(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்சி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினைப் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கிச் சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் சி. சான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு சி. சான் சாமுவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள இசுகாட்டு கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க முனைவர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வேட்டியுடனும் சிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு சான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் படியாக நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு சி. சான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடிச் சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. சான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ்ப் புலவர்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. சான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனத்தில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு சான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

முனைவர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையைத் திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு சான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு சான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாகத் திரு சான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
குலோத்துங்கன், தோழர் தியாகு
தாழி மடல் 304