(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி)

யான் பெற்ற நல்லுரை 39

மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து.

தியாகராச செட்டியார்

தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு எவ்வளவு கௌரவம் இருந்ததோ அவ்வளவு கௌரவம் அவருக்கு உண்டு. பிள்ளையவர்களிடம் படிக்க வந்த பிறகு செட்டியாரைப் பற்றிய பேச்சு இடையிடையே நிகழும். அவர்களோடு பழகுபவர்களும் செட்டியாரது அறிவுவன்மையைப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருப்பதுண்டு. ஆதலால், செட்டியாரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று என் ஆசிரியர் எண்ணியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. இடைவழியில், நான் அவரிடம் படிக்கச் செல்வதாக முன்பு எண்ணியிருந்தேனென்பதையும் அவரைப் பார்க்கும் விருப்பம் எனக்கு அதிகமாக உண்டு என்பதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன்.

கும்பகோணம் வந்ததும் நேரே செட்டியார் வீட்டிற்கு வண்டி சென்றது. செட்டியார் சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். நாங்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை. ஆதலின் அவ்வீட்டுத் திண்ணையில் நாங்கள் இருந்தோம்.

எங்கள் வரவை அறிந்த செட்டியாருடைய மாணாக்கர் ஒருவர், விரைவில், வெளியே சென்று அவரை அழைத்து வந்தார். அவர், “ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? உள்ளேபோய் இருக்கக் கூடாதா? சாமான்களை எல்லாம் இறக்கி உள்ளே வைக்கச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். வந்தவுடன் பிள்ளையவர்களை அவர் சாசுடாங்கமாக நமசுகாரம் செய்தார்.

அவர் தோற்றம்

அவரைப் பார்த்தேன். பளபளவென்றிருந்தது அவர் தேகம். நல்ல சிவப்பு; அதிக உயரமும் இல்லை; குட்டையும் இல்லை. நல்ல பலம்பொருந்திய தேகக்கட்டு. அவர் நடையில் கம்பீரமும் பார்வையில் தைரியமும் பேச்சில் துணிவும் புலப்பட்டன. அவர் இடையில் தோய்த்துலர்ந்த ஒரு துண்டை உடுத்திருந்தார். யாரையும் அவர் இலட்சியம்செய்ய மாட்டாரென்றும் மிக்க கண்டவாதியென்றும் முன்பு நான் கேள்வியுற்றிருந்தேன்; அதற்கு ஏற்றபடியே அவர் நடையும் பேச்சும் இருந்தன. அவர் பிள்ளையவர்கள் முன் பணிந்து எழுந்தபோது, அவ்வளவு தைரியத்திலும் அலட்சியத்திலும் இடையே அப்பணிவு நன்றாக வெளிப்பட்டது. செட்டியார் எங்களுடன் வந்திருந்த பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து, “சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்யும்” என்று சொன்னார். அப்போது பிள்ளையவர்கள் இடைமறித்து, “நாங்கள் ஆகாரத்திற்குப் பட்டீச்சுரம் போவதாக எண்ணியிருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு என்னைச் சுட்டிக்காட்டி, “இவர் காலையில் ஏதேனும் சாப்பிடுவது வழக்கம். இவருக்கு எங்கேனும் ஆகாரம்பண்ணுவித்தாற் போதும்” என்றார். செட்டியார் உடனே என்னைத் தமக்குத் தெரிந்த இராகவாசாரியார் என்பவர் வீட்டிற்கு அனுப்பி ஆகாரம் செய்யச் சொன்னார். நான் ஆகாரம் செய்து வந்தவுடன் செட்டியார், “இவர் யார்?” என்று பிள்ளையவர்களைக் கேட்டார். தம்மிடம் நான் சில காலமாகப் பாடம் கேட்டு வருவதை அவர் சொன்னார்.

அன்று அமாவாசையாதலால் விரைவில் பட்டீச்சுரம் போய்ப் பூசை முதலியன செய்ய எண்ணிய என் ஆசிரியர் உடனே புறப்படத் தொடங்கினார். அப்போது செட்டியார் பெரிய தாம்பாளமொன்றில் இரண்டு சீப்பு வாழைப்பழத்தையும் சீனாக் கற்கண்டுப் பொட்டலத்தையும் எடுத்து வந்து ஆசிரியர் முன்பு வைத்தார். ஆசிரியர் பழங்கள் சிலவற்றையும் சிறிதளவு கற்கண்டையும் எடுத்துக்கொண்டார். உடனிருந்த நாங்களும் எடுத்துக்கொண்டோம். எங்களோடு செட்டியாரும் வேறு சிலரும் கொஞ்சதூரம் வந்தனர்.

செட்டியார் என்னிடம் பேசியது

நாங்கள் செல்லும்போதே செட்டியார் என்னைப் பார்த்து, ”என்ன என்ன நூல்கள் பாடம் கேட்டீர்?” என்று கேட்டார். விவரமாக நான் சொன்னேன். “சரி; இப்போது என்ன கேட்டு வருகிறீர்?” என்றார். அதற்கும் விடை கூறினேன்.

செட்டியார் என்னை விசாரிப்பதை அறிந்த பிள்ளையவர்களுக்கு மேலே கால் ஓடவில்லை. நான் பாடல் சொல்வதையும் பொருள் சொல்வதையும் அவர் கேட்கவேண்டுமென்று என் ஆசிரியர் எண்ணினார். ஆதலின், “எங்கேயாவது ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்ளலாமே; நடந்துகொண்டே கேட்பதைவிட ஓரிடத்தில் இருந்தால் அவரும் பாடல்கள் சொல்லிக்காட்ட அனுகூலமாயிருக்கும்” என்று செட்டியாரைப் பார்த்துச் சொன்னார்.

நாங்கள் கும்பேசுவரர் கோயிலுக்கு அருகில் அப்போது நடந்து வந்தோம். ஆதலின் அக்கோயிலின் மேற்கு வாசல் வழியே உள்ளே சென்று புறத்தே சிரீ சுப்பிரமணியமூர்த்தி ஆலயத்தின் முன்மண்டபத்தில் என் ஆசிரியர் அமர்ந்தார்; நாங்களும் உட்கார்ந்தோம்.

செட்டியார், “ஏதாவது பாடல் சொல்லி அர்த்தமும் சொல்லும்” என்றார். இத்தகைய சந்தர்ப்பங்களில் பாடல் சொல்வதும் பொருள் சொல்வதும் எனக்கு வழக்கமாயிருந்தன. நான் துறைசையந்தாதியிலிருந்து, “அண்ணா மலையத்தனை” என்று தொடங்கும் பாடலை இராகத்தோடு சொல்லி அருத்தமும் சொன்னேன். நான் இசையோடு சொன்னதை அவர் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.

செட்டியார் கேட்கக் கேட்க மேலும் மேலும் வேறு பிரபந்தங்களிலிருந்து செய்யுட்களைச் சொல்லி வந்தேன். செட்டியார் கேட்டு நிறைவடைந்தாரென்றே எண்ணினேன். நிறைவை அவர் வெளிப்படையாகக்காட்டவில்லை.

’பாடம் சொல்லுவீரா?’

“துறைசையந்தாதிப் பாட்டுச் சொன்னீரே; அந்நூல் முழுவதும் நன்றாகத் தெரியுமா?”

“ஏதோ ஒருவாறு தெரியும்.”
“அதைப் பாடம் சொல்லுவீரா?”

அக்கேள்வி என்னைப் பிரமிக்கச் செய்தது. துறைசையந்தாதி யமகமாதலால் கடினமானது. ஆதலின் அதை முற்றுமறிந்து தாரணம் செய்துகொள்வது அருமை. அவ்விசயத்தைச் செட்டியார் உணர்ந்தவர். ஆயினும் அவரது கருத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை.

“பாடம் யாருக்குச் சொல்வது? இவருக்கா? பாடஞ் சொல்லுவேன் என்று சொன்னால் கருவமுள்ளவனென்று எண்ணிக் கொள்வாரோ என்னவோ!” என்று நான் யோசிக்கலானேன். அதனால் நான் ஒன்றும் பதிலே சொல்லவில்லை.

என் ஆசிரியர் அப்போது செட்டியாரை நோக்கி, “என்ன அப்படிக் கேட்கிறாய்? நீ அந்த அந்தாதியைப் பாடங் கேட்டதில்லையா?” என்று வினவினார்.

“நான் கேட்டதில்லை. நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு இயற்றியதல்லவா அது? நான் கும்பகோணம் வந்த பிறகு நீங்கள் இயற்றிய நூல்களைப் பாடங் கேட்டதில்லை. ஆனாலும் அவற்றைப் படித்துப் பார்த்து இன்புற்றுப் பாடமும் சொல்லி வருகிறேன். நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு செய்த நூல்களுக்கும் அதற்கு முன்பு செய்தவற்றிற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. முன்பு பாடின பாடல்களில் சாத்திரக் கருத்துகள் அதிகமாக இல்லை. இப்போது பாடியுள்ள பாடல்களில் எவ்வளவோ அரிய கருத்துகளும் சாத்திர விசயங்களும் அமைந்துள்ளன. அவற்றைப் படித்துப் பார்க்கும்போது சிலவற்றிற்குப் பொருள் விளங்குவதே இல்லை. எவனாவது ஒரு புத்தகத்தை எடுத்துவந்து பாடஞ் சொல்ல வேண்டும் என்றால் விழிக்க வேண்டியிருக்கிறது. இந்த அந்தாதியிலுள்ள யமகத்துக்கு இலேசில் அர்த்தம் புரியுமா? உங்களிடம் வந்து கேட்டால்தான் விளங்கும்.”

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.