தோழர் தியாகு எழுதுகிறார் 34 : படிப்பொலிகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 33 தொடர்ச்சி)
படிப்பொலிகள்
இனிய அன்பர்களே!
தாழி மடலில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எப்படியெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து வேறுபட்ட சில முன்மொழிவுகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.
மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரன் எழுதுகிறார்:
தோழர் தியாகுவுக்கு. தங்களின் ‘தாழி மடல்’ தொடர்ந்து வாசிக்கின்றேன்.
தோழர்களோடு நாள்தோறும் உரையாடுவதற்கான மிகச்சிறந்த வடிவம் மடல் வரைதல். கைபேசியில் வாசிப்பதற்கும் மிக வசதியாக சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது.
தங்களின் தூய தமிழ்ப் பதங்களின் பயன்பாடு வாசிப்பின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, எழுத்தின் நடைக்கு ஒரு நிறைவைத் தருகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலம் ஐயா வெளியிட்ட ‘நந்தன்’ என்ற மாத இதழ் உங்களுக்கு நினைவிருக்கும். அரசியல் பயில ஆரம்பித்திருந்த இளம் தோழர்களுக்கு இடதுசாரி அரசியல், பகுத்தறிவு அரசியல், தேசிய இன அரசியல் எனப் பலவற்றை பல்வேறு படைப்பாளிகளைக் கொண்டு மிக எளிமையாக அறிமுகம் செய்தது நந்தன். அரசியல் அடிப்படை பயில உதவியாக இருந்தது மட்டுமல்ல, பல இளம் வாசகர்களைத் தன்னை நோக்கி ஈர்த்தது. அந்த நந்தனின் இடத்தை உங்களின் தாழிமடல் தற்போது நிரப்புகிறது.
தாழி மடல் பல இளம் வாசகர்களை ஈர்க்கவல்லது.
மேலும் தங்களிடமிருந்து நாங்கள் கேட்பதற்கும், எங்களுக்குக் கூறுவதற்கு உங்களிடமும் நிறையவே உள்ளன. தமிழக அரசியல் வரலாறு, இடதுசாரி இயக்கங்களின் மாற்றங்கள், மொழிப் போர், மார்க்கியம், மொழிபெயர்ப்பு, அரசியல் ஆளுமைகள் என பலவற்றைப் பற்றி நிறைய எழுதுங்கள்.
தோழர்கள் ஏ.எம்.கே, ஏ.சி.கே., ஏ.கே.பாலன், அப்பு, சாரு மசூம்தார்(Charu Majumdar) இவர்களைப் போன்ற இன்னோரன்ன இடதுசாரித் தோழர்களைப் பற்றி நீங்கள்தான் எங்களுக்கு கூற வேண்டும். நீங்களும் எழுதவில்லையென்றால் யார்தான் இவர்களைப்பற்றி எழுதுவது? இப்படியான மனிதர்கள் இருந்தார்கள் என்பதே இளம் தலைமுறை அறியாமல் போய் விடும். நிறைய எழுதுங்கள் தோழர்.
வாய்க்கு வந்ததெல்லாம் வரலாறு என்று பேசப்படும் இன்றைய சூழலில், காமராசர் அரசியல் தொடங்கி தமிழ்த் தேசிய அரசியல் வரையிலான தங்களது பயணத்தில், காய்தல் உவத்தலின்றி தமிழகத்தின் வரலாற்றினைக் கூற உங்களிடம் நிறையவே உள்ளது.
பெரும்பான்மையினர் அறியாத ‘சிறை உலகம்’ பற்றி உங்களின் எழுத்துகள் மூலமாகவே அறிந்தோம். தமிழில் சிறை இலக்கியம் மிக மிக குறைவு. தாழி மடலில் சிறை பற்றி எழுதுங்கள் தோழர் அது மிகச்சிறந்த ஆவணமாக இருக்கும்.
தங்களின் விருப்பப்படி தூய தமிழில் மார்க்குசின் மூலமுதல், பொதுமைக் கட்சி அறிக்கை, செவ்வகராதி போன்றவற்றை வெளியிட வாழ்த்துகள். உங்களின் முயற்சிக்கு என்றும் துணை நிற்பேன்.
*****
செவ்வகராதி தொகுக்கப்படுவதின் தொடக்கமாகத் தாழிமடலில் தினமும் ஒரு சொல்லையும், அதற்கான பொருளினையும் எழுதத் தொடங்கலாம் என்பது எனது கருத்து. சிறுகச் சிறுக எழுதித், தோழர்களின் கருத்துகளையும் அறிந்து செழுமைப்படுத்தி கொண்டே சென்றால், பின்னாளில் அகராதி தொகுப்பது சற்று எளிமையாக இருக்கும் தோழர்.
+++
நலங்கிள்ளி எழுதுகிறார்:
முதலில் செய்திகளைச் சுருக்கமாகத் தருவதாகக் கூறினீர்கள். இப்போது மிகவும் நீண்டு செல்கிறதே. அதுவும் ஒரே நேரத்தில் இரு செய்திகள் தருகிறீர்கள். கிட்டத்தட்ட ஒரு கட்டுரை போல் நீள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்புடன் நகர்த்திச் செல்லலாம் எனக் கருதுகிறேன்.
++
இதோ, ததேவிஇ அமைப்புச் செயலாளர் தோழர் மகிழன் எழுதுகின்றார்:
நலங்கிள்ளியின் வினாவில் எனக்கு உடன்பாடு உண்டு. நீங்கள் தாழி தொடங்கும் போது ஒரு பக்கம் அல்லது ஓரிரு பக்கத்துக்கு மிகாமல் இருக்கும் என்று கூறியது நினைவிருக்கலாம். நான் கூட அண்ணாவின் தம்பிக்குக் கடிதம் போல என்று கருதினேன், பலருக்குச் சொல்லவும் செய்தேன். ஆனால் தற்போது நீண்டு கொண்டே செல்கிறது. பலவற்றை அதிலே கொண்டுவரலாமா என்று சிந்திக்கிறீர்கள், பலரும் எழுதுவதாக அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். சுருங்கச் சொன்னால் தாழி ஒரு நாளேடு போல் நாள்தோறும் பல செய்திகளைத் தாங்கி வர வேண்டும் என்பது உங்கள் அவா.
இவை அனைத்தும் நான் அறிவேன். அனைத்தையும் கற்கவும் ஆர்வமாக உள்ளேன். ஆயினும் இன்றைய தலைமுறையினர், குறிப்பாக இளைஞர்கள் இதனைப் படிக்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சுகிறேன். பரந்துபட்ட அளவில் தாழி மடல் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவிற்கு இந்த நீல அகலம் தடையாகும் எனக் கருதுகிறேன். துளி தேன் போல தாழி மடல் செறிவான அரசியலைக் கொண்டதாக இருக்கிறது. அதனை அளவோடு பருகும் திறன் இன்றைய வாசகர்களுக்கு உண்டு என்பது என் எண்ணம். சிறுது சிறிதாகவாவது விரிவுபடுத்தலாம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 24
Leave a Reply