(பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை – தொடர்ச்சி)

பூங்கொடி

அல்லியின் மறுமொழி

‘எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும!

வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ?

தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட

விழைதல் உண்டோ? விடுவிடு காமம்!    

 மழைமுகில் தொடுதர வானுயர் கோவில்

அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப்

புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர்

நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்;

வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள்    25

வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின்

விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்;  30

அல்லியின் வரலாறு வினவல்

`புயலைத் தடுக்கஓர் பொறியும் உளதோ?

மயலை விடுக்க மதியுரை புகன்றனை!

கயல்விழி! நன்’றெனக் காமுகன் நகைத்து, 

`மடம்படு மாதே! மற்றொன்று வினவுவல் 35

வடபுலந் திருப்போன் வளநிதி மிக்கோன்

வெருகன் எனும்பெயர் மருவிய ஒருவன்

பெறுமனை நீயெனப் பேசிடும் இவ்வூர்

அவனை நீங்கி ஆயிழை யிவளொடு 

சிவணிய தென்னை? செப்புக’ எனலும், 40

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி