(தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! இவர்களை நீங்கள் அறியாதிருக்க முடியாது. ஆனால் இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிஞர் தமிழ்ஒளியை உங்களில் பலரும் அறிந்திருக்க மாட்டீர்களோ? செ.து. சஞ்சீவி அவர்கள் அந்தப் பாவலரையும் அவர்தம் படைப்புகளையும் எனக்கு அறிமுகம் செய்வதற்கு முன் நானும் தமிழ்ஒளி குறித்து இருளில்தான் இருந்தேன். அவரைப் பற்றிப் புதுமலரில் எழுதும் படி அன்பர் குறிஞ்சி அழைத்த போது மீண்டும் ஒரு முறை தமிழ்ஒளியில் நனையும் வாய்ப்புப் பெற்றேன். இதோ தமிழ்ஒளி பற்றி உங்களை மேலும் அறியத் தூண்டும் ஓர் அறிமுகம் —

புதுவைக் குயில் தமிழ்ஒளி அறிவீரா?

இப்போதாவது அறிக!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக மே நாள் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எனும் பெருந்தமிழர். மே நாளைப் போற்றித் தமிழிலே முதல் கவிதை இயற்றியவர் பெருங்கவிஞர் தமிழ்ஒளி!

கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”

என்று மே நாளை வாழ்த்தி வரவேற்றார்.

மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில்

விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மே தினமே!

தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
சீவியமாய் நின்றதொரு சித்திரம் நீ; வானமரர்
காவியம் நீ; கற்பனை நீ; காணுமொரு காட்சியும் நீ!
தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”


“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை
என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!’


தமிழ் ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்” என்று தி க. சிவசங்கரன் அவர்களால் பாராட்டப் பெற்ற செ.து. சஞ்சீவி அவர்கள்தான் இதை எழுதும் எனக்குத் தமிழ் ஒளியின் பெயரையும் படைப்புகளையும் அறிமுகம் செய்தவர். தமிழ் ஒளி எழுதியவையும், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியவையுமான சில படைப்புகளின் வெளியீட்டு விழாவை செ.து. சஞ்சீவி சென்னை பெரியார் திடலில் நடத்திய போது என்னை அழைத்துத் தமிழ் ஒளியின் கவிதைகள் பற்றிப் பேசச் செய்தார். எப்போது என்று நினைவில்லை. 1990 வாக்கில் இருக்கக் கூடும். அதன் பிறகுதான் அவரிடம் ஆர்வம் கொண்டு படிக்கலானேன்.

பாரதி வழி வந்தவர், பாரதிதாசனின் மாணவர் என்றெல்லாம் அவர் பலவாறு அறியத் தரப்பெற்ற போதிலும் தூய பொதுமைப் பாவலராக விளங்கியதுதான் அவரது தனித் தன்மை என மதிக்கிறேன்.

விசயரங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி 1924 செட்டம்பர் 21ஆம் நாள் புதுவையில் பிறந்தார். சற்றொப்ப 41 ஆண்டு வாழ்ந்து 1965 மார்ச்சு 29ஆம் நாள் மறைந்தார். சற்றொப்ப 39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதியாரை விடவும், 72 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து மறைந்த பாரதிதாசனை விடவும் அரசியலில் தெளிவான முடிவுகளுக்கு வந்தவர் தமிழ் ஒளி என்பது என் துணிவு. யார் சிறந்த கவிஞர் என்பதன்று இந்த ஒப்பீடு. எல்லாவகையிலும் பாரதியார் மீது பாரதிதாசன் கொண்டிருந்த உயர் மதிப்பு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. ஆனால் பாரதியார் அடிப்படையில் இந்தியத் தேசியப் பாவலராகவே விளங்கினார் எனபதும், பாரதிதாசன் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலர் என்பதும் மாற்றவொண்ணா வரலாற்று உண்மைகள். தமிழ்ஒளி தூயப் பொதுமைப் பாவலராக விளங்கினார் என்பது சொல்லால் மட்டுமன்று, செயலாலும் உறுதிப்படும்.

புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியிலும் கலவைக் கல்லூரியிலும் படித்த தமிழ்ஒளி மாணவராய் இருந்த போதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையைப் படித்ததுதான் அவரது பொது வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திராவிடர் கழகத்தில் இருந்த போதே பொதுமைப் பாக்கள் புனையத் தொடங்கி விட்டார். மே நாள் வாழ்த்துப் பா குறித்துத் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்‘ என்னும் கவிதை எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின (உ)ரோசா ஆகிய மூன்று காவியங்கள் படித்தார்.

பொதுமை இயக்கம் இன்று வரைக்கும் கூட சாதியச் சிக்கலுக்கு உரிய முகன்மை தரவில்லை என்ற குற்றாய்வு உண்டு. வகுப்பு (வருக்கம்) அல்லாத குமுகக் கூறுகளை உரியவாறு அறிந்தேற்காத வகுப்புக் குறுக்கியத்தை (CLASS REDUCTIONISM) அப்போதே கடந்து நின்றார் தமிழ்ஒளி. வகுப்புச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் இணைத்துச் சாடும் தெளிவு தமிழ்ஒளியின் எல்லாப் படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது.

தலித்து என்ற சொல் அப்போதே புழக்கத்துக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க தலித்து என்ற சொல்லை ஆள்வதில் பிழையில்லை என்றால், தமிழ்ஒளியைத் தலித்து இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம்.

தமிழ்ஒளியின் மூன்று காவியங்களும் தணிந்த(தலித்து) மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், தணிந்த(தலித்து) மக்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் பேசுகின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தணிந்த(தலித்துப்) பெண்.

ஐந்து தொகுதிகளாக வந்துள்ள தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்களில் பெரும்பாலார் தணிந்தோர்(தலித்துகள்), தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களே.

அக்காலத்தில் இடதுசாரி இயக்கப் படைப்புகளில் நேராகச் சாதியச் சிக்கல்களைப் பேசுவதில் தயக்கம் காணப்பட்டது. சாதியை வெறும் மேற்கட்டுமானம் என்றும், கிழாரியச் சுரண்டல் ஒழிந்தால் சாதிய ஒடுக்குமுறையும் ஒழிந்து போகும் என்றும் கருதுவதே பொதுமை இயக்கத்தின் பொதுவான பார்வையாக இருந்தது. போராட்டப் பட்டறிவுகள் இந்தப் பார்வையில் மாற்றம் கொண்டுவந்த நேர்வுகளும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

அக்காலத்திலேயே தமிழ்ஒளி பாட்டாளியக் கண்ணோட்டத்தில் சாதிய எதிர்ப்பையும் தணிந்தோர்(தலித்து) விடுதலையையும் பாடினார்.

மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.

தாமரை இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகள் எழுதினார்.

தமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனைப்பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார்.

அகவை இருபது வரை புதுவையில் வாழ்ந்து பாரதிதாசன் இல்லத்திலேயே கிடையாய்க் கிடந்த தமிழ்ஒளி அக்காலத்தில் எழுதிய தம் கவிதைகள் அனைத்தையும் இரு தொகுதிகளாக்கி வெளியிடும் முயற்சியில் தோல்வி கண்ட பின் 1945இல் சென்னைக்குப் புறப்பட்டார்.

கவிஞர் தமிழ்ஒளி தோற்றத்தில் எளியவர் ஆயினும் தெளிவானவர், மனத்திட்பம் மிக்கவர்” என்பார் சஞ்சீவி. திடசித்தம் உடையவர். சென்னை வந்து ஈராண்டுக்குப் பின் கருப்புச் சட்டையைக் களைந்து பொதுமைக் கட்சியில் இணைந்தார். தடை செய்யப்பட்டுத் தலைமறைவான பிறகும் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேரப் பணியாளராகி முனைப்புடன் உழைத்தார்.

தமிழ்ஒளியின் பொதுமை இயக்கச் செயல்பாட்டின் காலம் 1947-54 என்பார் சஞ்சீவி. அவர் பொதுமை இயக்க அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ அல்ல, ஒரு பொதுவுடைமையாளராகவே வாழ்ந்தார், உழைத்தார். 1947இல் தமிழ் ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களின் அட்டைகளிலும் ‘சுத்தி அரிவாள்’ சின்னம் இடம் பெற்றிருந்தது.

இவை தவிர அவர் படைத்த தனிக் கவிதைகளின் திரட்டாக, ‘நீ எந்தக் கட்சியில்?’-‘மே தினமே வருக!’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறு நூல்களும் வெளிவந்தன. மேற்கூறிய இரு காவியங்களும், இரு கவிதைத் திரட்டுகளும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுக்கு அவர் செலுத்திய காணிக்கை என்றே கூறலாம்.

தமிழ்ஒளியின் புரட்சியமான வகுப்புப் போராட்ட(வருக்கப் போராட்ட)க் கவிதைகள் உலகில் வகுப்புப் போராட்டம் உள்ளளவும் பொருந்தக் கூடியவை.

பாட்டாளியாகவும் தமிழனாகவும் இருப்பதில் தமிழ்ஒளியின் ஓர்மைக்கு எவ்விதச் சிக்கலும் முளைக்கவில்லை.

அவர் தான் யார் என்பதை ஓங்கிச் சொன்னார்:

தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்!
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!”

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 319