(தோழர் தியாகு எழுதுகிறார்  108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி)

ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4)

இலவு காத்த கிளியாகத் திமுக அரசு

நலங்கிள்ளி எழுதுகிறார்

ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான் தனியார் பள்ளிகள் செய்கின்றன. அதையே அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் நாடு அரசும் நீட்டிக்க வேண்டும் எனத் தோழர் பொன்முருகு கவின்முருகு கூற வருகிறார். அவர் அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போல் இயங்க வேண்டும் என நினைக்கிறார்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் சருவாதிகாரக் கல்வித் திட்டத்தை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது.

தோழர் தியாகு கூட தாழி 72இல் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்குக் கட்டாய நீட் பயிற்சி அளிக்கிறது என நான் கூறியதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பதிலளிக்காமல் தவிரத்து விட்டேன் எனபது சரியன்று. தாழி மடல் 72க்குப் பிறகு அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.

மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவர்களைக் கட்டாயப்படுத்திப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்கிறார்களா? ஆம் என்றால் அது தவறுதான். மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் சருவாதிகாரக் கல்வித் திட்டத்தை ஏற்க முடியாது என்பதும் சரிதான்.

பொ.தே.(நீட்டு) தொடர்பாகத் தமிழக அரசு என்ன செய்கிறது? என்ன திட்டம் வைத்துள்ளது? என்பதை வெளிப்படையாகத் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதி சட்டப்படி பொ-வு(நீட்டி)லிருந்து விலக்குப் பெறும் முயற்சிகளை அக்கறையோடு தொடர்வோம் என்பதாக இருந்திருப்பின் குறை சொல்ல முடியாது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பொ-வு.வைட(நீட்டை) ஒழித்து விடுவோம் என்று வாக்களித்து வாக்கு வேட்டை நடத்தியது தவறு. இதனைத் திமுக தலைமை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். நீட்டைக் கொண்டுவந்தது நீயா நானா என்று அதிமுகவுடன் இலாவணடிக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதால் பயனில்லை.

பொ-வு(நீட்டு) விலக்குச் சட்டத்துக்கு ஆளுநர் / குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டித் தமிழ்நாட்டு மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். தமிழ்நாடு அரசல்ல, திமுக எனும் அரசியல் கட்சி போராட வேண்டும்.

இந்திய அரசமைப்பு எப்படி மாநிலத் தன்னாட்சிக்கு எதிராக உள்ளது என்பதைப் பெரியாரும் அண்ணாவும் எடுத்துக்காட்டியது போல் பரப்புரை செய்ய வேண்டும்.

இலவு காத்த கிளி போல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது கையறு நிலையின் வெளிப்பாடே தவிர வேறல்ல. ஆளும் கட்சிக்குப் போராட மனமில்லாமல் இருக்கலாம். ஆனால் போராட முன்வருவோரைத் தடை செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

20.01.2023, திருவள்ளுவராண்டு 2053, தை 6, வெள்ளி

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 76