தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்
(தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்-தொடர்ச்சி)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் திறந்த மடல்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு. என் கனிவான வணக்கத்தையும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினையும் ஏற்க வேண்டுகிறேன்.
உங்களுக்கிருக்கும் கடுமையான நேர நெருக்கடிக்கிடையே எனக்காகச் சில நிமையம் ஒதுக்கி, இந்தச் சுருக்கமான மடலைப் படிக்க வேண்டுகிறேன்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரிமுத்து-மகாலட்சுமி சாதியாணவக் கொலைக்கு நீதி கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் சென்ற 17/08/2023இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்த் தேசிய மார்க்சியக் கழகத் தோழர்கள் அழைத்ததன் பேரில் நேரில் சென்றிருந்தேன். அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு எதிரில் நான் கண்ட ஒரு சுவரொட்டிதான் இம்மடலை நான் எழுதத் தூண்டுதலாயிற்று.
நீலநிறத்தில் அச்சிடப்பட்டிருந்த சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் இதுதான்:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேனி மாவட்டம், பெரியகுளம், காந்தி நகரில்
மாரிமுத்து – மகாலட்சுமி காதலர்கள் தற்கொலை!
தமிழக அரசே!
தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்!
பட்டியல் சமூகத்தை சார்ந்த மாரிமுத்து குடும்பத்திற்கு
அரசே நிவாரணம் வழங்கு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேனி (கி) மாவட்டம்
தொடர்புக்கு: 98438 24156 – 88705 66044
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தச் சுவரொட்டியில் அண்ணல் அம்பேத்துகர் படமும் உங்கள் படமும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன.
நடந்தது என்ன? சென்ற 2023 ஆகடு\டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டனர்.
இ’து ஒரு சாதி ஆணவ இரட்டைக் கொலை என்று மாரிமுத்துவின் பெற்றோரும் ஊராரும் சந்தேகப்படுகிறார்கள். மகாலட்சுமியின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவரது தாய்தந்தையரும், குடும்பத்தினரும், தோழர் மதியவன் இரும்பொறை தலைமையிலான போராட்டக் குழுவினரும் போராடி வருகின்றனர். மாரிமுத்துவின் சடலமும் பிணவறையில் கிடந்த படி நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.
இது கொலையல்ல, தற்கொலைதான் என்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தற்கொலைக்குத் தூண்டிய அல்லது தள்ளி விட்ட குற்றம் நிகழ்ந்துள்ளது. தணிந்த சாதியினருக்கு(தலித்துக்கு) எதிராகத் தணிந்தசாதியர் (தலித்து) அல்லாதவர் புரிந்த குற்றம் என்பதால் இது ப.சா.-ப.இ.(எசுசி எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ வரக் கூடிய குற்றமாகும்.
ஆனால் காவல்துறையோ இந்தச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மறுத்துக் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருகிறது. இந்த வழக்கு ப.சா.-ப.இ.(எசுசி எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியப்பட வேண்டும் என்பதுதான் குறைந்தபட்சக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதில் தேனி (கி) மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்ன தயக்கம்? காவல்துறை சொல்வதையே இந்த சுவரொட்டியும் சொல்லும் போது பாதிப்புற்ற மக்கள் என்ன நினைப்பார்கள்?
தேனி மாவட்டக் காவல்துறையும், குறிப்பாகப் பெரியகுளம் காவல் நிலையமும் சாதிய வன்மத்துடன் செயல்படுவது அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வுகளின் போதே வெளிப்பட்டது. அம்பேத்கருக்கு மாலையணிவிக்க வந்த மக்கள் மீது தடியடி, ஊரூராகப் புகுந்து மாணவர்கள் – இளைஞர்களைப் பிடித்துப் போய்ப் பொய் வழக்கில் சிறை, முருகன் என்பவரின் மார்பில் பச்சை குத்தப்பட்ட அம்பேத்துகர் உருவத்தின் மீது உதை… என்று அடுக்கடுக்காக நடந்த சாதி வெறிக் காவல்துறை வெறியாட்டங்களைக் கண்டித்து தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என்னுடன் தோழர் வன்னியரசும் கலந்து கொண்டார். அதே தணிந்த சாதியர்(தலித்து)-பகைக் காவல்துறைக்கு ஆதரவாக தேனி (கி) மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உங்களையும் அம்பேத்துகரையும் காட்டிச் சுவரொட்டி ஒட்டுவது எப்படி?
மாரிமுத்துவும் மகாலட்சுமியும் தற்கொலைதான் செய்து கொண்டார்கள் என்பதை தேனி (கி) விசிக தோழர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். தற்கொலை என்பதை அறுதியிட்டுச் சொன்ன பிறகு அதற்கான காரணத்தை மட்டும் அரசு விசாரணை செய்ய வேண்டும் என்பது முரணல்லவா?
அப்படியே தற்கொலைதான் என்று உறுதி செய்தாலும் தற்கொலைக்குத் தள்ளி விட்ட குற்றவாளிகள் மீது ப.சா.-ப.இ.(எசுசி எசுடி) வன்கொடுமைச் சட்ட வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட ஏன் ஆதரிக்க வில்லை? மகனைப் பறிகொடுத்த தாயின் கோரிக்கையைக் கூட ஆதரிக்க முடியாதா? காவல்துறைக்கு உவப்பான கோரிக்கையை மட்டுமே எழுப்புவது சரிதானா?
இத்தனைக்கும் நடுவே மாரிமுத்துவின் பெற்றோரும் ஊராரும் நம் மக்களும் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை சாலப் பெரிது. தலைவருக்குத் தெரியாமல்தான் இந்த ஊரில் சிலர் இப்படிச் செய்கின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர். உயிருடனோ உயிரில்லாமலோ மாரிமுத்துவின் நம்பிக்கையும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். இளஞ்சிறுத்தையாகக் களமாடி வழக்குகள் பல கண்ட முத்தல்லவா? அவரது போர்க்குணம் அறிந்துதான் “உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் பெரியகுளம்!” என்று என் தாழி மடலில் எழுதினேன்.
என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்வது சரியாக இருக்காது. செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். மாரிமுத்துவுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைக்கு உங்கள் குரல் – சிறுத்தைகளின் குரல் – வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்…
தோழமையுள்ள, தியாகு / சென்னை — 19/08/2023.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 289
21.08.2023, திருவள்ளுவராண்டு 2054, ஆவணித் திங்கள் 4,
Leave a Reply