(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி)

இழிதொழில்புனிதமா?

காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் அள்ளும் தொழிலாளி.

ஒரு முறை அம்பேத்துகருடன் உரையாடும் போது காந்தி சொன்னார்: “அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.” 

அம்பேத்துகர்சொன்னார்: “இந்த இழிவான தொழிலை இந்தப் பிறவியிலேயே ஒழித்து விட வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் அடுத்த பிறவி வரை நீடிக்க விரும்புகிறீர்கள்.”

மனித மலத்தை மனிதர் கையால் அள்ளும் இழி தொழிலைப் புனிதப்படுத்துவதைத்தான் இன்றளவும் நரேந்திர மோதி செய்து வருகிறார். இன்றளவும் மலக்குழியில் மூச்சுத்திணறிச் சாகும் மனிதனுக்கு இந்தியக் குடியரசில் விடிவு காலம் பிறக்கவில்லையே! மலக்குழியில் சாவதுதான் இந்தப் புண்ணிய பூமியில் புனிதச் சாவோ?

தரவு : தாழி மடல் 59

++

கொல்கத்தாவின் கரும்பொந்துகள் 

கொடுஞ்சிறைகள்பற்றிப் பேசும் போது கொல்கத்தாவின் கரும்பொந்துகள் போல என்று படித்திருக்கிறோம். அவை என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

வங்காள மாநிலத்தின் தலைநகரமாகிய கொல்கத்தாவில் கிழக்கிந்தியக் கும்பினியின் வணிகத்தைப் பாதுகாக்க வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்களும் பிரித்தானியரும் கோட்டை கொத்தளங்கள் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று வங்காள நவாப்பு சிராசு-உத்-தவுலா ஆணையிட்டார். பிரெஞ்சுக்காரர்கள் அந்த ஆணையை ஏற்றுக் கொண்டார்கள். பிரித்தானியர் ஏற்க மறுத்து விட்டார்கள்.

பிரித்தானியரைத் தண்டிக்க வேண்டும் என்று சிராசு-உத்-தவுலா படைதிரட்டிச் சென்று வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டார்.

பிரிரத்தானியப் படையில் இருந்த இந்தியத் துருப்புகள் விட்டோடி விட்டதால் பிரித்தானியரால் வில்லியம் கோட்டையைப் பாதுகாக்க முடியவில்லை. 1756 சூன் 20ஆம் நாள் வங்காளப் படைகளின் முற்றுகைக்கு வில்லியம் கோட்டை வீழ்ந்தது.

கொல்கத்தாவில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளும் வணிகர்களும் சிராசு-உத்-தவுலாவுக்கு விசுவாசமான படைகளால் வளைத்துப் பிடிக்கப்பட்டு “கரும்பொந்து என்றறியப்பட்ட இருட்டறைக்குள் தள்ளப்பட்டனர்.

மொத்தம் 146 பிரித்தானியக் கைதிகளில் இருவர் பெண்கள்; காயமடைந்த ஆண்கள் பலர்; ஆல்வெல்லும் அவர்களில் ஒருவர். வாள்முனையில் அவர்கள் இரவெல்லாம் கோட்டையின் ‘கரும்பொந்து’க்குள் தள்ளப்பட்டனர். சிறு குற்றம் புரிந்தவர்களுக்காகப் பிரித்தானியர் கட்டிவைத்திருந்த காவல் கொட்டடிதான் கரும்பொந்து எனப்பட்டது. கொட்டடியின் நீளம் 18 அடி, அகலம் 14 அடி 10 அங்குலம் இரு சிறிய சாளரங்கள் இருக்கும். இதுதான் “கரும்பொந்து”.

மறுநாள் காலை 6 மணிக்குக் கொட்டடியைத் திறந்த போது பிணங்கள் குவிந்து கிடந்தன. 23 கைதிகள் மட்டும் உயிருடனிருந்தார்கள். அவசரமாகக் குழிதோண்டி சடலங்கள் புதைக்கப்பட்டன.

1950களில் பேராசிரியர் பிரிசென் குப்புதா செய்த கணக்கீட்டில் கரும்பொந்தில் அடைக்கப்பெற்ற கைதிகள் மொத்தம் 64, அவர்களில் உயிருடன் மீண்டவர்கள் 21 பேர் மட்டும். கைதிகளைக் கரும்பொந்தில் அடைக்க சிராசு-உத்-தவுலா ஆணையிடவில்லை என்பதற்கும், எல்லாம் முடிந்த பிறகுதான் அவருக்குச் செய்தி தெரிந்தது என்பதற்கும் பேராசிரியர் குப்புதா சான்றுகள் திரட்டிக் கொடுத்தார்.

பிறகென்ன நடந்தது? பிரித்தானியர் பழிவாங்காமல் விடுவார்களா? இராபர்ட்டு கிளைவு கொல்கத்தா மீது படையெடுத்து வந்து வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டார். அட்மிரல் சார்லசு வாட்சன் தலைமையிலான கப்பற்படையும் கோட்டை மீது குண்டு போட்டது. 1757 சனவரியில் பிரித்தானியரிடம் கோட்டை வீழ்ந்தது. பிப்ரவரியில் வெறும் 3,000 படையாட்களைக் கொண்டு இராபர்ட்டு கிளைவ் 50,000 வீரர்களும் பீரங்கிகளும் போர் யானைகளும் கொண்ட சிராசு-உத்-தவுலாவின் படையை பிளாசியில் தோற்கடித்தார்.  

சிராசு முருசிதாபாத்துக்குத் தப்பியோடினார். அங்கு அவருடைய மக்களே அவரைக் கொன்று உடலை ஆற்றில் வீசினார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்  60