குள் வெளிச்சங்களில்’ அழகு உண்டானால் அது உண்மையின் அழகுதான். அதன் அழகியல் கொள்கை என்பது வாசகருக்காக எழுதுவதுதான்! வாசகரின் கோணத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பார்த்து பழகிய நடைதான்!

நான் தமிழ் நடை பழக எனக்குப் பெரிதும் உதவியவர்களில் ஒருவர் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டுள்ள இரா. கிருட்டிணையா அவர்கள். அவர்தான் ‘மூலதனம்’ தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர். ஏழாண்டு காலம் என் அருகில் அமர்ந்து அந்தப் பணியைச் செய்தளித்தவர்.  அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை: “வாய்க்கு வழங்கும் படி எழுதுங்கள்.” மொழிபெயர்த்ததை வாய்விட்டுப் படித்துக் காதிலே கேளுங்கள்; பிசிறில்லாமல் ஒலித்தால் அதுதான் நல்ல மொழிபெயர்ப்பு! இல்லை, நல்ல எழுத்து!

அவர் சொல்வார்: தியாகு, நீங்கள் எழுத எழுத ஒரு வாசகர் எட்டிப் பார்த்துப் படித்துக் கொண்டே இருப்பதாகக் கற்பனையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது புரியா விட்டால் அவர் உங்கள் கையைப் பிடித்து இழுப்பார், உங்களை மேற்கொண்டு எழுத விட மாட்டார். திருத்தி அவருக்கேற்ப எழுதினால்தான் அவர் உங்களை மேற்கொண்டு எழுத விடுவார்! 

சுவருக்குள் சித்திரங்களும் கம்பிக்குள் வெளிச்சங்களும்தான் தமிழ்நாட்டில் எனக்குப் பரவலாக அறிமுகம் பெற்றுத் தந்தன என்பதை நற்றுணை கலந்துரையாடலில் பலரும் சுட்டிக்காட்டினார்கள். உண்மைதான்! அப்படியில்லாமல் என் அரசியல் பணியால் இந்த அறிமுகம் கிட்டியிருந்தால் அதுதான் எனக்குக் கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும் என இப்போதும் நம்புகிறேன். சுவருக்குள் சித்திரங்கள் தோழர் ஏசிகே அவர்களையும், கம்பிக்குள் வெளிச்சங்கள் தோழர் ஏஎம்கே அவர்களையும் வெகுமக்கள் தளத்தில் பரவலாக அறியச் செய்தன என்றால் அதுதான் மகிழ்ச்சிக்குரியது. என் அரசியல்-கருத்தியல் நிலைப்பாடுகளையும் பொதுத்தளத்தில் பதியச் செய்யக் கிடைத்த வாய்ப்பும் மதிக்கத்தக்கது. எனக்கு எல்லாவற்றையும் விட அதுதான் முதன்மை! என்னை நேசித்தாலும் வெறுத்தாலும் அது என் அரசியலுக்காகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் அணுகுமுறையில் எரிச்சலுற்ற ஒருவர் என்னை “political being” என்று திட்டுவதுண்டு. “Man is a social being, but you are a political being” என்பார். ஆம், social being என்பதை முழுமையாக உணர்ந்து விட்டதால் political being ஆகி விட்டேன். Being என்பதை ‘பிறவி’ என்றோ ‘பிராணி’ என்றோ சொல்வதை விடவும் உயிர் என்றே சொல்லத்தகும். Natural being = இயற்கை உயிர்! Social being = சமூக உயிர் அல்லது குமுக உயிர்! Political being = அரசியல் உயிர்!

நமக்கோர் அரசியல் வாழ்க்கை போதாது, நமக்கு அரசியலே வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் வளர்த்தவர் எங்கள் பேராசிரியர் மருதமுத்து (அக்காலத்தில் இராதாகிருட்டிணன்). எங்கள் கல்லூரிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தவர் எனக்கு அரசியல் ஆசிரியராகிப் போனார். அவர் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் என்று சான் மில்டனைச் சொல்வார். ‘இழந்த சொர்க்கம்’ எழுதிய சான் மில்டன். இதற்கு மில்டனின் அரசியல் துடிப்பைத்தான் காரணமாகச் சொல்வார். அதிலும் விழியிழந்த பின்னும் தன் முடியாட்சிய எதிர்ப்புச் சிந்தனையில் ஊன்றி நின்று காப்பியம் படைத்தவர். ஆகவே இலக்கியமாவது, கலையாவது, எல்லாம் அரசியலுக்காகத்தான்! அரசியல் தனக்காக அல்ல, மக்களுக்காக என்ற தெளிவு மட்டும் சேர்ந்து கொண்டால் போதும்!   

சு.சி., க.வெ. எனும் சிறை எழுத்து ஈர்ப்புப் பெற்றமைக்கு ஒரு காரணம் அது பொது வாசகர் அறியாத ஓர் உலகம் பற்றிப் பேசியது, அந்த உலகத்தின் மனிதர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்தது. அந்த உலகத்திற்கே உரிய மொழியில் பேசியது. நாடு – மதில்களால் சூழப்படாத சிறை; சிறை – மதில்களால் சூழப்பட்ட நாடு என்பார் ஏசிகே. அந்த நாட்டுக்குப் போய் வராதவர்களுக்கு அது பற்றி என்ன சொன்னாலும் அதிசயமாகத்தான் இருக்கும்! ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறை தெரிந்திருக்க வேண்டும். சிறை வாழ்க்கை இல்லாமல் பொது வாழ்க்கை நிறைவு பெறாது. இப்போதுள்ள அரசியல் சூழலில் மக்களுக்காகப் போராட விரும்பினால் சிறையச்சம் கூடாது. நற்றுணை கலந்துரையாடலில் என் ஏற்புரையில் இதைத்தான் சொன்னேன்.

ஆனால் இசை, இலிபி ஆரண்யா, கவின்மலர், சாம்ராசு இவர்களைத் தவிர கலந்துரையாடலில் பங்கேற்ற நண்பர்கள் சிலரும் சில எதிர்பார்ப்புகள் வெளியிட்டனர், சில வினாக்களும் தொடுத்தனர். சில குற்றாய்வுகளும் இருந்தன. என் ஏற்புரை முழு நீதி செய்யவில்லை என்பதை உணர்கிறேன். 

சில வினாக்களுக்கு நான் தந்த விடைகள் என் அன்புக்குரியவர்களிடமிருந்து புதிய வினாக்கள் எழச் செய்துள்ளன. அவற்றையும் நான் சந்திக்கத்தான் வேண்டும். தொடர்ந்து எழுதுகிறேன். இதற்கிடையில் எப்படி சூனியர் விகடனில்  சுவருக்குள் சித்திரங்கள் எழுத வந்தேன் என்ற கதையை நாளை சொல்கிறேன்.

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல்  118