(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (3)(இ)

திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு

நேர்காணல்: மினர்வா & நந்தன்

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய சிக்கல் அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான சனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக் கொண்டு ஈழச் சிக்கலைப் பார்க்கக் கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்குப் பரிசூதியம் 12 விழுக்காடா, 13 விழுக்காடா என்று போராட்டம் நடத்தி விட்டுத் தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்குச் சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் சோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வருக்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். சாதி குறித்துத் தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கியக் கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் வரன் தேடுவதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். செயசிக்குறு எதிர்ப்புப் போரை பெண்கள்தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூசாதான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதைச் சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கியுள்ளன.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறிய உயர்சாதி மக்களின் வீடுகளைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப் படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத் துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச் சாதியினரைக் கொண்டுவந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப் புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறுதான்.

என்னைப் பொறுத்த வரை சோபா சக்தி போன்றவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் பைத்தியங்கள், அல்லது அரசின் கைக்கூலிகளாகக் கூட இருக்கலாம், அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். ஓர் இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அஃது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல், அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்தான். கடைசி வரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் சனநாயகத் தன்மையைக் கட்டமைக்காதது, ஒரு பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீரமணி போன்றவர்கள் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ இல்லாததால்தான், அவர் பெயரைச் சொல்லிச் செயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டா என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக் கூடிய சமூகநீதித் தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்துதான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அருத்தத்தில்தான் அவரைத் தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகத் திராவிட இயக்கம் கைக் கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்கிறேன், அப்பா சொல்கிறேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். சனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நாம் அந்தக் கோணத்தில் அவரைத் தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் எந்த அளவுக்குச் சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வருக்கங்கள், அரசுகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரித்தானிய அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்தப் பிரித்தானியப் பேரரசு உங்களை ஆளும் பொறுப்பைச் சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியாதான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வருக்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தைப் புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமற்போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால்தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரத தேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வருக்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதைச் சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்குப் போராடுவதுதான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்குத் தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருண்மிய ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.


(கீற்று நேர்காணல் முற்றும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 301