(தோழர்தியாகுஎழுதுகிறார் 76 தொடர்ச்சி)

வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

இனிய அன்பர்களே!

நெருக்கடிநிலைக் காலத்தில் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா) கைதியாகத் தோழர் இடும்பையனைச் சந்தித்தோம். சிறந்த பாடகர். கட்சி மேடைகளில் பாடிப் புகழ் பெற்றவர். தோழர் ஏசிகே அவர்களுடன் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்தோம். இடும்பையன் பாடிய படல்களில் முகன்மையான ஒன்று வெண்மணி பற்றியது. அவர் பாடக் கேட்டாலே கண்ணீர் வரக் கூடிய உணர்ச்சிப் பாடல். அவரும் பாடிக் கொண்டே அழுது விடுவார். மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்போம். இப்போது மயிலாடுதுறையில் இருக்கும் இடும்பையனை அழைத்து மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டேன். பாவலர் வரதராசன் எழுதிய அந்தப் பாடல் இதோ: [பூமாலையில் ஓர் மல்லிகை என்ற மெட்டில் பாடலாம்.]

தீயவர் தானென்று

நாம் நினைத்தோம்

அவர்  தீயிடுவாரென்று

யார் நினைத்தார்?

லாரியிலே வந்து சேரியிலே

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

(தீயவர் தானென்று,,,)

வெண்மணிக் கோரத்தைப்

போலிந்த நாடு

வன்முறைச் செய்தியை

காண்பதும் ஏது?

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

வெந்து மடிந்ததும்

வேறெங்கும் ஏது?

(தீயவர் தானென்று,,,)

அடியாட்கள் கைகளிலே

ஆயுதம் தாங்கி வர

திர்ச்சியுற்ற வாலிபரோ

வயற்பரப்பில் பதுங்கிருக்க

சேரிவாழ் பெண்களெல்லாம்

ஓடியே ஒளிந்திருந்த

சிறுவீட்டைப் பூட்டிவிட்டு

தீயோர் நெருப்பு வைக்க

பற்றியது கூரை

படர்ந்தது தீப்பிழம்பு

கத்தினார் கதறிநின்றார் – கதியேது

கொடியோர்க்குச் செவியேது?

பெண்ணுக்குப் பேய்கூட

ங்குமென்பரே – பேயினும்

தீயவர் தீயிலிட்டாரே

வன்முறை கூடாது

என்றுரைப்போரே என்றுரைப்போரே

வெண்மணிக் காரியம்

தான் புரிந்தாரே

     (தீயவர் தானென்று,,,)

+++

ஊமைச் சனங்களை ஊருள் எரிக்கையில்
ஆமை நடப்பதைப்
      
போல நடந்தால் நீ
       
ஆணவம் கொல்வாயோஅடே
        
ஆண் பிள்ளை ஆவாயோ?

தஞ்சை

ஊமைச் சனங்களை
         
ஊருள் எரிக்கையில்
         
ஒடுங்கிக் கிடந்தாயே! பின்னர்
          
ஊர்வலம் போனாயே!

ஒடுக்கும் விலங்கினை
         
ஒடுக்க நினைப்பவர்
          
ஒப்பாரி வைப்பாரோவெறும்
           
ஊர்வலம் போவாரோ?
 
உம்மை

ஒடுக்கும் விலங்கினை
          
ஊர்வலம் ஒப்பாரி
          
ஓங்கிப் புடைத்திடுமோஅடே
          
உதைத்துத் துடைத்திடுமோ?

கண்ணின் மணிகளைக்
         
கத்தியால் குத்தினால்
         
கைகட்டி நிற்பாயோஅவர்
         
காலில் விழுவாரோதஞ்சை

வெண்மணி மக்களை
         
வெட்டிப் பொசுக்கையில்
        
வேடிக்கை பார்த்தாயே! அடே
         
வீணே கிடந்தாயே!

எட்டி உதைக்கிற
          
ஈனரின் கால்களை
          
எடுத்து வணங்குவையோஅடே
          
இன்முத்தம் ஈகுவையோ?

மட்டி மடையர்கள்
          
மக்களைக் கொல்கையில்
          
மங்கிக் குமைந்தனையே! மனம்
         
தொங்கித் துவண்ட னையே!

அரைப்படி சேர்த்து
          
ஆறாய்க் கொடுமென
          
முறைப்படிக் கேட்டனையே ! அடே
          
முறையிட்டு நின்றனையே! அருள்

முறையிட்ட உம்மையே
          
மூண்டசெந் தீயினில்
           
முற்றும் எரித்தாரே! தோழா
            
மோதிப் புதைத்தாரே!

தங்கம் விளைக்கிற
          
தஞ்சை மறவனே!
         
பொங்கெனப்  போவாயோவெறும்
          
பொக்கென நிற்பாயோ?  புயம்

பொங்கித் துடித்திட
          
புலிபோல் பாய்கிற
           
போர்க்குணம் கொள்ளாயோபுதர்
          
வேருடன் கிள்ளாயோ?

முட்டுக்கு மேலொரு
         
முட்டுக் கொடுத்தாலும்
          
கட்டிடம்  நின்றிடுமோஅவர்
          
காலம் நிலைத்திடுமோ?

வெட்டுக்கு மேலொரு
          
வெட்டு கொடுத்தேனும்
          
தட்டி நொறுக்காயோமுரசு
          
கொட்டி முழக்காயோ?

பாலுக்கும் காவலன்
          
பூனைக்கும் தோழனாய்
          
பாவனை செய்வோரைத் – தமிழ்ப்
          
பாமரர் நம்பிடவோ உள்ளச்

சோலையில் நஞ்சினை
           
ஊட்டிடும் நாய்களை
           
ஓட்டிப் பொசுக்காயோஅவர்
           
ஊட்டி நசுக்காயோ?

துள்ளி வருகிற
          
வேலினை மார்பினில்
          
தூள்செய்யும் நாயகனே! மறக்
          
கால்கொண்ட  தூயவனே! தஞ்சைக்

குள்ள நரிகளைக்
           
குத்திக் கிழிக்கிற
           
கோபத்தில் முன்னேறு! அடே
            
கொன்றபின் நின்றாடு!
                                                — புலவர் ஆதி

 [வெண்மணி குறித்துப் புலவர் ஆதி எழுதிப் புதிய தலைமுறையில் வெளிவந்த இந்தக் கவிதை என்னுள் கிளறிய உணர்ச்சியை என்னென்பேன்? அடுத்த சில மாதங்களில் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அவரைப் பார்த்து மகிழ்ந்து ஊக்கம் கொண்டேன். 1960களின் இறுதியில்  வசந்தத்தின் இடிமுழக்கமாய் ஆர்த்தெழுந்த  நக்சல்பாரி இயக்கத்தின் மா கவிஞன் அவர். இயற்பெயர் இராசியண்ணன். நெல்லித்துறை நடவடிக்கைக்குப் பின் கைது செய்யப்பட்டு சொல்லொணா அடக்குமுறைகளைச் சந்தித்தவர். சத்தியமங்கலம் காடுகளுக்குள்  காவல் துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமையான சித்திரவதைகளை  அனுபவித்தவர். கொள்கை மாறா குணக்குன்று.  புதிய தலைமுறை ஆசிரியர் குழுவில் ஒருவர்.  கலை இலக்கிய பெருமன்றத்தில் தோழர் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு இலக்கியப் பேரவையை நிறுவியவர். தமிழ் இலக்கியங்களை மார்க்குசிய நோக்கில் ஆய்ந்து பல நூல்கள்  எழுதியவர்.திணைக் கோட்பாடுகளை மார்க்குசிய முறையில் திறனாய்வு செய்து தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர்.] 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 49