தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2-தொடர்ச்சி)
காமராசர் பிறந்த நாள்
இனிய அன்பர்களே!
இன்று (சூலை 15ஆம் நாள்) இளைஞர் அரண் – கல்வி உரிமை மாநாட்டுக்காகக் குடந்தையில் இருக்கிறேன். ஐயா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தனியாக உட்கார்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருந்தேன். ஐயாவின் மூத்த மகன் பாபு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து “ஃகாசா” என்று அறிமுகம் செய்து வைத்தார். “உட்காருங்கள், எனக்குப் பேச நேரமில்லை” என்றேன்.
ஃகாசா சொன்னார்: “இன்று காமராசர் பிறந்த நாள். நீங்கள் வந்து காமராசர் சிலைக்கு மாலை போட வேண்டும். அழைத்துப் போக வந்திருக்கிறோம்.”
எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே புறப்பட்டேன். பிறந்த நாள் கொண்டாடுவது, சிலைக்கு மாலை அணிவிப்பது… பொதுவாக இதில் எல்லாம் எனக்குப் பெரிதாக நாட்டமில்லை. என்றாலும் கல்வி உரிமை மாநாடு நடத்தவிருக்கும் நிலையில் காமராசர் பிறந்த நாளில் அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
போகிற வழியில்தான் ஃகாசாவிடம் “என்ன அமைப்பு?” என்று கேட்டேன். “முத்தமிழ் மக்கள் பேரவை.”
பாலக்கரையில் அந்தக் காமராசர் சிலைக்கு எதிரில்தான் தீயில் எரிந்த குழந்தைகளுக்கான நினைவுச் சின்னம் உள்ளது. இளைஞர் அரண் கல்வி உரிமை மாநாட்டுப் பணிக்காக வந்துள்ள தோழர்கள் அந்தப் பூங்காவில்தான் இருந்தார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டேன். பிறகு படியேறிச் சென்று காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன்.
அங்கிருந்து “நேட்டிவ்” மேல்நிலைப்பள்ளி திடலில் மாணவர்களுக்குக் குறிப்பேடும் தூவலும் வழங்குவதற்காக அழைத்துச் சென்றார்கள். அங்குப் பள்ளி ஆசிரியர் சௌந்தர்ராசன் காமராசரைப் புகழ்ந்து சொற்பொழிவு ஆற்றினார். நான் காமராசர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பின் சுருக்கமாகப் பேசினேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு பற்றிக் குறிப்பிட்டு, நாளை நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டுக்கு அனைவரையும் அழைத்துப் பேசினேன்.
எனக்குப் பிறகு என் அகவையொத்த ஒருவரைப் பேச அழைத்தார்கள். அவர் பெயர் இராசசேகரன், என்னைப் பற்றியும் காமராசரோடு எனக்கிருந்த தொடர்பு பற்றியும் நன்கறிந்து வைத்திருந்தார். என் மாணவப் பருவத்தில் குடந்தையில் நடந்த சில நிகழ்ச்சிகளில் நான் பேசியதைக் கூட நினைவு கூர்ந்து பேசினார்.
நான் ஒரு காலத்தில் காமராசர் புகழ் பாடிக் கொண்டிருந்தவன். பள்ளிப் பருவத்தில் நான் முதன்முதலாகக் கவிதை என்று ஒன்று எழுதியதே காமராசரைப் பற்றித்தான். பல மாநாட்டு மேடைகளில் அவர் முன்னிலையில் பேசியுள்ளேன். பல சருச்சைகளில் அவர் என்னைப் பாதுகாத்ததும் உண்டு.
அவர் ஏழைப் பங்காளர் அல்லர், பண்ணையார்களின் பங்காளர் என்று பிற்காலத்தில் சொல்லியுள்ளேன். இப்போதும் அதில் மாற்றமில்லை. ஆனால் தமிழ்ச் சூழலில் கல்வியைப் பரவலாக்கியதில் அவருக்கிருந்த பங்கினால்தான் தந்தை பெரியாரே அவரைத் தூக்கிச் சுமந்தார் என நினைக்கிறேன்.
அம்பத்தூரில் பெருந்தலைவர் காமராசர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்த போது திரு பி.சி. கணேசனை அழைத்து வந்து காமராசர் பிறந்த நாள் விழாவில் பேசச் செய்தேன். அவர் திருவாரூர் பள்ளிக்கூடத்தில் எனக்குத் தலைமையாசிரியராக இருந்து, ஈ.வெ.கி. சம்பத்து தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி அரசியலுக்காகப் பணி துறந்தவர், பிற்காலத்தில் காமராசருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்.
காமராசருடனான என் பழக்கம் பற்றிச் சில செவ்விகளில் கூறியுள்ளேன். குறிப்பாக அன்பர் நலங்கிள்ளி எடுத்த விரிவான காணொளிப் பேட்டி ஒன்றுள்ளது. அதனை ஈண்டுப் பகிர்கிறேன் –
https://www.youtube.com/watch?v=S1s3YN3MTrY
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 251
Leave a Reply