(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி

சொல்லடிப்போம் வாங்க! (4)

இனிய அன்பர்களே!

பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத் திறப்பதற்காகக் கர்நாடகத் தமிழர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. திருவள்ளுவர் பால் கன்னட மக்களுக்குப் பகை ஏதும் இல்லை. ஆனால் கன்னட இனவெறியர்களுக்கு அவர் தமிழர் என்பது ஒன்றே போதும். அதாவது இப்போது காவிரியில் உரிமைப் பங்கு கேட்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முப்பாட்டன் என்பதால்தான் பகை! இதற்கு மாறாக எளிய கன்னட மக்கள் “வள்ளுவர் சாமி” என்று போற்றி வணங்குவதைத் தாய்த் தமிழ் செங்கல் நடைப்பயணத்தின் போது கண்டேன்.

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் பல முறை பெங்களூரு வந்துள்ளேன். கடைசியாக, ஈராண்டுக்கு மேலிருக்கும், இங்குள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினேன். தமிழர்களும் கன்னடர்களும் சேர்ந்து நடத்தும் மகளிர் கல்வி அமைப்பு (சாவித்திரிபா பெயரில் என்று நினைவு) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்திருந்தேன். கருநாடகத் தமிழ்ச் சங்கத்தில் ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன்.

பாவலர் அறிவுமதியின் ‘குப்பி கடித்த புலிப்பல்’ வெளியீட்டுக்காக அறிவுமதி, சுபவீ, அருள்மொழி… உட்பட நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தோம். அன்று தோழர் கொளத்தூர் மணியும் எதிர்பார்க்கப்பட்டார். ஏனோ வரவில்லை. ஆனால் எல்லோருமே அவரையும் புலிகளின் ஆய்தப் போராட்டத்துக்கு அவர் செய்த ஆக்கப் பங்களிப்பையும் சுட்டிப் பேசினர். 

கருநாடகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் அண்ணாச்சியின் இராசாசி நகர் வீட்டில் தங்கியிருந்தோம். இதே வீட்டில்தான் தலைவர் பிராபாகரன் (சார்க்கு மாநாட்டுக்கு வந்த செயவர்த்தனாவுடன் பேசி முடிப்பதற்காக என்று சொல்லி அழைத்து வரப்பட்ட போது) தங்கினார்.

பிராபகரனின் அந்த பெங்களூரு பயணம் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியும்தானே? பிராபகரன் ஏற்றுக் கொண்டால் அவரை யாழ்ப்பாணத்துக்கு முதலமைச்சராக்கி விட அதிபர் செயவர்த்தனா முன்வந்தாராம். அதற்காக அவர் பிராபகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்ய எம்ஞ்சிஆரும் பண்ருட்டி இராமச்சந்திரனும் பெங்களூரு வந்து விட்டார்களாம். “பிராபகரன் முதலமைச்சர் ஆனால் என்ன?” என்று எம்ஞ்சிஆரும் கேட்டாராம். “நாங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம், முதலமைச்சர் பதவிக்காக அல்ல” என்று பிரபாகரன் தெளிவாக்கினாராம்.

தமிழ்நாட்டில் பிராபகரன் படத்தை போட்டுக் கொண்டே முதலமைச்சர் பதவிக்கு அலைகிற யாரைப் பார்த்தாலும் மேற்கண்ட பெங்களூரு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் போல் வருங்கால முதலமைச்சர் பதவியும் உண்டு. இரண்டு பதவிகளுக்குமே சரியான போட்டி! ‘வருங்கால முதலமைச்சர்’ கனவு மெய்ப்படத் தலைவர் பிராபாகரனின் பெயரையோ படத்தையோ பயன்படுத்துவது எப்படிப்பட்ட செயல் தெரியுமா? பீடி பற்ற வைக்கத் திருவிளக்கைப் பயன்படுத்துவது போன்றது. கடப்பாரையால் காது நோண்டும் முயற்சி என்றும் வண்ணிக்கலாம்.

பெருந்தொற்றுக் காலத்தில் பெங்களூர் வரவே இல்லை. அதற்கு முன்பும் இனம்புரியாத பெங்களூரு குளிரும் இனிமையான தமிழ் அன்பர்களும் கண்டு பல காலம் ஆகியிருந்தது. கடைசியாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகம் இல்லத் திருமணம் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வந்திருந்தேன். 

பெங்களூருவிலும் மைசூருவிலும் தமிழ்ச் சங்கங்கள் உயிர்ப்புடன் செயல்படக் கூடியவை. ஆனால் காவிரிக் கலவரத்தின் போது ஏற்பட்ட பட்டறிவைக் கணக்கில் கொண்டு கருநாடகத் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கமாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நிறுவப்பட்டது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் இயக்கம் இரண்டாகப் பிளவுற்றது. சிறிது காலம் இரு பிரிவுகளும் ஒரே பெயரில் இயங்கி வந்தன. ஒரு பிரிவினரின் அழைப்பின் பேரில் நான் பெங்களூரு வந்த போது மறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரண்டாம் பிரிவினரிடம், “நீங்கள் அழைத்தாலும் வருகிறேன்” என்று சொல்லி விட்டேன். அவ்வாறே அந்த ஆண்டு அவர்கள் நடத்திய மாவீரர் நாளில் கலந்து கொண்டேன். இரு பிரிவுகளும் ஒன்றுபட்ட, மீண்டும் ஒரே இயக்கமாக வேண்டும் என்பதை மட்டும் பலருள் ஒருவனாக நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். விரைவில் இரு பிரிவுகளும் ஒன்றுபட்டு விட்டன. ஒரே இயக்கமாக கருநாடகத் தமிழ் மக்கள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பயணம். அவர்களும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாள் தள்ளி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள். 

ஒரு நாள் கூட தாழி மடல் தேங்கக் கூடாது என்ற உறுதியால் கருநாடகத் தோழர்களின் கலகலப்புக்கு நடுவிலிருந்து இந்த அளவு எழுதி விட்டேன். எழுத வேண்டிய பலவும் எஞ்சியுள்ளன. நாளை எழுதுவேன்.

ஒரு மன நெருடலைத் தயக்கத்தோடுதான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: சவுக்கு சங்கர் உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடுவதோ அவருக்கு சீமான் ஆதரவு கொடுப்பதோ அரசியலில் எள்முனையளவும் தாக்கம் கொள்ளக் கூடிய செய்திகள் அல்லவே அல்ல. நமக்கு அது பற்றிக் கவலையே இல்லை. ஆனால் ஊடகர்கள் முன்னிலையிலேயே சீமான் சங்கரை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதை சங்கரே அனுமதித்தாலும், செய்தியாளர்கள் சீமானுக்கு “இது கண்ணியம் இல்லை” என்று சுட்டிக்காட்ட வேண்டாவா? அண்ணன் பண்ணையார், தம்பி பண்ணையாளா?

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 28