(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி)

பிரிந்தவர் கூடி. . .

தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள் மட்டுமே உண்டு. வெந்ததைத் தின்று விதி வந்து சாகும் பிழைப்பல்ல, புரட்சிக்காக வாழ்ந்து புரட்சிக்காக மடியும் வாழ்க்கை வாழ்கிறோம் என்ற உணர்வு தரும் தனியின்பத்தால் அந்தத் துன்பங்களை வெற்றி கொள்ளும் தெளிவு எங்களுக்கு இருந்தது.

எங்கள் புரட்சிப் பணி என்று அப்போது நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தது அழித்தொழிப்பு என்ற ஒற்றைப் போராட்ட வடிவத்துக்கு ஆள் சேர்ப்பதுதான். அது அவ்வளவு எளிதாயில்லை. எங்களோடு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பிப் போய் விட்டார்கள். நகரத்திலிருந்து புரட்சிக் கனவுகளோடு வந்த மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிற்றூர்ச் சேரிகளில் நீண்ட கடின வாழ்க்கை சரிப்படவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும்தான் மிச்சமிருந்தோம். இரவின் இருளில் ஒரு வயற்கரையில் உட்கார்ந்து அடுத்த வேலைத்திட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

கீழத்தஞ்சை உழவர்களின் ஆய்த எழுச்சி பற்றி ’லிபரேசன்’ ஆரவாரமாய் எழுதிக் கொண்டிருந்தது. பீக்கிங் வானொலியோ “வங்கக் கடலலைகள் தீப்பிடித்து எரிவதாக” அறிவித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் இந்த நகைச்சுவையை எண்ணிச் சிரித்து விட்டு, அடுத்துச் செய்ய வேண்டியன பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தோம். என்ன நடந்தாலும் எங்கள் உறுதியை அசைக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆளுக்கொரு பக்கம் போய் புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுத்துப் பிரிந்தோம்.

சில நாள் கழித்துப் புதிய தொடர்புகள் பற்றிய நல்ல செய்தியுடன் ஏஎம்கே என் புதிய தொடர்புக்குத் திரும்பி வந்தார். இருவரும் அவரவர் பணிகளையும் பட்டறிவையும் பகிர்ந்து கொண்டோம். இப்படி ஏஎம்கே கண்டெடுத்த புதிய தோழர்கள் பந்துவக்கோட்டை எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் – தோழர்கள் இராசப்பா, குருமூர்த்தி, ரெங்கசாமி (இலெனின்) மேலும் சிலர்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை பெரியவரிடம் முழு நம்பிக்கை கொண்டு அரசியலுக்கு வந்தவர். அது என்ன கூடிக் கும்மாளமடிக்கும் அரசியலா? இல்லை, அதிகபட்சத் தியாகத்தைக் கோரும் ஆயுதப் போராட்ட அரசியல். 

ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அழித்தொழிப்புக்கான கரந்தடி(கொரில்லா)க் குழுவுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடும்பத்தை விட்டு வெளியேறித் தலைமறைவு வாழ்க்கைக்கு வர வேண்டும். அனைத்து வகைத் தியாகங்களுக்கும் அணியமாக வேண்டும். ஏஎம்கே இதையெல்லாம் ஒளிவுமறைவின்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கடுமையானதைக் கடுமையாகவே சொல்வது அவர் பாணி. ஈட்டிக் குத்தில் ஏது சரசக் குத்து?

ஒவ்வொருவராகப் பேசி முடித்தாயிற்று. இலெனின்தான் கடைசி. குழுவில் முதல் ஆளாக இடம்பெறப் போவது அவர்தான் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருந்தது. ஏஎம்கேயும் அப்படித்தான் கணக்கிட்டிருந்தார். இலெனின் சொன்னார்:

“நான் வருவதாகச் சொன்னது சொன்னதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், எனக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதம் அவகாசம் வேணும்.”

“ஏன்?”

“என் பெண்டாட்டி பிள்ளைகளைப் பற்றிக் கவலப்படவில்லை. அஞ்சலை கூலி வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றிடுவாள்.  அதுக்கும் மேல் என் அம்மா! எங்க அப்பா சிங்கப்பூரில் செத்தப்பிறகு என்னையும் என் அக்கா தங்கச்சிங்களையும் பாடுபட்டுக் காப்பாற்றி இப்ப மருமகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் உடம்பைப் பிழிஞ்சி கஞ்சி ஊத்திருவாங்க. எனக்கிருக்கிற ஒரே கவலை…” 

“சொல்லுங்க…”

“நான்தான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே ஆண்பிள்ளை. நாலு அக்கா, ஒரு தங்கச்சி, நாலு அக்காளையும் கட்டிக் குடுத்தாச்சு. மிச்சமிருக்கறது ஒரே ஒரு தங்கச்சி. அதையும் யார்கிட்டயாவது பிடித்துக் கொடுத்துவிட்டால், என் கடமை தீர்ந்து விடும். அதற்குத்தான் நேரம் கேட்கிறேன்.”

இலெனின் முகத்தை உற்றுப் பார்த்து ஏஎம்கே சொன்னார்:

“ஒரே தங்கச்சிங்கறீங்க, ஆனால், யார்கிட்டயாச்சும் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். யார்கிட்டயாச்சும் பிடித்துக் கொடுப்பதுதான் கடமையா? பொருத்தமான ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கவேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் தங்கச்சியைப் பத்தி உங்களுக்கு மட்டும்தான் கவலையா? எங்களுக்கு இல்லையா? நாம் என்ன குடும்பத்தை வெறுத்துச் சந்நியாசமா போகிறோம்? தலைமறைவு என்பது எதிரிக்கிட்டே இருந்துதான். இயக்கத்துக்கு வருவதால குடும்பத்தைக் கை விடவேண்டும் என்பதில்லை.  சுரண்டுற குடும்பம்னா கூட அப்படி இருக்கலாம். உங்கள் குடும்பம் உழைக்கிற குடும்பம். உங்கள் தங்கச்சி இரண்டு ஆம்பளைங்களுக்குச் சமமா உழைக்கக் கூடியவர்கள். ஏர் உழுறாங்க, கவலையேத்தத்துல தண்ணி இறைக்கிறாங்க. உழைப்பாளிப் பெண் அவர்களையும் இயக்கத்துக்குக் கொண்டுவரலாம். உடனே இல்லன்னாலும் பின்னால். அப்புறம், இயக்கத்துலயே ஒரு நல்ல தோழரா பாத்துக் கட்டிக்கட்டும். முதலில்  நீங்கள் வாங்க. தங்கச்சியச் சொல்லிப் புரட்சிய ஒத்திப் போடாதீங்க.” 

இலெனின் தலையசைப்பால் தன் ஏற்பைச் சொல்லப் பெரியவர் புன்முறுவலால் அவரைப் பாராட்டினார். பெரியவர் என்று அப்போது அறியப்பட்டிருந்த ஏஎம்கே மீது இலெனின் கொண்டிருந்த நம்பிக்கை அத்தகையது! இத்தனைக்கும் அவர் ஏஎம்கே என்றே தெரியாமல்!

அதெல்லாம் முடிந்து ஐந்தாண்டு கழித்துச் சந்திக்கிறோம். சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சந்திக்கிறோம். எங்கள் தோழமையின் பாசம் குன்றவில்லை. ஒருவர் மீது ஒருவர் கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் குறையவில்லை. ஆனால் அரசியலில் கடுமையாக மாறுபட்டு நிற்கிறோம். அந்த மாறுபாட்டை விவாதித்தால் போக்கி விட முடியாதென்று தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். பிரிந்தவர்கள் கூடிய மகிழ்ச்சி பெரிதா? கருத்தொருமித்துக் கூடியவர்கள் கருத்து மாறுபட்டுப் பிரிந்த ஏமாற்றம் பெரிதா?

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பார்கள். அரசியலில் சேர்ந்திருந்தவர் பிரிந்தால் பேசவும் கூடுமோ என்பதுதான் அது வரை எனக்கும் இலெனினுக்கும் கிடைத்த அனுபவமாக இருந்தது. நக்சலைட்டு இயக்கம் எனப்பட்ட மா.இலெ.(எம்-எல்) கட்சியின் திட்ட அடிப்படைகள் யாவும் தவறானவை என்று நாங்கள் நிலையெடுத்து அறிவித்திருந்தோம்.

இந்தியா அரைக்குடியேற்றம்தானா? இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் என்பது சரியா? இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எவ்வாறு புரிந்து கொள்வது? இவை போன்ற அடிப்படை வினாக்களுக்கு விடை தேடி இரு நீண்ட கட்டுரைகள் எழுதிச் சுற்றுக்கு விட்டிருந்தேன். தமிழ் படிக்க முடியாத சில தோழர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தேன். பிறகு அந்தத் தோழர்களில் சிலர் எங்களோடு பேசுவதே இல்லை. வேறு சிலர் ஒப்புக்கு மட்டும் பேசுவர். அவர்களின் வருத்தமும் கோபமும் உணர்ச்சி வகையில் நியாயம்தான் என்று நாங்கள் பொறுத்துப் போவோம். உயிராய், உயிரினும் மேலாய் ஒன்றை மதித்து அதற்காகவே நெடுஞ்சிறைத் தண்டனை பெற்றிருப்பவர்களிடம் போய், “ஐயா, உங்கள் அடிப்படையே தவறு, அவலை நினைத்து உரலை இடித்துள்ளீர்கள்” என்று சொன்னால் கோபம்தானே வரும்? ஆனால் அப்படிச் சொல்லும் உரிமை எங்களுக்கு உண்டு என்று நம்பினோம். ஏனென்றால் நாங்களும் அதே காரணத்துக்காக நெடுஞ்சிறைத் தண்டனை பெற்றிருந்தோம். செய்தது தவறு என்றால் அந்தத் தவற்றில் எங்களுக்கும் பங்கு இருந்தது.

இதெல்லாம் தோழர் ஏஎம்கேக்குத் தெரிந்திருந்தது. அவர் என் கட்டுரைகளை ஏற்கெனவே படித்திருந்தார். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே மேதை இலெனின் எழுதிய கட்டுரையைக் கொடுத்துப் படிக்க சொன்னார். நானும் படித்துவிட்டுப் பேசினேன். ஆனாலும் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.

எங்கள் விவாதம் முடிவுற்ற நாள் மாலை அறையடைப்பு (லாக்கப்) முடிந்த பிறகு நான் இலெனினைக் கூப்பிட்டுக் கேட்டேன்:

“என்ன இலெனின், மனசுக்குச் சங்கடமா இருக்கா?”

“ஆமா, தியாகராசா!”

“இதெல்லாம் நாம் எதிர்பார்க்க வேண்டும். நமக்கிருக்கிற மாதிரிதான் அவருக்கும் இருக்கும்?  ஏஎம்கே என்ன சொன்னார் தெரியுமா? எவ்வளவோ பேசணும் என்று வந்தேன்; பேச முடியாத அளவுக்கு நீங்கள் விலகிப் போயிருப்பீங்க என்று நினைக்கவில்லை என்றார்.”

“சரி இப்ப என்ன பண்றது?”

“நம் வேலயை நாம் பார்க்க வேண்டியதுதான்.” 

இப்போது ஏஎம்கே என்ன செய்யப் போகிறார்? மற்ற சிலரைப் போலவே எங்கள் மீது வெறுப்புக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாரா? அல்லது முன்போலவே இயல்பாகப் பழகுவாரா?

மறுநாள் காலை திறந்து விட்டிருந்த நேரத்தில் ஏஎம்கே தன் அறைக்கு எங்களை இயல்பாக அழைத்துப் பேசினார்:

“வேறுபாடுகள் இருந்தா இருக்கட்டும், பின்னால பாத்துக்குவோம் சிறையில் இருக்குற வரைக்கும் சேர்ந்து என்ன செய்ய முடியும்னு பாக்கலாம். அதற்கு நம் வேறுபாடு தடையா வர வேண்டியதில்லை.”

இந்த அணுகுமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. கடலூர் சிறையில் நடைபெற்ற போராட்டங்கள், குறிப்பாகப் பொன் நாடார் கொலை தொடர்பான போராட்டம் — எல்லாவற்றைப் பற்றியும் ஏஎம்கே எங்களுக்கு விரிவாகச் சொன்னார். திருச்சி சிறையில் நடந்து முடிந்த போராட்டங்கள். குறிப்பாகத், தோழர் ஏசி.கத்தூரிரெங்கனின் வழிகாட்டுதலில் நடைபெற்ற மேத் திங்கள் போராட்டம் – எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் அவருக்குச் சொன்னோம்.

மேத் திங்கள் போராட்டத்துக்கு முன் நாங்கள் அப்போது கடலூர் சிறையிலிருந்த ஏஎம்கேவுக்கு இரகசியமாய்க் கடிதம். அனுப்பியிருந்தோம். அது குறித்து ஏஎம்கே சொன்னார்:

“ஆமாம், உங்கள் கடிதம் கிடைத்தது. ஆனால் சிறைக்குள் பெருந்திரள் அமைப்பு – mass organisation – கட்டுவது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அது நல்லதல்ல என்பதற்காக அல்ல. அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், சாத்தியமில்லை என்கிறேன். உணர்வுமிக்க சிலரைக் கருமையமாக – core – வைத்துக் கொண்டு இயங்குவதுதான் சாத்தியம். போராட்ட நடவடிக்கையில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அதுதான் சிறையில் சாத்தியம்.”

ஒரு நாள் ஏஎம்கே என்னைக் கூப்பிட்டு, ஆங்கில நாளேட்டில் வந்திருந்த சில செய்திகளை மற்றத் தோழர்களுக்காகத் தமிழில் படித்துக் காட்டும்படிச் சொன்னார். படித்து முடித்த பின் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காரல் மார்க்குசு எழுதிய மூலதனம் நூலைத் தமிழாக்கும் திட்டம் பற்றி இலெனின் குறிப்பிட்டார். நான் ஏஎம்கேயைப் பார்த்துச் சொன்னேன்:

”மூலதனத்தை நான் மொழிபெயர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாய் இலெனின் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான்தான் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்களும் நானும் சேர்ந்து மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் சிறையில் சேர்ந்து செய்கிற வேலையாக இது இருக்கட்டும்.”

‘இல்லை, தியாகு, நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனக்கும் ஆங்கிலம் தெரியும். உங்களுக்குத் தமிழ் தெரியும். எனக்கும் தமிழ் தெரியும். ஆனால் மொழிபெயர்ப்பதற்கு இது போதாது. ஆங்கிலத்தில் இருப்பதை இயல்பாகத் தமிழில் சொல்லத் தெரிந்திருக்கவும் வேண்டும். அது எனக்கு அவ்வளவாக வராது. உங்களுக்கு நன்றாகவே வருகிறது.”

“எனக்குத்தான் பயமாக இருக்கிறது.”

*உங்களுக்கென்ன பயம்? நான் சொல்கிறேன். இதை நீங்கள்தான் செய்யப் போகிறீர்கள். நீங்கள் செய்யா விட்டால் யாரும் செய்யப் போவதில்லை.”

ஏஎம்கே உளமாரத் தந்த ஊக்கம் என் தயக்கத்தைப் போக்கி விட்டது. மார்க்சோடு பழகி அவரது பெரும் படைப்பை தாய்மொழிக்குப் பெயர்க்க எனக்கிருந்த கடைசி மனத் தடையும் சரிந்து விழ, ஒரு புதிய இலக்கியப் பயணத்துக்கு ஆயத்தமானேன்.

ஒரு வகையில் இன்றும் அந்தப் பயணத்தில்தான் உள்ளேன் எனலாம்.

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 23