(தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

உயர்நீதிமன்றத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள்? 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற வரை வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக இன்னொருவர் நீதிபதியாக இருந்தார்கள். அவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான். வேறு யாரவது ஒரிருவர் இருந்திருக்கலாம்.

இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கம்யூனல் அரசாணையோ செல்லாது என்று சொல்லி விட்டார்கள். திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள் உச்ச நீதிமன்றத்திலும் உச்சிக் குடுமி இது செல்லாது என்று சொல்லி விட்டார்கள்

30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், ஒடுக்குண்ட மக்கள் அனுபவித்து வந்த ஒரு சிறிய சலுகை பறிக்கப்படுகிறது. அதை உரிமையாக அனுபவித்தார்கள், இனி அது கிடையாது என்ற உடனே தந்தை பெரியார் கொதித்து எழுந்தார். போராட்டம் அறிவித்தார். இதைத் திரும்பப் பெறாமல் விட மாட்டோம் வகுப்பு உரிமை எங்களிடம் திருபிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று போராடினார் அன்றைக்கு அண்ணல் அம்பேத்துகர் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் சட்டத் துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில்தான் சவகர்லால் நேரு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்தார்.  செண்பகம் துரைராசு வழக்கின் விளைவை முறியடிப்பதற்குத் தான் முதல் திருத்தம் (First Amendment).

கேட்டார்கள் நாடாளுமன்றத்தில், ஐயா எதற்கு இந்தத் திருத்தம் என்று.  நேரு என்ன சொன்னார்?  சென்னையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சென்னையில் நடைபெறுகிற போராட்டங்களைக் கருதித்தான் இந்த திருத்தத்தை கொண்டு வருகிறோம் என்றார். அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு சட்டத்தைத் திருத்தினார்கள்

அந்தத் திருத்தம் கொண்டுவருகிற போது ஐந்து ஆறு பேர் தனியாக ஒரு தீர்மானம் கொடுத்தார்கள். என்ன தீர்மானம் தெரியுமா? 

இந்த கம்யூனல் அரசாணையில் சாதி பார்க்கிறீர்கள், மதம் பார்க்கிறீர்கள், என்ன சமூகம் என்று பார்க்கிறீர்கள்,  கம்யூனிட்டி பார்க்கிறீர்கள்; அப்படிப் பார்க்காமல் பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரரா என்று பார்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 250 பேரில் ஆறு பேர் கொண்டுவந்த திருத்தத்தை 244 பேர் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்தார்கள். அன்றைக்குத் தோற்றுப் போன அந்தத் திருத்தத்தைதான் இப்போது  மோடியும் அமித்துசாவும் கொண்டுவந்திருக்கிறார்கள் 

அப்போதிலிருந்து இவர்களுக்கு ஒரு கனவு! இதை எப்படியாவது திரும்பக் கொண்டுவந்து விட வேண்டும் என்று! ஏன்? ஒருவர் படிப்பதற்கும் படிக்காமல் இருப்பதற்கும், கல்லூரி வாய்ப்பைப் பெறுவதற்கும் பெறாமல் இருப்பதற்கும் ஏழை பணக்காரன் என்பதுதான் காரணமா? அவன் பிறந்த சாதியினுடைய கல்வித் தகுநிலை காரணமா? அவனுடைய சமூகத் தகுநிலை (SOCIAL STATUS) காரணமா?

 ஒரு ஏழை பிராமணன் கூட கல்வியில் விழிப்புற்று தன் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை, நன்றாகப் படிக்கட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பாம்பு பிடிக்கிற மூப்பனார் ஆகவும் இருக்கலாம். பண்ணை நடத்துகிற மூப்பனராகவும் இருக்கலாம். இந்த இருவர் குழந்தைகளும் ஐஐடி பக்கம் போக முடியாது – இன்றைய வரை!

 நம் கிண்டியில் ஐஐடி இருக்கிறது. அதில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? யாருக்கு அங்கே இருக்கிறது இடம்? நூற்றிற்கு 50க்கும் மேல் அங்கே பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் அனைத்தையும் கைகளில் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் பொறுப்பா, மேலாளர் பொறுப்பா என எல்லாம் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது. இன்றைக்கும் மாவட்ட ஆட்சியர்கள், அரசுச் செயலர்கள், தணிக்கையாளர்கள், நூறு விழுக்காடு அவர்கள் கைகளில் இருக்கிறது. எப்படி இலஞ்சம் வாங்கினால் ஏமாற்றலாம் என்று கற்றுக் கொடுப்பதற்கான ஒரு வேலைதான் தணிக்கையாளர் வேலை. பொறுப்புகளில் அனைவரும் அவர்கள்தான் நிறுவனச்செயலாளர்கள், த.செ.(சிஎசு) அவர்கள்தான். எப்படி வந்தார்கள்? இது ஏழை பணக்காரன் என்கிற பிரச்சனையா? சாதிப் பிரச்சினையா?

 இப்போது சாதி தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவன் ஏழை இல்லையா? அவன் குடிசையில் இருக்கிறானே? சேரியில் இருக்கிறானே? சேரியில் என்ன இரும்புப் பெட்டிக்குள் பணத்தைப் பூட்டிப் வைத்து இருக்கிறானா? அவனும் ஏழைதான்! சாதிக்குள்ளே ஏழை பணக்காரன் என்பது மறைந்திருக்கிறது. பணக்காரன் என்றால் அது ஒரு பணக்கார சாதி. நடுத்தர வர்க்கம் என்றால் அது ஒரு நடுத்தர சாதி. ஒடுக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் என்றால் அவன் பரம ஏழை. இதுதான் உண்மை. ஊ்ர்ப்புறத்தில் விவசாயத் தொழிலாளிதான் பறையன் பள்ளன் சக்கிலியனாக இருக்கிறான். கள்ளர் முதலியார் வன்னியராக இருப்பவர்கள் நடுத்தர விவசாயிகள். சிறு நில விவசாயிகள். நிலக் கிழார்கள் உயர் சாதிக்காரர்கள். இதுதானே உண்மை? அப்போது சமூக வழியில் பிற்படுத்தப்பட்டோர் என்றால் அதற்குள்ளே பொருளாதாரம் இல்லையா? இருக்கிறது.

 சமூகம் என்றால் ஒன்று பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும், இரண்டாவது பழக்க வழக்கங்களைப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு ஆளாகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டமே தீண்டாமையை ஒழித்து விட்டதாக சொல்கிறது. ஆனால் இன்றைக்கும் எசுசி எசுடி சட்டம் இருக்கிறதா இல்லையா? இன்றைக்கும் கோகுல்ராசு போன்ற ஒரு வழக்கு நடைபெறுகிறதா இல்லையா? இன்றைக்கும் ஆணவப் படுகொலை நடைபெறுகிறதா இல்லையா? அப்படி என்றால் சாதி ஒழிந்து விட்டதா? தீண்டாமை ஒழிந்து விட்டதா? ஆனால் தீண்டாமை ஒழிந்து விட்டது என்று சொன்னார்கள். என்ன சொல்லவில்லை? சாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்லவில்லை.  அப்போது என்ன அருத்தம் நச்சுச் செடி அப்படியே இருக்கிறது, அதன் இலைதழைகள் வெட்டப்பட்டுள்ளன. அது திரும்பத் திரும்பத் துளிர்க்கிறது 

அம்பேத்துகர் சொன்னார்: சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. அவரால் முடிந்தது இவ்வளவுதான் சரி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று எழுதிக் கொள். அதனால் என்ன செய்தார்கள் என்றால், சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்மானித்தார்கள்.

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153