(தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கைச்சரக்கா மார்க்குசியம்?

மார்க்குசுக்கு அடிக்கடித் தேர்வு வைக்கின்றனர். எந்த ஒரு சிக்கலுக்கும் மார்க்குசிய வழியில் தீர்வு காண்பது பற்றிய கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இசுரேல்-பாலத்தீனத்தின் மீத இசுரேல் நடத்தி வரும் இனவழிப்புப் போரைப் மார்க்குசிய வழியில் புரிந்து கொள்வதும் விளக்குவதும் எப்படி? இந்தியாவில் பாசிச பாசகவை எதிர்ப்பதற்கு மார்க்குசியம் வழிகாட்டுமா? குமுகிய நாடுகள் எனப்பட்டவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மார்க்குசியம் தரும் விளக்கம் என்ன? பொதுமைக் குமுகம்பற்றிய மார்க்குசியத்தின் நம்பிக்கை மாறாதுள்ளதா? இப்படிப் பல கேள்விகளை நான் செல்லும் இடமெல்லாம் சந்திக்கிறேன்.

ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன்: மார்க்குசியத்தைச் ‘சர்வரோக சஞ்சீவி’யாக நான் கருதவில்லை. தெளிவுள்ள மார்க்குசியர்கள் யாரும் அப்படிக் கருதவில்லை. அது அனைத்து நோய்களுக்குமான அருமருந்து அன்று. அதே போது தங்கள் தோல்விகளுக்கான பழியை மார்க்குசியத்தின் மீது சுமத்தி “மார்க்குசியக் கைச்சரக்கு” என எள்ளி நகைப்போரை வெறுத்து ஒதுக்குவது தவிர எனக்கு வேறு வழியில்லை.

மற்ற வகையில் மார்க்குசியர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்ளாத சில வரலாற்றாசிரியர்கள் கூட மார்க்குசியத்தைத் தமது ஆய்வுமுறையாகக் கொள்ளக் காண்கிறோம்.

ஆனால் மார்க்குசிய ஆய்வுமுறை என்பது என்ன? அதைத் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடியாதா? எப்படியும் எது மார்க்குசிய ஆய்வு முறை? எது மார்க்குசிய ஆய்வுமுறை இல்லை? மார்க்குசிய ஆய்வுமுறை தொடர்ச்சியான மாற்றத்தை வலியுறுத்துகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் மாற்றங்களுக்கு நடுவில் மாற்றமில்லாமல் தொடரும் சில அடிப்படைகளை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. மார்க்குசிய ஆய்வு முறையிலும் அவ்வாறான அடிப்படைகளைக் கண்டு தெளியலாம் என நம்புகிறேன். மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள் சிலவற்றைத் தெளிந்துரைக்க முயல்கிறேன்.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள்

“அறிஞர்கள் உலகத்தைப் பலவாறு விளக்க மட்டுமே செய்துள்ளனர்; ஆனால் அதனை மாற்றுவதுதான் முகன்மையானது” என்றார் காரல் மார்க்குசு. மார்க்குசிய ஆய்வுகளின் நோக்கம் உலகை மாற்றியமைப்பதாகும். குமுக மாற்றமே மார்க்குசியத்தின் குறி. இதற்கான ஒரு கருவியே மார்க்குசிய ஆய்வுமுறை.

மார்க்குசிய ஆய்வுமுறை இயங்கியல் பொருண்மியத்தையும் (dialectical materialism) வரலாற்றுப் பொருண்மியத்தையும் (historical materialism) அடிப்படையாகக் கொண்டது. வாழ்நிலைதான் உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்பதே பொருண்மியத்தின் சாறமாகும். “விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கும் செருமானியக் கருத்தியலுக்கு நேர்மாறாக நாங்கள் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏறுகிறோம்” என்று மார்க்குசும் எங்கெல்சும் அறிவித்துக் கொண்டார்கள்.

இயற்கை அறிவியலர் சார்லசு தார்வின் உயிரியல் படிமலர்ச்சியின் நெறிகளைக் கண்டுரைத்தார். குமுக அறிவியலர்கள் காரல் மார்க்குசும் பிரெடெரிக் மார்க்குசும் மாந்தக் குமுக வரலாற்றின் வளர்ச்சி நெறிகளைக் கண்டுரைத்தனர். வரலாற்றில் நிகழும் மாற்றங்களுக்கு என்ன காரணம்? குமுக மாற்றங்களும் புரட்சிகளும் போர்களும் எங்கிருந்து வருகின்றன? உடனடிக் காரணங்களும் தற்செயல் காரணங்களும் பற்பலவாக இருக்கலாம். ஆனால் உண்மையான அடிப்படைக் காரணம் என்ன?

எக்காலத்திலும் எக்குமுகத்திலும் மாந்தருக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் வசிக்க உறையுள்ளும் ஆகிய இன்றியமையாத் தேவைகள் உள்ளன. இவற்றோடு கூட நாகரிக வளர்ச்சியைப் பொறுத்து வேறு பல தேவைகளும் எழுகின்றன. இந்தத் தேவைகள் அளவிலும் பண்பிலும் வளர்ந்து சென்ற வண்ணமுள்ளன. இவற்றை மாந்தர்கள் இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையும் உழைப்புமே செல்வமனைத்துக்கும் அடிப்படைகளாகும்.

இயற்கையில் கிடைப்பவற்றைத் தமக்கு வேண்டியவாறு உழைப்பைக் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செயலையே ஆக்கம் (உற்பத்தி) என்றழைக்கிறோம். வெறுங்கையால் ஆக்கம் செய்ய இயலாது என்பதால் உழைப்புக் கருவிகள் தேவை. உழைப்பின் இலக்குப் பொருட்களையும் உழைப்புக் கருவிகளையும் சேர்த்து ஆக்கப் பொறிகள் என்கிறோம். ஆக்கப் பொறிகளையும் ஆக்கம் செய்யும் ஆக்குநர்களையும் சேர்த்து ஆக்க ஆற்றல்கள் என்கிறோம். ஆக்கத்தில் ஈடுபடும் மாந்தர்களுக்கிடையிலான உறவுகளே ஆக்க உறவுகளாகும். ஆக்க ஆற்றல்களும் (forces of production) ஆக்க உறவுகளும் (relations of production) சேர்ந்ததே ஆக்க முறை (mode of production) ஆகும். ஒவ்வொரு குமுக அமைப்பும் பொருளாக்க முறையை, அதாவது பொருளியல் அமைப்பை அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது.

குமுக அமைப்பின் அடித்தளமாகப் பொருளியல் அமைப்பும், மேற்கட்டுமானமாக அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவையும் உள்ளன. குமுகத் தேவைகள் ஓயாமல் வளர்ந்து செல்வதால் ஆக்க ஆற்றல்கள் மாறவும், அதனடிப்படையில் ஆக்க உறவுகள் மாறவும் வேண்டியுள்ளது. பொருளியல் அடிப்படை மாறும் போது ஏறக்குறைய அதற்கேற்ப அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றமே குமுக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படையாகும். குமுக அமைப்பு மாறுவதே குமுகப் புரட்சியாகும்.

ஆனால் பொருளியல் அடித்தளத்துக்கும் அரசியல், பண்பாடு உள்ளிட்ட மேற்கட்டுமானத்துக்குமான உறவைக் கொச்சையாகவும் எந்திரத்தனமாகவும் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று மார்க்குசிய மூலவர்கள் எச்சரித்தார்கள். மேற்கட்டுமானம் ஒப்பளவில் பொருளியல் அடித்தளத்திலிருந்து தற்சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த அடித்தளத்தின் மீது எதிர்வினையும் புரிகிறது. பொதுவாக அரசியல் புரட்சிகளே பொருளியல் அமைப்பின் அடிப்படை மாற்றத்துக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. அரசியல் மாற்றங்களில் கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றுக்குள்ள பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மார்க்குசிய ஆய்வுமுறையில் குமுக வளர்ச்சியை ஆய்வு செய்யும் போது முதன்மையான ஐந்து குமுகப் பொருளியல் அமைப்புகளாக அறியப்படுகிறவை: (1) தொல்பொதுமைக் குமுகம், (2) அடிமையுடைமைக் குமுகம், (3) கிழாரியக் குமுகம், (4) முதலிய அல்லது முதலமைக் குமுகம், (5) பொதுமைக் குமுகத்தின் முதற்கட்டமாகிய குமுகியக் குமுகம். இந்த ஐந்தைத் தவிர வேறு குமுக அமைப்புகளே இல்லை என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவை தவிர இடைநிலை அல்லது மாறுநிலை வடிவங்களும், ஒன்றுக்கு மேற்பட்டவை கலந்த வடிவங்களும் இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, சாதியப் பொருளாக்க முறையில் அதற்கேயுரிய கூறுகளோடு அடிமையுடைமை, கிழாரியம், முதலியம் ஆகியவற்றின் கூறுகளும் கலந்து காணப்படுகின்றன.

எந்த ஒரு குமுகத்தையும் நிலைத்து நிற்கிற ஒன்றாக அல்லாமல் இயக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கிற ஒன்றாக அணுகக் கோருவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. வரலாற்றுப் பொருண்மியம் என்பது வரலாற்றுக்கு இயங்கியல் பொருண்மியத்தை அல்லது பொருண்மிய இயங்கியலைப் பொருந்தச் செய்வதாகும்.

கற்பித்துக் கொண்ட புனிதமான சில பேருண்மைகளுக்கேற்ப மெய்ந்நடப்புகளை வளைக்காமல், மெய்ந்நடப்புகளிலிருந்து உண்மைகளை அடைய வலியுறுத்துவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. மெய்ம்மைகளிலிருந்து உண்மையை அடைதல் (From facts to truth) என்பார் இலெனின். தரவுகளிலிருந்து முடிவுகளுக்கு என்றும் இதைச் சொல்லலாம்.

தோழர் தியாகு
தாழி மடல் 413
(தொடரும்)