(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே!

குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை மறுத்ததாக எங்கும் காணேன்.

தமிழ்நாட்டில் ‘நக்குசலைட்’ எனப்படும் மா-லெ கட்சியின் தொடக்கக் காலத் தலைவர்களில் ஒருவரான தோழர் கலியபெருமாள் தமிழாசிரியராக இருந்தவர் என்பதால் அப்பகுதி வாழ் மக்களிடையே வாத்தியார் என்று பெயர் பெற்றிருந்தார். இயக்கத்தில் புலவர் என்று மதிப்புடன் அழைக்கப்பெற்றார். இதெல்லாம் தெரிந்தே வெற்றிமாறன் தன் கதைத் தலைவனுக்குப் பெருமாள் வாத்தியார் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

விடுதலை வெளிவந்த நாள் முதலே அப்படம் குறித்து என் பார்வையைச் சொல்லுமாறு ஊடகர்கள் பலரும் கேட்டு வருகின்றார்கள். நம் தோழர்கள் என்னைத் திரையரங்கிற்கு அழைத்துப் போய்ப் படம் பார்க்கச் செய்தும் விட்டார்கள். நான் வலையொளிகள் பலவற்றிலும் செவ்வியாக என் பார்வையைச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கக் கூடும். என்னிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் புலவர் கலியபெருமாளைப் பற்றியவைதாம்.

புலவர் மறைந்த நேரத்தில் தமிழ்த் தேசம் ஏட்டில் நான் அவருக்கு எழுதிய அஞ்சலியுரையை ஈண்டு படைக்கிறேன். இது மெய்யான புலவரைப் பற்றியது. பெருமாள் வாத்தியாரைப் பற்றியதன்று.

ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்

ஏறக்குறைய ஒரு திங்கள் முன்பு சென்னையில் தோழர் சோழநம்பியார் இல்லத்தில் தோழர் புலவரைச் சந்தித்தேன். அதற்கு ஓரிரு நாள் முன்புதான் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியிருந்தார். நான் “புலவர்!” என்று குரல் கொடுத்ததும் படுக்கையில் எழுந்து உட்கார முயன்றார். உடனிருந்த அம்மா வாலாம்பாள், “வாப்பா!” என்று என்னை அழைத்து நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு, “இப்பவெல்லாம் அவருக்கு எதுவும் நினைவிலில்லை.” என்றார்கள்.

புலவர் சிரித்துக்கொண்டே மறுத்தார். அம்மா, “இப்ப எங்க இருக்கீங்க? உங்களைப் பார்க்க யார் வந்திருக்காங்க?” என்று சோதிப்பது போல் கேட்க, புலவர் வெற்றிப் புன்னகையுடன் சொன்னார்: “தெரியுமே! சென்னையில நம்பி வீட்டில் இருக்கிறேன். தியாகு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்!”

அம்மாவிடம் நலம் விசாரித்துக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து ‘தமிழ்த்தேசம்’ புதிய இதழைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன். அதுவே புலவருடன் என் கடைசிச் சந்திப்பாகி விட்டது.

சென்ற 16-5-2007 காலையில் வழக்கறிஞர் அரிபாபுவிடமிருந்து “புலவர் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது” என்று செல்பேசிக் குறுஞ்செய்தி வந்தது. அன்று மாலை 5 மணியளவில் அவரிடமிருந்தே மற்றொரு குறுஞ்செய்தி – ‘புலவர் கு. கலியபெருமாள் மறைந்தார்’. 18-5-2007 வெள்ளி காலை 8 மணியளவில் பெண்ணாடம் அருகே சௌந்தரசோழபுரம் கிராமத்தில் புலவரின் உடலருகே நின்று வணங்குகிறேன். அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த அம்மா என்னை மற்றவர்களிடம் “தியாகு” என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

இதே வீடு, இதே இடம்… இங்குதான் 1970 சனவரியில் ஒருநாள் கட்டிலில் புலவருக்கருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டில் அவருடன் அம்மாவும் வள்ளுவனும் இருந்தார்கள். புலவர் வள்ளுவனை அழைத்து என்னிடம் அறிமுகப்படுத்தி, “இவனுக்கு ஒரு சந்தேகம், நீங்களே தெளிவு படுத்துங்கள்” என்றார். வள்ளுவனை என் அருகில் உட்காரச் சொல்லி “கேளுங்கள்” என்றேன்.

“அப்பா முழுமையாக இயக்கத்துக்கே போய் விட்டார். நீங்களும் இயக்கத்துக்கு வந்து விட்டதாகச் சொல்கிறார். எங்களையும் இயக்கத்தில் ஈடுபடச் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் இயக்கத்திற்கே போய் விட்டால் குடும்பம் என்னாவது?”

வள்ளுவனுக்கு நான் பதில் சொன்னேன். “புரட்சி என்பது சமூக மாற்றத்துக்காகத்தான். சமூக மாற்றம் நடந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க முடியும். புரட்சியின் நன்மைகள் நம் குடும்பங்களுக்கும் சேர்த்துதான்.”

என் விளக்கம் புலவருக்குப் பிடித்திருந்தது.

“நீங்கள் தலைமறைவாய் இருப்பதாகச் சொன்னார்கள். இப்படி வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்று புலவரைக் கேட்டேன். அவர் சிரித்தார்.

“ஆமாம், தலைமறைவுதான். ஆனால் இந்த ஊர் நமக்குத் தளப் பிரதேசம் போல. எல்லாரும் நம் மக்கள்தான். காவலர் வந்தால் உடனே தகவல் கொடுத்து விடுவார்கள். நான் பின்பக்கமாக எழுந்து போய்விடலாம்.”

பின்னால் திரும்பிப் பார்த்தேன். விரிந்த வயல்பரப்பு தெரிந்தது. பின்பக்கம் வாசல், கதவு என்று எதுவுமில்லை.

… அந்தப் பழைய நினைவுகளோடு நிகழ்காலத்துக்கு மீள்கிறேன். இப்போதும் அந்த வீடு அப்படியேதான் இருக்கிறது – இந்த 38 ஆண்டுகளில் மேலும் இடிந்து மேலும் சிதலமாகிக் கிடப்பதைத் தவிர!

காலம் அரித்த சுவர்களுக்கிடையே, கலகலத்து நொறுங்கிய ஓடுகளின் கீழே, அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரன் உறங்குகிறான் – முடிவாக!

… அந்த முறை புலவர் என்னை “சில நாள் இருந்து விட்டுப் போகலாமே?” என்றார். “உங்களிடம் இருந்து பதில் வாங்கிக் கொண்டு போய் பெரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டுமே?” என்றேன். பெரியவர் என்றால் தோழர் ஏ.எம். கோதண்டராமன், சுருக்கமாக ஏ.எம்.கே. “அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் புலவர்.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 152