(தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(அ.2.)

கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு


இஃது எல்லாராலும் முடிவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபித்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில் அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதற்கான திட்டத்தையும் சொல்வார் அவர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பின்பு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்து, ‘பூண்டி வாண்டையார் அவுட், மூப்பனார் அவுட். எல்லோரையும் குளோசு பண்ணிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரைத் திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விட்டுவிட்டோம். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதால் கல்லூரி நிருவாகமும் அவரைச் சேர்த்துக் கொண்டது. அவர் படிப்பு முடிந்ததும் அவரது குடும்பம் அவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விட்டது. உண்மைநிலைக்குப் பொருத்தமில்லாத, புறச்சூழலை உள்வாங்காத கொள்கைகளால் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இதுபோன்ற நிலையை நீங்கள் இயக்கத் தலைமையிடம் எடுத்துச் சொல்லவில்லையா?

இயக்கத் தலைமையெல்லாம் எதுவும் கிடையாது. சீனாவில் எப்படி மாசேதுங்கு தலைமையை யாரும் கேள்வி கேட்காமல் எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டதோ, அதேபோல் சாரு மசூம்தாரின் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முழக்கம் கூட எழுப்பப்பட்டது. சாரு மசூம்தார் ஒரு சருவாதிகாரியாகத்தான் செயல்பட்டார். மிகச் சாதாரணக் காரணங்களுக்காக இயக்கத்தில் பலரை அவர் வெளியேற்றினார். தொழிற்சங்கமே கூடாது என்றார். ‘வருக்க எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே உண்மையான பொதுவுடைமைவாதி(கம்யூனிசுட்டு’), ‘பத்து அழித்தொழிப்புக்களை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என எந்நேரமும் அழித்தொழிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் அவர்.

உங்கள் கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?

சோழகர் கொலை முயற்சிக்குப் பிறகு, சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டோம். பிறகு இரண்டாவது அழித்தொழிப்புக்குத் திட்டமிட்டோம். அப்போது தோழர் ஏ.எம்.கே.வும் இன்னும் சில தோழர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் அழித்தொழிப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என்னுடன் வேலை செய்தவர்கள் இருபத்தெட்டு, முப்பது வயதுடையவர்களாக இருந்தார்கள்.

அடுத்த அழித்தொழிப்பாகத் திருவோணம் முத்து தங்கப்பாவைத் தேர்வு செய்தோம். அவர் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் தோற்றுப் போயிருந்தார். சாதி ஆதிக்கம் உடையவர். சொந்தச் சாதி ஆட்களைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைச் சம்பாதித்திருந்தார். காவல்நிலையத்தில் கூட அவர் சொல்வதைத்தான் கேட்கும் நிலை இருந்தது.

அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அருகில் நெருங்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஆட்களுடனே வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து கண்காணித்த போது விடியற்காலையில் குளக்கரைக்குத் தனியாக வருவார் என்பதை அறிந்தோம்.

தோழர் இலெனின் தலைமையில் நாங்கள் அங்கே அவருக்காக காத்திருந்தோம். வெகுநேரம் கழித்து வந்த அவர் எங்களைப் பார்த்ததும், ‘யாருடா, திருட்டுப் பயல்களா?’ என்று கேட்டவாறே எங்களை நெருங்கினார். நாங்கள் மெதுவாக நகர ஆரம்பித்ததும், ஓடப் போகிறோம் என நினைத்த அவர் சுற்றி வயல்களில் வேலை செய்தவர்களைச் சத்தம் போட்டு அழைத்தார். தூரத்தில் ஆட்கள் ஓடிவர, அவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து எங்களை நோக்கி வீச ஆரம்பித்தார். உடனடியாகக் கையில் இருந்த அரிவாளால் தோழர் இலெனின் அவரை வெட்ட, மீதமுள்ள நான்கு பேரும் சரமாரியாக வெட்டினோம், குத்தினோம்.

ஓடிவந்த அந்த ஊர் ஆட்களில் ஒருவர் எங்களில் ஒருவரைப் பிடித்துவிட, தோழரை மீட்பதற்காக அவரது கழுத்திலும் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓடினோம். அந்த ஊரின் அமைப்பு தெரிந்தவர்கள் தப்பித்து விட, நான் மாட்டிக் கொண்டேன். அந்த ஊர் மக்களுக்கு நான் நக்சலைட்டு என்றோ, நடந்தது அழித்தொழிப்பு என்றோ சொன்னால் எதுவும் புரியாது, நம்பவும் மாட்டார்கள். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அப்பு செட்டியார்தான் ஆள்வைத்துக் கொலை செய்து விட்டதாக அவர்கள் நம்பினார்கள்.

என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டும் நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். என்னை முத்து தங்கப்பா இறந்து கிடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று அவர் தலை மீது என் தலையை வைத்து வெட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு யாதவராசு என்ற விசாரணை அதிகாரியிடம், நான் யார் என்பதையும் எங்கள் நோக்கத்தையும் கூறினேன்.

கொலை நடந்த இடத்தில் ‘உனக்கு ஏன் மரணத்தண்டனை’ என்று கொலைக்கான காரணத்தை எழுதி உறையில் வைத்து போட்டிருந்தோம். கூடவே கொடி, மாவோ சிலை ஆகியவற்றை விட்டு வைத்திருந்தோம். கொலையை முடித்த பிறகு அங்கு நின்று முழக்கங்கள் எழுப்பி விட்டுத்தான் தப்பி ஓடினோம். இதையெல்லாம் அதிகாரியிடம் கூறினேன். அவர் அதையெல்லாம் கைப்பற்றி வந்தார். அவருக்கு இந்தக் கொலைக்கான காரணம் புரிந்து விட்டது. அவர் நக்சலைட்டு பிரிவுக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பில் ஈடுபட்ட இன்னும் இரண்டு தோழர்களை இரண்டு நாட்களில் கைது செய்தார்கள். கீழ்நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனையும், மறுவிசாரணையின் போது நாகை நீதிமன்றத்தில் எனக்கு மரணத் தண்டனையும் கொடுக்கப்பட்டது.

எங்களது அழித்தொழிப்பின் நோக்கம் ‘ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடைபெற்றால் அங்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படும், நிலச்சுவான்தார்கள் பயந்து ஓடி விடுவார்கள், அங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெறும், அந்த இடத்தைப் புரட்சிக்கான தளமாக மாற்றி விடலாம்’ என்பதுதான். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. முத்து தங்கப்பா கொலையைப் பொறுத்த வரை அந்தப் பகுதியில் அது கடுமையான சாதிப் பிரச்சனையாகத்தான் பார்க்கப்பட்டது.

அவர் கொலை நடந்த அன்று தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்றும், எங்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது அவரது சாதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்றும் கேள்விப்பட்டோம். ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மனத்தில் இந்தச் சம்பவம் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 296