தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)
(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி)
ஏ. எம். கே. (8)
புதிர் முறுவல்
திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள்.
நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது உடனடி வருங்காலத்தில் சாத்தியமில்லை என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவ்வமைப்பை மீண்டும் பழைய வடிவில் கட்டுவது தேவைதானா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அடக்குமுறையினால் துவண்டு விடாமல் தொடர்ந்து போராட்ட உணர்வுடன் இருந்து வந்த தோழர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்பறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனக் கருதினோம். முதன்மைக் கண்டத்துத் தனிக் கொட்டடி வாசம் இதற்குச் சரிப்படவில்லை.
மரணத் தண்டனைக் கைதிகளாக இருந்த போது நாங்கள் எடுத்த முடிவு சாவதற்குள் ஒரு சாதனையாக காரல் மார்க்குசின் “மூலதனம்’ நூலை நான் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது. அப்போது கருத்துப் போராட்டம் காரணமாக ஒத்திவைத்த இம்முடிவை இப்போது செயலாக்க விரும்பினோம். இது வரை, நான், சொல்லச் சொல்ல இலெனின் எழுதுவதுதான் வழக்கம். நான் என் அறையிலிருந்தபடி கத்திச் சொல்ல, அவர் தன் அறையிலிருந்தபடி எழுதுவார்.
[திருச்சி மத்திய சிறையில் கண்டம் என்ற பெயரில் மூன்று தொகுதிகள் இருந்தன. கண்டம் என்ற சொல் CONDEMN என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்புதான். CONDEMENED PRISONER என்றால் மரணத் தண்டனைக் கைதி. அவரை அடைத்து வைக்கும் அறை மரணத்தண்டனைக் கொட்டடி. இந்தக் கொட்டடிகள் வரிசையாக இருக்கும் தொகுதி மரணத் தண்டனைக் கூடம் எனப்பட்டது. நான் விசாரணைக் கைதியாக இருந்த போதே சென்னை மத்தியச் சிறையில் மரணத் தண்டனைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தேன். அங்கு கிடைத்த பட்டறிவைச் சுவருக்குள் சித்திரமாக்கியுள்ளேன். 1971 நடுவில் திருச்சிராப்பள்ளிச் சிறைக்கு மாற்றப்பட்ட போது முதலில் ‘ஓல்டு கண்டம்’ என்று அறியப்பட்ட பழைய கண்டத்தில்தான் அடைக்கப்பட்டேன். தோழர் இலெனினும் குருமூர்த்தியும் தொடக்கமுதலே அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கண்ணப்பன் (என்ற) கணேசனும் பிற்பாடு வந்து சேர்ந்தார். வழக்கமாக பழைய கண்டம் என்பது தூக்கிலிடப்படும் கைதிகளைக் கடைசியாக அடைக்கும் இடம், அதற்குப் பின்னால்தான் சக்கிக் கொட்டடி (தூக்கு மேடை) இருந்தது. தோழர் பாலகிருட்டிணனைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் இரவு பழைய கண்டத்தில்தான் வைத்திருந்தனர். மற்ற நேரங்களில் அது ஆபத்தானவர்களாகக் கருதப்பட்ட அரசியல் கைதிகளுக்கும், தப்பிச் செல்லக் கூடியவர்களுக்குமான (escapees) தொகுதி. பழைய கண்டத்தைக் களமாகக் கொண்டு நான் சொல்ல வேண்டிய கதைகள் பலவுண்டு. பிறகு சொல்கிறேன். பழைய கண்டத்தின் இப்போதைய பெயர் ஆறறைத் தொகுதி. முதன்மைக் கண்டத்திற்கு இருபதறைத் தொகுதி என்று பெயர். ஒவ்வொரு மையச் சிறையிலும் அடைப்புச் சிறை (Close Prison) என்று ஒரு பகுதி உண்டு. சி.பி. என்று சுருக்கமாகச் சொல்வார்கள். தூக்குத் தண்டனைக் கைதிகள் மிகையாக வந்து விட்டால் திருச்சி சிறையில் சி.பி. முதல் தொகுதியை கண்டம் ஆக்கி விடுவார்கள். அதற்கு சி.பி. கண்டம் என்று பெயர். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த வரை இந்த மூன்று கண்டங்களுக்கு இடையில்தான் குடிமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.]
ஏஎம்கேயை எங்களோடு முதன்மைக் கண்டத்தில் வைக்காமல் தனியாகப் பழைய கண்டத்தில் அடைத்து விட்டார்கள். விசாரணைக்காக அவரைத் தினந்தோறும் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய்க் கொண்டுவந்தார்கள். பொய் வழக்குதான் என்றாலும் வழக்கு விசாரணையின் முடிவில் தண்டனை உறுதி என்று நினைத்தோம். இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பி, 302 ஆகிய இரு பிரிவுகளுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கலாம். மரணத் தண்டனை விதிக்கப்படுமானால் அதையே காரணமாய்க் கொண்டு அவரைத் தனியாகப் பூட்டி விடுவார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்படுமானால் அவரை எங்களோடுதான் வைக்க வேண்டியிருக்கும்.
இதற்கிடையில், தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தன.
அப்போது தஞ்சையில் அமர்வு நீதிபதியாக இருந்தவர் தூக்குத் தண்டனை விதிப்பதில் பேர்போனவர். பாலகிருட்டிணனுக்கு மரணத் தண்டனை விதித்தவரும் இவர்தான்.
திருச்சியிலிருந்து ஏஎம்கே அதிகபட்ச வழிக்காவலுடன் காவல்துறை வண்டியில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார். அது வழக்கு விசாரணையின் முதல் நாள். கைவிலங்கிட்டு, அதற்கு மேல் சங்கிலி மாட்டி ஏஎம்கேயை வண்டியிலிருந்து இறக்கி அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகமே பரபரத்தது.
ஏஎம்கே கூண்டில் ஏறி நின்றவுடன் அவரைப் பார்த்து நீதிபதி கேட்டார்:
“உம் பெயர் கோதண்டராமன்தானே?”
ஏஎம்கே பதிலேதும் சொல்லாமல் சற்று நிதானித்து விட்டு முழக்கமிடத் தொடங்கினார்:
“தலைவர் மாவோ வாழ்க!” “புரட்சி ஓங்குக!”
பிறகு, நீதிபதியைத் தவிர மற்ற எல்லார் மீதும் பார்வையைப் பரப்பி ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். பூர்சுவா நீதிமன்றத்தின் பொய்மை, ஏமாற்று பற்றியெல்லாம் சுருக்கமாய்ப் பேசினார், வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் வியப்பு! நீதிபதிக்கோ திகைப்பு!
ஏஎம்கே பேசி ஓய்ந்த பின் நீதிபதி கேட்டார்: ”நீர் வழக்கை நடத்தப் போகிறீரா? வழக்குரைஞர் வைத்திருக்கிறீரா? இல்லையென்றால், உமக்கு இந்த நீதிமன்றம் வழக்குரைஞர் வைத்துத் தரும்.”
இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் ஏஎம்கே சொன்னார்: “நீர் ஒரு காவலர் நீதிபதி (Police udge) என்று கேள்விப்பட்டேன்.”
நீதிபதிக்குச் சுருக்கென்று இருந்திருக்க வேண்டும். மரியாதை இம்மியளவு குறைந்தாலும் பதிலடி கிடைக்கும் என்பது புரிந்திருக்க வேண்டும்.
ஏ.எம். கே.யிடம் நீதிபதியின் அணுகுமுறை உடனே மாறி விட்டது.
“திரு.கோதண்டராமன், நீங்களே ஒரு வழக்குரைஞர். நீதிமன்ற நடைமுறையெல்லாம் உங்களுக்கே தெரிந்ததுதான். வழக்குரைஞர் வைத்து வாதிடப் போகிறீர்களா என்று கேட்டேன்.”
“நான் இந்த நீதிமன்றங்களை நம்பவில்லை. வழக்கு நடத்த விரும்பவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”
“நான் உங்களுக்கு ஒரு வழக்குரைஞர் வைத்து அவர் உதவியோடுதான் விசாரணையை நடத்தியாக வேண்டும். நீங்கள் விசாரணையில் குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாது.”
“நான் குறுக்கிட மாட்டேன். எனக்கும் இங்கு நடைபெறும் விசாரணைக்கும் தொடர்பில்லை என்று இருந்து விடுவேன்.”
இதே தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் மீது இதே வழக்கு நடைபெற்ற போது, எங்கள் சார்பில் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவோ வாதிடவோ வழக்கறிஞர்கள் அமர்த்தப்படாது போனதால் அந்த விசாரணையை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிட்டது பற்றி முன்பே சித்திரங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தத் தீர்ப்பைக் கருத்திற் கொண்டுதான் இப்போது ஏஎம்கே சார்பில் நீதிமன்றத்துக்கு உதவிட நீதிமன்ற உதவியர்/ amicus curiae என்ற முறையில் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதில் நீதிபதி குறியாக இருந்தார்.
யாரை நியமிப்பது? யாராவது ஒரு வழக்கறிஞர் முன்வந்தால் அவரையே நியமித்து விடலாம். பிரச்சினையில்லை, ஆனால் யாரும் முன்வரக் காணோம்.
வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தியும் ஏஎம்கேயும் சேர்ந்து படித்தவர்களல்லர். முன்னவர் சென்னையில் மாணவர் இயக்கத்தில் முனைப்பாய் இருந்த போது, பின்னவர் தொழிற்சங்க அரங்கில் செயல்பட்டு வந்தார். அப்போது அறிமுகமும் சற்றே பழக்கமும் ஏற்பட்டிருக்கலாம்.
எது எப்படியோ, இப்போது நீதிமன்றத்தில் அவர் நோக்க… இவர் நோக்க… இருவரையும் நீதிபதி நோக்க, ஒரு சிக்கல் தீர்ந்தது.
தஞ்சையாரைப் பார்த்து நீதிபதி கேட்டார் : “ஏன், நீங்களே நீதிமன்றத்துக்கு உதவலாமே?”
தஞ்சையார் ஏஎம்கேயைப் பார்த்தார். ஏஎம்கேயின் புன்முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும், தஞ்சையார் சரி சொல்லி விட்டார்.
எட்டு நாள் விசாரணை, ஏறத்தாழ எண்பது சாட்சிகள். ஒவ்வொரு நாளும் கூண்டில் நிறுத்தப்பட்டவுடன் ஏஎம்கே எழுப்பும் முழக்கங்களையும் பிறகு அவர் ஆற்றும் சிற்றுரையையும் கேட்கப் பெருங்கூட்டம் வந்தது. நீதிபதி கன்னத்தில் கைவைத்துக் கண்மூடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார். ஏஎம்கே பேசி முடித்து அமர்ந்த பிறகுதான் சாட்சி விசாரணை ஆரம்பமாகும்.
சாட்சிகள் சொன்ன சாட்சியத்தில் முரண்பாடுகளுக்கும் செயற்கைத்தனத்துக்கும் பஞ்சமில்லை. பள்ளிச் சிறுவர்கள் பாடம் ஒப்பிப்பது போல் எல்லாரும் ஒப்பித்துத் தீர்த்தார்கள்.
சாட்சிகளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அச்சம். காவல் துறையின் மிரட்டலுக்கும் போதனைக்கும் சான்றாயிற்று.
தஞ்சையாரின் குறுக்குவிசாரணையில் சாட்சிகள் நொறுங்க சாட்சியங்கள் கந்தலாய்க் கிழிந்தன. குறிப்பாக, ஏஎம்கேயை அடையாளங்காட்டுவதில் சாட்சிகள் தடுமாறிப் போனார்கள்.
முறுக்கு மீசையைத் தொட்டுத் தடவிக் கொண்டு தஞ்சையார் எழுந்தாலே சாட்சிகளுக்கு நடுக்கம்தான். பல நேரம் அவரின் சரமாரியான கேள்விக் கணைகளிலிருந்து சாட்சிகளைக் காப்பாற்ற நீதிபதியின் குறுக்கீடு தேவைப்பட்டது.
சாட்சியங்களையோ அவற்றின் மீதமைந்த வழக்கையோ நீதிபதி நம்பவில்லை என்பதை அவரது முகக்குறி கொண்டு தஞ்சையார் கணித்தார். மற்ற வழக்கறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். விடுதலைத் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குமுன் இன்னும் சில படிகள் ஏற வேண்டுமே!
சாட்சிகள் விசாரணை முழுவதும் முடிந்த பிறகு சாட்சியம் குறித்து எதிரியிடம் நீதிபதி சில கேள்விகள் கேட்பார். அப்போது எதிரி தன் நிலையை எடுத்துக் கூற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொல்வதற்கு அதுதான் கடைசி வாய்ப்பு.
வழக்கு விசாரணையை இது வரை புறக்கணித்து வந்த ஏஎம்கே இந்தக் கட்டத்தில் என்ன செய்யப் போகிறார்? இந்த சாட்சிகள் சொல்வது பொய், எனக்கும் இந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர் சொன்னால் போதும், விடுதலை கிடைத்து விடும் என்பது தஞ்சையாரின் நம்பிக்கை. ஆனால் ஏஎம்கே இப்படிச் சொல்வாரா?
தஞ்சையார் அருகில் வந்து நின்றதும் ஏஎம்கே சொன்னார்:
“என்னைத் தவறாகக் கருத வேண்டாம். நீங்கள் எவ்வளவு பாடுபட்டு இந்த வழக்கை நடத்துகிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது எங்கள் நிலைப்பாடு. இதை நான் உங்களுக்காக விட்டுத் தர முடியாது அல்லவா?”
“ஆமாம், முடியாதுதான். நான் அது பற்றித் தவறாகக் கருதுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் நிலைப்பாடு மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்கு நன்றாகப் புரிகிறது.”
“மிக்க நன்றி.”
“நீங்கள் விசாரணையில் பங்கு பெறா விட்டாலும் இங்குதான் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்காது. அதிலும் நீங்கள் ஒரு வழக்கறிஞர்.”
ஏஎம்கே வழக்கம் போல் புன்முறுவல் பூத்ததோடு சரி. அந்தப் புதிர் முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும் தஞ்சையார் தொடர்ந்து பேசினார்:
“இந்த வழக்கு முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அத்தனை வழக்கறிஞர்களுக்கும் தெரிந்து விட்டது. வேடிக்கை பார்க்கிறவர்களுக்கே கூட தெரிந்து விட்டது. நீதிபதிக்கும் புரிந்து விட்டது. அவர் கிட்டதட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கட்டத்தில் …”
கொஞ்சம் நிறுத்தி விட்டு ஏ.எம். கே.யின் முகத்தை பார்த்தார் தஞ்சையார்…. அதே புதிர் முறுவல்!
“நீங்கள் உங்கள் புறக்கணிப்பைக் கைவிட வேண்டாம். எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மட்டும் சொல்லி விடுங்கள் மற்றபடி கேள்விக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் ஆர்க்யுமெண்ட்டில் நான் பார்த்துக் கொள்கிறேன்.”
நீதிபதி கேட்ட முதல் கேள்விக்கு ஏஎம்கே பதிலளித்த போதுதான் அவரது புதிர் முறுவலின் பொருள் விளங்கிற்று.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 21
பின் குறிப்பு:
தாழி அன்பர் சாமிநாதன் வினவுகிறார்:
தண்டனைக் கைதி புரிகிறது. தண்டனைக் காவலர் என்பவர் யார்?
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருப்பவர் தண்டனைக் கைதி. நீண்ட தண்டனை பெற்ற கைதிகள் சிலரைச் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் சிறைக் காவலர்களாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்குத் தனிச் சீருடை உண்டு. காவலர்கள் போலவே அவர்கள் சிறையில் செயல்படுவார்கள். கையில் தடியும் வைத்திருப்பார்கள். அவர்களைத்தான் தண்டனைக் காவலர் (convict warder) என்பர்.
Leave a Reply