தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2 – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – 3
காதை 3
நான் குக்கி இனப் பெண். பெயர் வேண்டா. அகவை 29. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இனி அங்கு திரும்பிச் சென்று படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன நடந்தது? சொல்கிறேன்.
மே 3 இரவு, விடிந்தால் 4 – இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக விடுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நுழைந்தது. அவர்கள் தடிகளும் கத்திகளும் வைத்திருந்தார்கள். குக்கி-சோமி பழங்குடிச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களையும் பணியாளர்களையும் ஆசிரியர்களையும் அவர்கள் தேடினார்கள். நாங்கள் நால்வர், அனைவரும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவியர், மிரண்டு போய் ஒரு கழிப்பறைக்குள் பதுங்கிக் கொண்டோம்.
கொலைக் கருவிகளோடு வந்த கும்பல் எழுப்பிய கூச்சல்: “சிதா குக்கி நூப்பி லிப்ரா?” [யாராவது குக்கி பெண் இருக்கிறாளா?] “குக்கி நூப்பி ஃகட்லோ” [குக்கிப் பெண்களைக் கொல்வோம்!]
அவர்கள் மாணவியர் அனைவரையும் கட்டாயப்படுத்தி அறைக்கு வெளியே வரச் செய்து, வாய்க்கு வந்த படி திட்டவும் தொல்லைப்படுத்தவும் செய்தனர்.
நாங்கள் நால்வர் மட்டும் வெளியே வராமல் கழிப்பறைக்குள்ளேயே ஒளிந்திருந்தோம். விரைவில் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள், கதவைத் தட்டி உடைத்தே விட்டார்கள். நாங்கள் வெளியே வந்தோம். எங்களில் மூவர் வேறு பழங்குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களை அறைக்குப் போய் அடையாள அட்டை கொண்டுவரச் சொன்னர்கள். இந்த அலமலப்பில் நான் நழுவிச் சென்று தாழ்வாரத்தில் பதுங்கிக் கொண்டேன். சிக்கிக்கொண்ட மற்றவர்களை அந்தக் கும்பல் மோசமாகத் திட்டி இழிவு செய்தது.
விடிகாலை 3.30 அளவில் அசாம் தோளணித் துப்பாக்கிப் படையினர் வந்து அப்பெண்களை மீட்டு இம்பாலில் மிக அண்மையில் இருந்த மணிப்பூர் காவல்துறை வளாகத்துக்கு அழைத்துப் போயினர்.
நான் அறவே நம்பிக்கை இழந்து விட்டேன். இனி ஆராய்ச்சிப் படிப்பை மீண்டும் தொடர முடியாது. அன்றாடத் தேவைகளுக்காகத் தில்லியில் ஓர் அழைப்பு மையத்தில் வேலை செய்கிறேன்.
பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிச் செல்ல முடியவே முடியாது. இனவெறி தலைவிரித்தாடுகிறது. திரும்பிச் செல்வது முட்டாள்தனம். வீட்டை இழந்து விட்டோம். திடீரென்று தெருவில் நிற்கிறோம். அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் போது முனைவர் பட்டம் அற்பமாகி விடுகிறது. என் பாடம் விலங்கியல். என் ஆய்வு மாதிரிகள் எல்லாம் வளாகத்தில் உள்ளன. எல்லாம் போயிற்று.
காதை 4
மே 3 – 4 இரவு வேளையில் இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக விடுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நுழைந்து குக்கி குமுகாயப் பெண்களை அறை அறையாகத் தேடிய போது உள்ளே இருந்த மாணவிகளில் நானும் ஒருத்தி.
அந்தக் கொலைவெறிக் கூச்சல் எங்களை நடுநடுங்கச் செய்தது. மோசமான வசவுக்கும் கடுமையான மிரட்டலுக்கும் நாங்கள் ஆளானோம்.
நான் இப்போதும் மணிப்பூரில்தான் இருக்கிறேன். இடத்தை வெளியிட முடியாது. அறைக்கு வெளியே வருவதற்கே அஞ்சிக் கிடக்கிறேன். நடந்தவற்றின் கொடுநினைவுகள் என்னை வாட்டுகின்றன. நொறுங்கிப்போன வாழ்க்கையை திரட்டியள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
என் முனைவர் பட்ட ஆய்வுரையைச் சீர்மை செய்யும் இறுதிக் கட்டத்தில் உள்ளேன். என் எதிர்காலம் எப்படி இருக்குமோ, தெரியவில்லை.
பின்கதை: மணிப்பூர் பல்கலை வளாகத் தாக்குதல் போல் ஆறு நிகழ்ச்சிகள் தேசிய மகளிர் ஆணையத்தின் பார்வைக்குச் சென்றுள்ளன. இரண்டு செயற்பாட்டாளர்களும், வட அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள ஒரு குடியியல் சமூக அமைப்பும் இந்நிகழ்ச்சிகள்பால் மகளிர் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றில் ஒன்று மே 4ஆம் நாள் காங்குபோக்குபி மாவட்டத்தில் பி. பைனோம் சிற்றூரில் பெண்கள் மீது நடந்த தாக்குதலும் கூட்டு வல்லுறவும் ஆகும். இந்த நிகழ்ச்சியின் காணொளிதான் எங்கும் பரவி அதிர்ச்சியளித்தது.
முறையீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற சில நிகழ்ச்சிகள்: மே 4ஆம் நாள் இம்பாலில் நைட்டிங்கேல் செவிலியர் கழகத்தில் இரு இளம்பெண்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மே 5ஆம் நாள் காங்குபோக்குபி மாவட்டம் பெய்ட்டைசிங்கு சிற்றூரில் 45 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டார். மே 15ஆம் நாள் வாங்கீயில் 18 வயதுப் பெண் பாலியல் தாக்கிற்கு ஆளாக்கப்பட்டாள்.
வாங்கீயைச் சேர்ந்த 18 வயதுப் பெண் தான் தாக்குண்ட போது பட்ட துன்பத்தை நினைவுகூரும் காணொளி வெளிவந்துள்ளது. ஆனால் துயரப்பட்டவர்களில் பெரும்பாலார் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டிருப்பதால் பேச விரும்பவில்லை. பல குடும்பங்களும் பழிவாங்கப்படுவோம் என்றஞ்சி முதல் தகவல் அறிக்கை பதியவே முன்வரவில்லை.
தேசிய மகளிர் ஆணையம் தனக்கு வந்த முறையீடுகள் அனைத்தையும் மணிப்பூர் அரசுத் தலைமைச் செயலருக்கும் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் முன்னனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் விடை ஏதும் வரவில்லை.
++
மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று
நரேந்திர மோதி – அமித்துசா கும்பல்
உடனடியாகப் பதவி விலகக் கோருவோம்!
குக்கி இனவழிப்புக்கு நீதி கோருவோம்!
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 260
Leave a Reply