தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2
(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி)
ஏன் இந்தப் புத்தகம்? 2/2
1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு எதிரானது எனக் கருதினர்.
இத்தகைய இடஒதுக்கீட்டு ஆதரவு – எதிர்ப்புப் போராட்டங்களுடன், பொருளாதார அடிப்படையிலான 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களை ஒப்பிட்டால், நடந்த போராட்டங்கள் மிகச் சொற்பமே.
போதிய புரிதல் இன்மையா? நாட்டின் பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்பைக், கல்வி உரிமையைப் பாதிக்கும் சட்டத் திருத்தத்தைப் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டதேன்? இடஒதுக்கீடு பற்றிப் போதிய விழிப்புணர்வு சமூகத்தில் இல்லையா? ஏன் இந்த அமைதி?
எப்படியாகினும், அந்த அமைதி குலைக்கப்பட வேண்டிய அமைதி
இந்தியாவின் பெரும்பான்மை மக்களான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிலவும் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற போராட்ட உணர்வின் வெளிப்பாடே இந்தப் புத்தகம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், இந்நூலின் பதிப்பாளர் தோழர் பிரபாகரன் அழகர்சாமி, பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடிகளைத் தொகுத்து, ஒரு வெளியீடு கொண்டுவருவோம் என்றார். அதுவே ஆரம்பம். அவரின் எண்ணமே இந்நூலிற்கு மூலவித்து. அவரே முழு முதற்காரணம். அழகாகவும் செறிவாகவும் நூலைப் பதிப்பித்துள்ளார்.
நூலின்உள்ளடக்கம்
ஆங்கிலத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்திருந்த அறிஞர்களின் கட்டுரைகள், சட்டத் திருத்தத்தை எதிர்த்த நாடாளுமன்ற உரைகள், பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்த நீதிபதி இரவீந்தர் பட்டின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை எதிர்த்து வழக்காடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற வாதம், தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் உள்ளிட்ட பல தலைவர்களின் அறிக்கைகள், கருத்தரங்க உரைகள் பலவற்றின் தொகுப்பாக இந்த வெளியீடு அமைந்துள்ளது.
உயர்சாதி ஏழைகள் எனும் பெயரில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டில் எவ்வித நியாயமும் இல்லை என்பதைத் தரவுகளின் மூலமும், தருக்கத்தின் மூலமும், வரலாற்று உண்மைகள் மூலமும் வாசகர்களுக்கு உணர்த்தவே இந்நூல். மேலும், இந்த இடஒதுக்கீடு உயர்சாதி ஏழைகளுக்குப் பயனளிக்கும் என இந்த இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள் சொன்னாலும், அவர்களுக்கும் இது எதிரானது என்பதையும் தரவுகள் மூலம் சுட்டிக்காட்டும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பெரியாரிய-அம்பேத்துகரியப் பார்வையில் பொருளாதார இடஒதுக்கீட்டின் கேட்டைக் காத்திரமாக விமர்சிக்கும் கட்டுரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டைத் தீவிரமாகக் கொள்கைரீதியாகச் சாடும் திமுக, இராசத(RJD), அமஇமுக(AIMIM), இஒமுகூ(IUML) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட, ஆனால் அதிலிருந்து ப.சா, ப.ம.,பி.பி.வ.(SC, ST, OBC) மக்களை விலக்கி வைத்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மைத் தீர்ப்பை விதந்தோதும் கட்டுரை, தாராளமய-உலகமய-தனியார்மயத்திற்குப் பின்னர் உருவாகி வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் பின்னணியில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டாலும், அதன் நோக்கத்தை, நாடாளுமன்றங்களில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட முறையைக் கண்டித்த மார்க்குசியப் பொதுவுடைமை, பிசு ஜனதா தளம், தெலங்கானா இராட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஊடகங்களிலும் பொருளாதார இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான அல்லது நடுநிலையான கருத்துகளை வெளியிட்ட போதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைத் தீவிரமாக எதிர்த்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், ஏழைப் பார்ப்பனர் எனும் கட்டுக்கதையை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் தகர்த்தெறிந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் சமத்துவ உணர்வை மையமாகக் கொண்டு பொருளாதார இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் கட்டுரைகள், நீதிமன்றங்களில் நிலவும் பிரதிநிதித்துவத்தைச் சுட்டிக்காட்டி, அதன் பின்னணியில் பொருளாதார இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகள், நேரடி அரசு வேலைகள் குறைக்கப்பட்டுக் கூடுதலான ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்தும் சூழலில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், மேனாள் நீதிபதிகளின் கட்டுரைகள், இந்தியாவின் முன்னணி சமூகவியல், பொருளாதார அறிஞர்களின் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வகைக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சில கட்டுரைகள் வெளிப்படுத்தும் கருத்துகளில் எங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், பொருளாதார இடஒதுக்கீட்டைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த பார்வைகளை வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துள்ளோம்.
செண்பகம் துரைராசன் வழக்கு (1951) தொடங்கி, எம். ஆர். பாலாசி வழக்கு (1962), இந்திரா சஃகானி வழக்கு (1992), எம். நாகராசு வழக்கு (2006), சருனெயில் சிங்கு வழக்கு (2018) முதல் தற்போதைய பொ.ந.பி. (EWS) வழக்கு (2022) வரை இடஒதுக்கீட்டின் போக்கைத் தீர்மானிப்பதில் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு வரரையறை அவை, அதன் பின்னர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பங்களிப்பு பல கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளன.
காகா கலேல்கர் குழு அறிக்கை, மண்டல் குழு அறிக்கை, அவானூர் குழு அறிக்கை, சட்டநாதன் அறிக்கை, மாநாயகர் சின்ஃகோ குழு அறிக்கை, அசய் பூசன் பாண்டே குழு அறிக்கை எனப் பல குழுக்களின் அறிக்கைகளின் ஊடாக இடஒதுக்கீட்டின் வரலாறு பேசப்பட்டுள்ளது. பி.வி.வ.,ப.சா.,ப.ம.,(OBC, SC, ST) இடஒதுக்கீட்டைச் சீரழிக்கச் செய்யப்பட்ட முயற்சிகளும், பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட சூழ்ச்சிகளும் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. பழங்குடியினரான உத்திராகண்டு பார்ப்பனர்களின் கதையும் இடம்பெற்றுள்ளது.
நூலமைப்பு
இடஒதுக்கீடு வரலாறு பற்றிய நான்கு அறிமுகக் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூலின் அடுத்த பகுதியில், ஐந்தாவது கட்டுரை முதல் 95ஆவது கட்டுரை வரை, பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டையும், இடஒதுக்கீட்டை ஆதரித்த நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2019 சனவரி 8ஆம் நாள் அன்று எழுதப்பட்ட கட்டுரையில் தொடங்கி, நாள் வாரியாகப் பயணித்து, வழக்கறிஞர்களின் உச்சநீதிமன்ற வாதங்கள், நீதிபதி இரவீந்தர் பட்டு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு, அதன் பின் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான விமர்சனக் கட்டுரைகள் எனப் பரிணமித்து, 2023 மார்ச்சு மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் வரை ஏறுவரிசையில் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதிப் பகுதியில், 96ஆவது கட்டுரை முதல் 105ஆவது கட்டுரை வரை, 10% கொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்த அமைப்புகள், தலைவர்களின் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலினின் வீரியமான உரைகளோடு நூல் முடிகிறது.
பங்களித்தோர்:
பெரும்பான்மை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், பலரின் பங்களிப்போடு வெளிவந்துள்ளது. ஏழைகளுக்கான இடஒதுக்கீடு என்றால் அனைவருக்கும் உண்டுதானே என்ற கேள்வி கேட்டவரின் பங்களிப்பும் உள்ளது. நூல் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களின் பட்டியல் நூலின் இறுதிப் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது. நூல் உருவாக்கத்தில் பங்குபெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் உள்ளிட்ட, இந்நூலுக்காக உழைத்த அனைவருக்கும், மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தேவைப்பட்ட நேரத்தில் எல்லாம் வழங்கிய தோழர் நலங்கிள்ளிக்கும் நன்றி.
பொருளாதார இடஒதுக்கீடு எனும் சமூக அநீதிக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை ஒன்றுதிரட்டும் ஒரு கருத்தாயுதமாக இப்புத்தகம் விளங்கும் என்ற நம்பிக்கையில்.
தோழமையுடன்,
சு. விசயபாசுகர்
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374
Leave a Reply