(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி-தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(அ.1.)

நேர்காணல்: மினர்வா & நந்தன்

இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்


அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும் போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணிதிரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்?

அஃது ஒரு கடினமான வேலைதான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு சிற்றூருக்குச் சென்று தங்கி விட முடியாது. ஊரில் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித்தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்தான் எங்களை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்கள். அங்குச் சென்று ஏதாவது வேலை செய்வது போல் தங்கிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களுடன் பழகி, அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அழித்தொழிப்புச் செயலுக்குத் தயார்படுத்துவோம்.

நீங்கள் அழித்தொழிப்புக்குத் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கெனவே இருக்கும் மார்க்சிய, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களின் தோழர்களோடு உங்களது உறவு எப்படி இருந்தது?

எங்கள் பார்வை இதில் மோசமானதாக இருந்தது. அவர்களை விரோதிகளாகக் கருதிக்கொண்டுதான் நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவோம். தஞ்சைப் பகுதியில் பொதுவுடைமை இயக்க நிருவாகிகளாக இருப்பவர்கள் கட்சிக்காக நன்கு உழைக்கக்கூடிய நேர்மையான தோழர்களாக இருந்தாலும் எங்களது பார்வையில் அவர்கள் அனைவருமே விரோதிகள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஒதுக்கி விட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் கட்சிகளே நுழையாத புதிய சிற்றூர்கள்தான் எங்களது முதல் தேர்வாக இருந்தது.

உங்களது முதல் அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?

அழித்தொழிப்பு என்பது ஒரு போராட்ட வடிவம். அதுதான் சரியானது என்பது சாரு மசூம்தாரின் கருத்து. அந்த வகையில் நான் முதலில் வேலை செய்த சிற்றூர் திருவாரூர் அருகில் உள்ள பெரும்பண்ணையூர். அங்கிருந்து கொண்டு, முதல் அழித்தொழிப்புக்கு நாங்கள் தேர்வு செய்தது குடவாசல் அருகிலுள்ள பெருமங்கலம் ஊரைச் சேர்ந்த, முனுசாமி சோழகர் என்கிற நிலச்சுவான்தார். அவர்தான் அந்த ஊர் மணியக்காரர். சுற்றியுள்ள எல்லாச் சிற்றூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்மீது விரோதம் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் நாகப்பனின் சகோதரியைச் சோளகரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, அதைத் தட்டிக் கேட்கப் போன நாகப்பனை சோளகரின் மகன் கத்தியால் குத்தி விட்டான். இதுதொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது, அங்கு அதிகாரியின் நாற்காலியில் சோழகர் உட்கார்ந்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறித் தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதே போல் பல நிகழ்வுகள் அவர்களுக்குள் முரண்பாடு வருவதற்குக் காரணமாக இருந்தது.

இந்த நேரத்தில்தான் நாங்கள் சோழகரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற
முடிவுக்கு வந்தோம். தோழர் ஏ.எம்.கே.தான் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தலைமையில் அந்த ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதி மக்கள் சோழகர் மீது கோபமாக இருந்த போதும் திட்டமிட்டு அவர் மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டத்தின் முடிவில் ஏ.எம்.கே. எங்களிடம், ‘இந்த ஊரில் யாரும் உங்களுடன் வரா விட்டாலும் பரவாயில்லை, வேறு ஊரிலுள்ள யாரையாவது சேர்த்துக் கொண்டாவது சோழகரை அழித்து விடுங்கள்’ என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

ஏற்கெனவே நான் குடவாசல் அருகிலுள்ள கண்டியூர் என்ற கிராமத்தில் வேலை செய்து அங்குள்ள இளைஞர்களை அழித்தொழிப்புக்குத் தயார் செய்து வைத்திருந்தேன். நான், தோழர் மாணிக்கத்தின் மகன் பாலு, இன்னும் இரண்டு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அழித்தொழிப்புக்குத் தயாரானோம். உண்மையில் நானும் பாலுவும்தான் தாக்குதலில் ஈடுபட்டோம். சோழகர் திருப்பித் தாக்கியதும் மற்ற இருவரும் பயந்து ஓடி விட்டார்கள். பல இடங்களில் ஆழமான கத்துக் குத்துகள் விழுந்தும் சோழகர் பிழைத்து விட்டார். அதுதான் எங்களது முதல் அழித்தொழிப்பு முயற்சி.

ஆனால் இதில் எங்கள் மீது வழக்குப் பதிவு எதுவும் இல்லாமல் தப்பித்து விட்டோம். சோழகரிடம் மருத்துவமனையில் வாக்குமூலம் கேட்கும்போது தனக்குப் பகையாக அந்த ஊரில் இருந்த அனைவரது பெயரையும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினரும் அவர்களைக் கைது செய்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கொடி, துண்டறிக்கை எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தும் யாரும் எங்கள் மீது சந்தேகப்படவில்லை. இது எங்களுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

தமிழகச் சூழலில் அழித்தொழிப்பு என்பது எந்தளவுக்கு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது?

அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம்தான் சரி என்கிற சாரு மசூம்தாரின் அணுகுமுறையே மிகச் செயற்கையானதாகும். இதை என்னுடைய சிறை வாழ்க்கையின்போதுதான் உணர முடிந்தது. தமிழகத்திற்கு வரும்போது, எங்களைப் பார்த்ததும் சாரு கேட்கும் முதல் கேள்வியே, ‘அழித்தொழிப்பிற்குத்(annihilation) தயாராக எத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்பது தான். ‘அடுத்து யாரை அழித்தொழிக்கப் போகிறீர்கள், எத்தனை நாட்கள் தேவைப்படும், சரி உடனடியாகத் தயாராகி விடுங்கள். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் முன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுப் போய் விடுவார். இதுதான் அவரது உரையாடல் பாணி.

அந்தப் பகுதியின் நிலைமை என்ன, அந்தப் பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. அவரது வழியில்தான் அழித்தொழிப்புக்கு நாங்கள் ஆட்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்தது. கல்லூரியில் இருந்து நான் வரும் போது என்னைப் போல் வந்த தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களைத் தாக்குப் பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாகப் புரட்சி வரும், சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள், அது நடக்காமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள்; வேறு வேலைகளுக்குப் போய் விட்டார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். எத்தனைத் தோழர்கள் வந்தாலும் அவர்களைக் கல்லூரி விடுதியில் தங்கவைப்பது, அவரது ஊருக்கு வரும் தோழர்களைத் தங்க வைப்பது எனப் பல உதவிகள் செய்வார். அவரை இயக்கத் தலைமை ‘படிப்பை விட்டு விட்டு முழுநேர வேலைக்கு வா’ என்றழைத்தது. அவரும் வந்தவுடனே ‘அழித்தொழிப்பு செய்து விடலாம்’ என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது, பால் வியாபாரம் செய்துதான் அவர் தந்தை அவரைப் படிக்க வைத்தார்.

அந்தத் தோழரை ஏதாவது சிற்றூருக்கு அனுப்பினால் போன நான்காவது நாள் திரும்பி விடுவார். அவரால் அங்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. அழித்தொழிப்புக்குப் போகும் தோழர்களுக்குக் கருத்துகள், வழிமுறைகள் சொல்வதைத் தவிர இயக்கம் வேறு எந்த உதவியும் செய்வதில்லை. செலவுக்குப் பணமும் கொடுப்பதில்லை. நாங்களாகவே அங்குச் சென்று வேலை செய்து எங்களது தேவைகளை கவனித்துக் கொண்டு, அழித்தொழிப்புக்கு அங்குள்ள ஆட்களை தயார் செய்து வேலையை முடிக்க வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 296