(தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!

அட்டோபர் 7 இசுரேல் மீது ஃகாமாசு தாக்குதலுக்குப் பின் நூறு நாட்களுக்கும் மேலாயிற்று. இசுரேல் அரசு காசா மீது தரை வழிப் படையெடுப்புத் தொடங்கி 75 நாட்களுக்கு மேலாயிற்று. சற்றொப்ப 1,500 இசுரேலியர்களும் 20,000 பாலத்தீனியர்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடபப்டுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலார் போருக்குத் தொடர்பில்லாத குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்!

ஃகாமாசு பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் 130 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இசுரேலியச் சிறைகளில் ஆயிரக்கணக்கான பாலத்தீனியர் வதையுறுகின்றனர். அவர்களின் தொகை நாளும் பெருகி வருகிறது.

காசாவிலும் மேற்குக் கரையிலும் உயிரிழந்தோர் தவிர 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடுமையாகக் காயமுற்றுள்ளனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூட வாய்ப்பில்லை. காசாவின் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் இடம்பெயர்ந்துள்ளனர். உண்ண உணவில்லாமல், குடிக்க நீர் இல்லாமல், ஒதுங்கவும் பதுங்கவும் இடமில்லாமல் அம்மக்கள் பட்டும் பாடு சொல்லி மாளாது. காசா முழுக்கத் தரைமட்டமாக்கப்படுகிறது.

வெற்றுடம்போடும் வெள்ளைக் கொடியோடும் தங்களை நாடி வந்த பிணைக் கைதிகள் மூவரைக் கூட இசுரேலியப் பாதுகாப்புப் படை (IDF) சுட்டுக் கொன்ற கொடுமை இசுரேலிய அரசின் இனக் கொலை நோக்கத்துக்குச் சான்றாகும்.

இசுரேல் போர்நிறுத்தம் செய்ய மறுக்கிறது, அதற்கு அமெரிக்க வல்லரசு முண்டு கொடுத்து நிற்கிறது. ஈரரசுத் தீர்வை ஏற்றது வரலாற்றுப் பிழை என்று இசுரேலியத் தலைமைச்சர் நெத்தன்யாகு அறிவித்துள்ளார். அதாவது காசாமுனை, மேற்குக் கரை, எருசலம் உள்ளிட்ட பாலத்தீனம் முழுவதையும் இசுரேலுடன் இணைத்து அகன்ற இசுரேல் அமைப்பதுதான் அவரின் திட்டம். பாலத்தீன மக்களை இனவழிப்புச் செய்வதே இதன் பொருள்.

இந்தப் பகைப் புலத்தில் பாலத்தீன விடுதலையை ஆதரித்து உலகெங்கும் நடைபெறும் எழுச்சிப் பேரணிகளில் மண்ணதிர விண்ணதிர ஒரு முழக்கம் ஒலிக்கிறது:
FROM THE RIVER TO THE SEA
PALESTINE SHALL BE FREE

யோர்தான் ஆறு முதல் மத்தியதரைக் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!

இந்த முழக்கத்தை எழுப்புகிறவர்களில் பாலத்தீனர்கள், அராபியர்கள், முசுலிம்கள் 10 விழுக்காடு கூட இல்லை. இஃது உலகெங்கும் இளைஞர்கள், மாணவர்கள், முற்போக்காளர்களின் முழக்கமாக ஒலிக்கிறது. யூதர்களில் ஒரு பிரிவினரும் இதே முழக்கத்தை எழுப்புகின்றனர்.

இனவழிப்பின் பெருங்கொடுமையால் யூத மக்களைப் போல் துன்புறுபவர்கள் வேறு யாருமில்லை. தங்கள் பெயராலேயே இன்னோர் இனவழிப்பு – பாலத்தீன இனவழிப்பு — நடப்பதை அவர்கள் எப்படி ஒப்புவார்கள்? அதனால்தான் “NOT IN OUR NAME” என்று அவர்கள் முழங்குகின்றார்கள். யூத சமுதாயத்தின் உளச்சான்றாகிய அவர்களை உளமார வணங்குவோம்.

தோழர் தியாகு
தாழி மடல் 409

(தொடரும்)