(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 3/4

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் சேகரித்தது. 1993இல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 53,000 தமிழ் ஓலைச் சுவடிகள் உலகமெங்கும் உள்ள தனிநபர்கள், மற்றும் அமைப்புகள், நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது. மேலும் இந்த 53,000 தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 30,000க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகள் மருத்துவம் போன்ற பழைய தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக இருந்ததை ஆசியவில் ஆய்வு நிறுவனம் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும், தமிழனின் தொன்மைச் சிறப்பை, பழம்பெருமையைப் பறை சாற்றியது. ஆனால் இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியால் வெளிப்பட்டன என்ற தவறான தோற்றம் புகுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னரே நம் நாடு மருத்துவத்திலும், கட்டடக் கலையிலும், மிக உன்னத நிலையைப் பெற்றிருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகக் கரிகாலன் கட்டிய “கல்லணை“ யின் தொழில் நுட்பம் அனுபவம் வாய்ந்த ஆங்கிலேயப் பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடக் கலை நுட்பத்தை இன்றும் நம் நாட்டு அறிஞர்களும், பிறநாட்டு அறிஞர்களும் வியந்து பாராட்டுகின்றனர். மருத்துவக் கலை, கட்டடக் கலை, மற்றும் பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைத்தன. ஆகவே “தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் தொன்மையான அறிவியல்” என்ற தலைப்பில் மிகப் பெரிய ஆய்வுத் திட்டத்தை உருவாக்க திரு.சான் சாமுவேல் தீர்மானித்தார். இத்தகைய தொன்மையான அறிவியல் சிறப்புகளைக் கொண்ட ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆராய்வது, நூல்களாக வெளியிடுவது போன்றவை கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை திரு சான் சாமுவேல் உணர்ந்தார். மேலும் அறிவியல் சார்ந்த ஓலைச் சுவடிகளைக் குறித்த தனது ஆய்வுத் திட்டத்தை அமெரிக்கா, சப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களோடும் திரு சான் சாமுவேல் விவாதித்தார். மேலும் வெளிநாடுகளைச் சார்ந்த சில நிறுவனங்களிடம் தனது ஆய்வுத் திட்டத்திற்கு உதவுமாறு வேண்டினார். ஆனால் இத்திட்டத்தைப் பாராட்டிய அனைத்து வெளிநாட்டவர்களும், இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதில் சில இடையூறுகள் இருப்பதை விளக்கினார்கள். தனது ஆய்வுத் திட்டத்திற்கான நிதியுதவி வேண்டிப் பெரிய முயற்சிகளை எடுக்கத் திரு.சான் சாமுவேல் மேற்கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, பண்பாட்டு நிறுவனமான “யுனெசுகோ” நிறுவனத்துக்குத் தனது ஆய்வுத் திட்டத்தின் விரிவான கருத்துருவினை அனுப்பி வைத்தார். சில வாரங்களில் யுனெசுகோ நிறுவனத்திலிருந்து திரு சான் சாமுவேலின் முயற்சிக்குப் பதில் கிடைத்தது. உலகம் முழுவதிலுமுள்ள தொன்மையான நினைவுச் சின்னங்களை அடையாளங்கண்டு அந்த நினைவுச் சின்னங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையிலான திட்டம் இருப்பதாகவும், அத்திட்டத்தோடு இணைத்து ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்றும் யுனெசுகோ அமைப்பு தெரிவித்தது. யுனெசுகோவின் பதிலில் மிகவும் மகிழ்ச்சியடைந்த திரு சான் சாமுவேல் தனது மகிழ்ச்சியை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.

(யுனெசுகோவோடு இணைந்து தமிழ் ஓலைச் சுவடிகளைச் சர்வதேச அறிஞர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற மாபெரும் வெற்றியை நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்.)

1992ஆம் ஆண்டு போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் யுனெசுகோவின் வல்லுநர் குழுக் கூட்டத்திற்கு யுனெசுகோ ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரு சான் சாமுவேல் தனது ஓலைச் சுவடிகள் பற்றிய ஆய்வுத் திட்டத்தின் உட்கருத்தை வெளியிடலாம் என்று யுனெசுகோ திரு சான் சாமுவேலுக்கு அழைப்பிதழ் அனுப்பியது.

1992 செட்டம்பர் மாதம் 12ஆம் நாள் யுனெசுகோவின் கூட்டம் வார்சாவில் கூடியது. தொடக்க நாள் கூட்டத்தில் யுனெசுகோ நிறுவனத்தின் பொது இயக்குநர் தொடக்கவுரையாற்றினார். அவரது உரையில் உலகத்தின் நினைவுச் சின்னங்களைக் காக்க வேண்டிய சமுதாயப் பொறுப்பு மிகச் சிறப்பாக வலியுறுத்தப்பட்டது. இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதனின் அறியாமை, மற்றும் மனிதனின் ஆதிக்கப் போர்களினாலும் எத்தனையோ தொன்மையான நினைவுச் சின்னங்கள் அழிந்தன. இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து உயிருடன் இருக்கின்ற நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றியாக வேண்டும். என்பது அவரது பேச்சின் உட்கருத்தாக அமைந்தது.

இதன் பின்னர் சப்பானிய அறிஞர் திரு அகியோயாசு ஆசிய நாட்டுச் சுவடிகள் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். இவர் உரையாற்றி அமர்ந்தவுடன் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திரு.சான் சாமுவேல் அவர்கள் பேச எழுந்தார்.

அவரது பேச்சில் ”1,500க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்திய நாடு பல்வேறு மொழிகளின், இனங்களின், பண்பாடுகளின் சங்கமமாகக் காணப்படுகிறது. 1,500க்கும் மேற்பட்ட மொழிகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 22 மொழிகள் மட்டுமே வரி வடிவங்களைப் பெற்றுள்ளன. வரி வடிவங்களைப் பெற்றுள்ள இம்மொழிகளிலும் வரி வடிவங்கள் பெறாத பிற மொழிகளிலும் காலத்தை எதிர்த்து எதிர் நீச்சலிடும் தகுதி வாய்ந்த ஏராளமான வாய்மொழி இலக்கியங்கள் உள்ளன” என்றார். இவற்றையும் உலகின் நினைவுச் சின்னங்களின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும். என்ற திரு.சான் சாமுவேல் அவர்களது வாதத்தை வல்லுநர் குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“எழுத்து வடிவம் பெற்ற இந்திய மொழிகளில் உள்ள ”ஆபத்துக்கு இடமான ஓலைச் சுவடிகள்” குறைந்தபட்சம் (8,00,000 ) எட்டு இலட்சம் வரை இருக்கும். இவற்றுள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஓலைச் சுவடிகள் “சமற்கிருத மொழியைச் சார்ந்தவை”. சுவடிகளைக் காக்கும் முயற்சிகளைப் பொறுத்த வரையில் “சமற்கிருதச் சுவடிகளைக் காப்பதில் பல இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இம்முயற்சிகளுக்கு வெளிநாட்டு அறிஞர்களின் ஆதரவும் போதிய அளவிற்கு உள்ளது. ஆனால் சமற்கிருதம் தவிர்த்த பிறமொழி ஓலைச் சுவடிகள், குறிப்பாகத் திராவிட மொழிகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் கவனிப்பாரற்று, ஆதரவின்றி இந்திய நாட்டின் சிற்றூர்ப் புறங்களில் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கும், மக்களின் மூடநம்பிக்கைகளுக்கும், கறையானின் கொடிய வாய்க்கும் இடையில் சிக்கிக் காலந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.

இந்தியவியல் என்றால் சமற்கிருதவியல்” மட்டும்தான் என்று தவறாக கருதப்பட்ட நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிவந்தது. “காலப்போக்கில் திராவிடவியல் பற்றி முழுமையாக ஆய்வு இல்லையென்றால் இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது. என்பதைப் பல அறிஞர்களும், அனுபவபூர்வமாக உணரத் தொடங்கினர். எனவே 20 ஆம் நூற்றாண்டில் அது வரை புறக்கணிக்கப்பட்டிருந்த திராவிடவியல் ஆய்வு ஓரளவிற்குப் புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரே செவ்வியல் மொழியாகச் சமற்கிருத மொழி மட்டும் கருதப்பட்ட நிலை மாறித் தமிழும் செவ்வியல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை உலக அறிஞர்கள் ஒத்துக்கொள்ளத் தொடங்கினர்.

சான் சாமுவேல் சொல்கிறார்: கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கண வளங்களைக் குறைவறப் பெற்று இன்றும் இளமை குன்றாமல் திகழும் இந்தக் கன்னித் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமலோ, தமிழ் பற்றிய அறிவு இல்லாமலோ, இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது என்பதை நான்.. அழுத்தமாகக் குறிப்பிட்டேன். மேலும் இந்தியவியல் ஆய்வுக்கு அடித்தளமாக அமைகின்ற தென்னிந்திய ஆவணங்கள், குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று எடுத்துரைத்தேன்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த ஓலைச் சுவடிகள் வெள்ளைக்காரப் பிரபு ஒருவனின் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுவதற்காக அடுப்பில் விறகாகப் போட்டு எரிக்கப் பயன்பட்டதையும், மூட நம்பிக்கை மிக்க இந்நாட்டு மக்கள் பொங்கல் திருநாளின் போது சுவடிகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும், வைகை ஆற்றில் ஆடிப் பெருக்கின் போது புது வெள்ளம் வரும் போது நீரிலிட்டு ஆற்றுத் தேவதையின் பசியை நிறைவு செய்வதையும் நான் விரிவாக எடுத்துப் பேசியது பன்னாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியது. போர்களினாலும், இயற்கையின் சீற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகளின் ஆவணங்கள் அழியும் போது எங்கள் நாட்டின் கலைக் கருவூலங்களில் பெரும்பாலானவை மண்மூடிப் போக வேண்டிய கண்மூடிப் பழக்கங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் அழிகின்றன என்று நான் எடுத்துரைத்தேன்.

(தொடரும்)
குலோத்துங்கன்,
தோழர் தியாகு
தாழி மடல் 304