(தோழர் தியாகு எழுதுகிறார் 73 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இது 47ஆம் தாழி மடல். 47! பெயர் போலவே எண்ணும் ஓர் அருவக் குறியீடு. பருப்பொருளின் இருத்தல் வடிவங்களில் ஒன்று. பொருண்மைக்கு அப்பால் அதற்கொரு பொருள் இல்லை. இது இராசி எண், இது இராசியில்லாத எண் என்பதெல்லாம் மூடத்தனம். 100 என்ற எண் அகவையைக் குறிக்கும் போது  முதுமையைக் குறிப்பதால் மருளச் செய்கிறது. மதிப்பெண்ணைக் குறிக்கும் போது வெற்றியைக் குறிப்பதால் மகிழச் செய்கிறது.

47 என்ற எண் ஆண்டைக் குறிக்கும் போது 1947! வரலாற்றில் முக்கிய ஆண்டுகளில் ஒன்று! இரவில் வாங்கினோம் விடியவே இல்லை என்ற நறுக்குக்கு இலக்கான இந்திய விடுமையைக் குறிப்பது.

47 ஆகட்டு 15ஆம் நாள் கிடைத்தது விடுதலையா? விடுமையா? கொடி மாற்றத்தால் குறிக்கப் பெற்ற அதிகாரக் கைமாற்றமா? அல்லது நள்ளிரவு நாடகம் மட்டும்தானா? வரலாற்றில் இந்த நாளைத் துக்க நாள் என்று குறித்த பெரியார் கருத்து சரியா? அல்லது அவரோடு மாறுபட்டு அண்ணா சொன்னதுதான் சரியா?

பொதுமை இயக்கக் கருத்தியல் விவாதங்களில் 47க்கு ஒரு மையமான இடம் உண்டு. மா-இலெ கட்சி உள்விவாதங்களில் 1947 குறித்த மாறுபாடுகளுக்கு முக்கிய இடம் இருந்தது. சிறையில் ‘இந்தியப் புரட்சி’ பற்றி என் பார்வையில் மாற்றம் வந்த போது 47 குறித்து ஒரு கட்டுரை எழுதித் தோழர்களிடம் சுற்றுக்கு விட்டேன். அது பெரிய கருத்து மோதலுக்கு விட்டது.

2010ஆம் ஆண்டு காவிரித் தீரத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் என் தலைமையில் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் எடுத்தோம். இயக்க வரலாற்றில் அது ஒரு பெருநிகழ்வு. எத்தனை நாள் என்று கணக்கிட்ட போது 47 நாள் வந்தது. சனவரி 25ஆம் நாள் காலை கோடியக்கரையில் உப்புநீரில் கால் நனைத்துப் பயணம் புறப்பட்ட போது “இது 47 நாள் நடைப்பயணம், நமக்கொரு 47 தேவை என்பது நினைவிருக்கட்டும்” என்று சொல்லித் தொடங்கினேன். 47 நாள் நடந்து குடந்தை சென்றடைந்த போது 1,047 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) கடந்து முடித்திருந்தோம்.

நமக்கொரு 47 தேவை என்ற நினைப்பில் பிழை இல்லை. ஆனால் அது இந்திய 47 போல் ஏமாற்றி விடாமலிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் தேவை.

இலெனின் என்ன சொன்னார்?

தேசிய இனச் சிக்கலில் மார்க்குசியப் பார்வைக்காக ஒரு காலத்தில் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் போராடி அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இப்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவராக இருக்கும் தோழர் பெ. மணியரசன். இப்போது நிறையவே மாறி விட்டார்.

தேசிய இனச் சிக்கலில் மார்க்குசியப் பார்வை குறித்து இப்போது அவர் சொல்கிறார்:

”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. என்பது நமது திறனாய்வு. அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது காரல் மார்க்குசு அதை ஆதரித்தார். தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார். சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக, புறநிலை உண்மையாக தேச விடுதலைப் போராட்டம் இருக்கிறது என்பதை மார்க்குசும் இலெனினும் கூறவில்லை. ஒரு தேசிய இனம் தனக்கு முரண்பட்ட பிற தேசிய இனங்களிடமிருந்து பிரிந்து போகும் உரிமையான தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டும் இலெனின்  வரையறுக்கிறார்.”

(பெ. மணியரசன், திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? பக்கம் 15.)  

மார்க்குசியத்தின் மீதான இந்தத் துணிச்சலான திறனாய்வுக்கு விரிவாக விடை சொல்லத்தான் வேண்டும். அதற்குமுன், இலெனின்  குறித்து பெ.ம. சொல்வது மெய்தானா? என்று பார்த்து விடுவோம்.

“தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார்” என்று ‘திறனாய்வு’ செய்யும் பெ.ம. இதற்குச் சான்று ஏதும் தரவில்லை. எடுத்துக்காட்டு என்று எதுவும் குறிப்பிடவில்லை.

ஏதாவது ஒரு தேச விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, அந்தப் போராட்டத்தை எந்தெந்தக் கட்டங்களில் இலெனின்  ஆதரிக்க மறுத்தார் என்பதைப் பெ.ம. சுட்டிக்காட்டட்டும். தேசியத் தன்னுரிமையை (தேசியத் தன்-தீர்வுரிமையை) ஆதரிக்கக் கூடாத கட்டங்கள் என்று இலெனின்  சொன்னவற்றையும் அவர் நம் பார்வைக்கு வைக்கட்டும்.

நான் சொல்கிறேன்: தேச விடுதலைப் போராட்டத்தை,  தேசியத் ‘தன்னுரிமையை’  இலெனின்  எப்போதும் ஆதரித்தார். எந்தக் கட்டத்திலும் ஆதரிக்க மறுத்ததில்லை.

பெ.ம. சொல்வதன் பொருள்: ஒரு போராட்டத்தைத் தேச விடுதலைப் போராட்டம் என்று ஏற்றுக் கொண்டாலும் இலெனின்  அப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு; தேசியத் ‘தன்னுரிமை’ என்று தெரிந்தே இலெனின்  அவ்வுரிமையை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு என்பதாகும். பெ.ம.வின் இந்தத் ‘திறனாய்வு’க்கு அடிப்படை ஏதும் உண்டா? பார்ப்போம்.

தேசியத் தன்னுரிமை என்று பெ.ம. குறிப்பிடுவதும், தேசியத் தன்-தீர்வுரிமை என்று நான் குறிப்பிடுவதுமான தேசிய தன்தீர்வு(சுயநிருணய) உரிமை குறித்து இலெனின்   ஏராளமாக எழுதியுள்ளார். இவற்றுள் முதன்மையான இரு நூல்கள்:1914இல் எழுதிய தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை [THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION]; 1916இல் எழுதிய குமுகியப் புரட்சியும் தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமையும் [THE SOCIALIST REVOLUTION AND THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION].

இந்த இரு நூல்களையோ, வேறெந்த இலெனின்  எழுத்தையுமோ எடுத்துக்காட்ட பெ.ம. தமது திறனாய்வை — “தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை, (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார்” என்ற திறனாய்வை – உரிய சான்றுகளுடன் மெய்ப்பிக்க முற்படவில்லை. இனியாவது அந்த முயற்சியை அவர் செய்தால் நன்று.

இலெனின்  “தேசியத் தன்னுரிமையை” முழுமையாக ஆதரித்தார், அட்டி யின்றி ஆதரித்தார் என்பதே என் நிலைப்பாடு. இதற்கான சான்றுகள் இதோ:

1896ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பன்னாட்டுப் பேராயத்தின் தீர்மானத்தை இலெனின்   எடுத்துக்காட்டுகின்றார்:

இந்தப் பேராயம் அனைத்துத் தேசிய இனங்களின் முழு அளவிலான தன்-தீர்வுரிமையையும் ஆதரிப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறது; படை வகைதேசிய வகை அல்லது பிறவகை முற்றாதிக்க நுகத்தடியின் கீழ் அல்லலுற்று வரும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்கள் பாலும் பரிவு தெரிவித்துக் கொள்கிறது….

தேசியத் தன்-தீர்வுரிமையின் அரசியல் உள்ளடக்கமாகிய பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமைக்கும் பிரிவினைக்குமான தொடர்பை இலெனின்   இவ்வாறு வரையறுக்கிறார்:

அனைவருக்குமான பிரிந்து போகும் உரிமையை அறிந்தேற்றல்உருத்திட்டமான பிரிவினைச் சிக்கல் ஒவ்வொன்றையும் அணுகும் போது ஏற்றத்தாழ் வனைத்தையும்சிறப்புரிமைகள் அனைத்தையும்தனித்தொதுக்கம் அனைத்தையும் அகற்றும் கண்ணோட்டத்திலிருந்து மதிப்பிடுதல்.

மார்க்குசியத்தின் தேசியத் திட்டம் என்ன? என்ற வினாவிற்கு விடையிறுக்கும் போது இரத்தினச் சுருக்கமாக இலெனின்  முடிவுரைக்கிறார்:

அனைத்துத் தேசிய இனங்களுக்கும் முழுமையான உரிமைச் சமத்துவம்தேசிய இனங்களுக்குத் தன்-தீர்வுரிமைஅனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமை  மார்க்குசியமும் உலகமுழுவதன் பட்டறிவும்உருசியாவின் பட்டறிவும் தொழிலாளர்களுக்குக் கற்றுத்தந்துள்ள தேசியத் திட்டம் இதுவே.

ஆக, இலெனின்  தேசியத் தன்-தீர்வுரிமையை (தன்னுரிமையை) ஆதரித்த கட்டங்கள், ஆதரிக்காத கட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெ.ம. அவர்களே! இலெனின் இந்தக் கட்டத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை, தேசியத் தன்னுரிமையை ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார் என்று ஒரே ஒரு சான்றாவது காட்டுங்கள், பார்ப்போம்! ஒரு சான்றுமே இல்லாமல் உங்கள் மனத்தில் பட்ட எதையோ இலெனின் மேல் சாற்றுகிறீர்கள் என்றால்,  இது திறனாய்வு அன்று, அவதூறு! அவலை நினைத்து உரலை இடிக்கும் வேலை!

அன்று மணியரசனையும் பிற்காலத்தில் என்னையும் மறுப்பதற்கு பி.ஆர். பரமேசுவரன் முதலான தலைவர்கள் கையாண்ட முறைதான் மேற்கோள் உருவல்! அன்பர் கதிரவன் எடுத்துக் காட்டியது போன்ற சில மேற்கோள்களைப் புரியாத்தனமாக எடுத்துக் காட்டி அணிகளை மயக்குவது!

ஒரு முறை உமாநாத்து என்னைக் கேட்டார்; “நீங்கள் தன்தீர்வு(சுய நிருணய)வுரிமை வேண்டும் என்கிறீர்களா? நாங்கள் தன்தீர்வு(சுய நிர்ணய) உரிமை கூடாது என்கிறோம். மணியரசன் சொல்வதை நீங்கள் சொல்கின்றீர்கள்.”

“இல்லை, நான் இலெனின் சொல்வதைச் சொல்கிறேன்.”

அன்று இலெனின் எழுதியதை அடிப்படையாகக் கொண்டு வாதிட்ட பெ, மணியரசன் இப்போது அதே இலெனினை அவதூறு செய்யப் புறப்பட்டுள்ளார்.

அவர் மனத்தில் கொண்டுள்ள மேற்கோள்களில் ஒன்று அன்பர் கதிரவன் எடுத்துக் காட்டியதாக இருக்கக் கூடும்.  

நாளை தொடர்கிறேன்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  47