(தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!- தொடர்ச்சி)

த.எ.த. (ஊபா)வின் தொடர் கொடுமைகள்

வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு ப.த.(பொடா) சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளைச் சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு த.எ.த.(ஊபா) சட்டம் திருத்தப்பட்டது. இச்சட்டத்தில் உள்ள பிரிவு 43(ஈ) இல் செய்யப்பட்ட திருத்தங்கள் பிணை கொடுப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. ஆறு மாதத்திற்கு மேல் தடுத்து வைப்பதற்கும் புலனாய்வு செய்வோர் 90 நாட்களுக்குள் புலனாய்வை முடிக்க இயலாவிடில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான காலத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் திருத்தங்கள் வழிவகுத்தன. இந்தத் திருத்தத்தின் மூலம் ஊபா என்பது பண்பளவில் ஆபத்தான சட்டமாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டமும் இயற்றப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புதிய புலனாய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

2012 இல் மீண்டும் ஒருமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. ”Financial action task force” என்ற பன்னாட்டு அமைப்பில் ஒப்புக்கொண்டதற்கு இணங்கப் பண மோசடியையும் பயங்கரவாதத்திற்குப் பணம் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. எந்த ஓர் இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் ’சட்ட எதிர்’ என அறிவித்துக் கைதுகளைச் செய்யலாம். ஆறு மாதங்கள் வரை இப்படிச் சட்டஎதிராக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டன.

2019 இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கராவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருப்பவற்றில் மிகவும் ஆபத்தான சட்டமாக மாறி விட்டது

புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 ப.த.ச.(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான ப.த.ச.(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுவதற்கான பிர்வு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றில் எல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை; சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரை தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது.

ப.த.ச.(ஊபா) வழக்குகளின் விசாரணை முடிவதற்கு குறைந்தது 3 இல் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ப.த.ச.(ஊபா) வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018 இல் 16.32%, 2019 இல் 32.08%, 2020 இல் 16.88% மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர்.

ப.த.ச.(ஊபா) வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57( 2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ப.த.ச.(ஊபா)வில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே.

மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் குடிமை(சிவில்) உரிமைக் கழகம் கடந்த 2022 அட்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும்.

’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறுவிதமாக மெப்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ப.த.ச.(ஊபா).

ப.த.ச.(ஊபா) சொல்லும் அதிருப்தி என்றால் என்ன?
“இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் அரசுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது.

இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால்,அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ப.த.ச.(ஊபா)வின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம்!

யாரைத்தான் விட்டுவைத்தது ப.த.ச.(ஊபா)?மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில் கனிம வளங்களைப் பெருநிறுமங்கள்(கார்ப்பரேட்டுகள்) கொள்ளையடிப்பதற்கு எதிராகப் பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்கு துணைநின்றவர்கள், ஒடுக்கப்பட்ட(தலித்து) மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர், கலைஞர்கள், பேராசிரியர்கள், அருட்தந்தை இசுடான் சுவாமி முதலான 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை இசுடான் சுவாமி, நடுக்குவாத நோய்க்கு (Parkinson’s Disease)ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது.

பீமா கோரேகான் வழக்கில் மூன்றுமுறை குற்றப்பத்திரிகை தொடுக்கப்பட்டு புதியபுதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதிசெய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாக சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் வாடிவருகின்றனர்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216