தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)
(தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்-தொடர்ச்சி)
பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)
மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சர்சீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா சார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நருவால், அசிப்பு இக்குபால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா முதலிய மாணவர்கள் ஊபா வின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராசுதீபு சருதேசாயும் வினோத்து கே சோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத்து சாக்குரா, பீர்சாடா ஆசிக்கு ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது ஊபாவின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக்கு கப்பான் மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது.
பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் எதிர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு.
அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட எதிர் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள், பிற பழங்குடிகளை இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். சார்க்கண்டின் மசுதூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபா( UAPA)வின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப் பட்டது.
இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்து கொண்டிருக்கிறது. எந்த குற்றமானாலும் இசுலாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இசுலாமிய இளைஞர் ஊபா வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர்களுக்கு வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கு, தெலங்கானாவைச் சேர்ந்த 9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இசுலாமியர்கள் ஒருபக்கம்! இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாபு, நாகலாந்து, மணிப்பூர் முதலான மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொருபக்கம்! இந்துத்துவத்தின் பெருநிறும(கார்ப்பரேட்டு)க் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்குசல்பாரி அமைப்பினர், உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம்! இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலை-பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை.
கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14,வாழ்வுரிமையையும் ஆள்வகை சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும்.
பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008 இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லைக்கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப் போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது.
தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறுசெய்யக் கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு ஒன்றிய ’காவல் துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது.
சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீசுகர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216
Leave a Reply