நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்
அறிமுகம்
உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதை எவ்வாறு செய்யலாம் எனக் கருத்துகளைப் பதிவதே இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.
நடுகற்களின் அமைவிடம்
நடுகற்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. தொல்லியல் துறையில் ஓரளவிற்கு இதில் உள்ள நடுகற்களை அடையாளம் கண்டு இனம் பிரித்து அவற்றில் உள்ள கல்வெட்டுகளைப் படித்தறிந்து அதன் தகவல்களை, புத்தகங்கள், இதழ்கள், கட்டுரைகளாக வெளியிட்டு உள்ளனர். ஆனால் தொல்லியல் துறையினரால் படிக்கப்படாத, கண்டறியப்படாத பல ஆயிரம் நடுகற்கள் இன்னும் உள்ளன. இவை வரலாற்று ஆய்வாளர்கள், கல்லூரி மாணவர்கள் முதலானவர்களால் கண்டறியப்பட்டு அவற்றைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் நடுகற்களை, தொல்லியல் துறையினர், வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணில் படாமல் உள்ளூர் மக்களால் ஏதோ ஒரு தெய்வம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்பட்டு அதைப் பேணி வருகின்றனர். நடுகற்களில் உள்ள தகவல்கள் பேரரசுகள் பற்றியும் சிற்றறசுகள் பற்றியும் செய்திகள் ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளப்பட்டாலும், நடுகற்கள் இறந்துபட்ட வீரனின் பெயர் இறந்தமைக்கான செய்தி போன்றவை உள்ளூர் வராலாற்றுச் செய்தியாகும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களுக்கான வரலாற்றுக் கருவூலமாக நடுகற்கள் திகழ்கின்றன. ஓர் ஊரில் நடுகல் இருந்தால் அவ்வூர் எந்தவிதத்திலோ வரலாற்று முதன்மை பெற இயலும். அந்நடுகற்கள் சொல்லும் செய்தியும், அதன் அமைப்பும், அதன் இருப்பிடமும், உள்ளூர் மக்களின் நம்பிக்கையும் அவ்வூரின் அல்லது அப்பகுதியின் வரலாற்றுக்கு முதன்மையான மூல ஆதாரமாகும்.
எடுத்துக்காட்டிற்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் கோயில் பற்றிக் கூறலாம். ஆனால் அவ்வூரிலும் அதன் அருகில் உள்ள ஊர்களிலும் வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த 20 நடுகற்கள் உள்ளன. இவை அந்தப் பகுதியின் வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் வெளிப்புறமாக அமைந்துள்ள வயல்களில், குளத்தின் கரையில், ஏரியின் கரையில் அமைந்துள்ளன. இந்நடுகற்கள் அக்காலத்தில் பெருமளவில் நீர்நிலைகளை நிறுவியது பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வீரர்கள் அமர்த்தப்பட்டனர் என்றும் அவ்வாறு அமர்த்தப்பட்ட வீரர்கள் எக்காரணத்தினாலோ இறந்து போனால் அவர்களின் நினைவாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்றும் தெரிவிக்கின்றன. இவை தவிர ஆநிரை மீட்க போராடி இறந்த வீரன் நடுகல், சதிக்கல், வேடியப்பன் கல், நவகண்டம் நடுகல், தொரு நடுகல், புலிகுத்திப்பட்டான் நடுகல் எனப் பலவகையான உள்ளன.
இன்றைய நிலை
நடுகற்கள் அக்காலத்தில் எந்த இடத்தில் நடப்பட்டதோ அதே இடத்தில் சில நடுகற்கள் இல்லை. வேளாண்மை அல்லது வேறு சில தேவைக்காக அவை பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டுள்ளன. சில நடுகற்கள் பெயர்த்து எடுத்து அருகில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில பெயர்த்து எடுத்து சாலையின் அருகில்,(File:HS-07.jpg) ஏதோ ஓர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது பெருகிவரும் வணிக மயச் சூழ்நிலையால் வேளாண்மை, குடிசைத் தொழில், சிறு தொழில், கைத்தறி போன்றவை நலிவடைந்து வருகின்றன. அதே சமயம், மனைவணிகம் (real estate) என்ற பெயரில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வது தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் அதிகரித்து வருகின்றது. இதனால் வயல் வெளியில் உள்ள சிறு கோயில்கள், பழைய மண்டபங்கள், நினைவுச்சின்னங்கள், நடுகற்கள் ஆகியன இருந்த இடம் சுவடு தெரியாமல் போகும் நிலையில் உள்ளன.
சான்றாக, திருவண்ணாமலை மாவட்ட தேவிகாபுரம் ஊரில் 2010 ஆம் ஆண்டு வயலில் இருந்த நடுகல் 2012 ஆண்டு அவ்வயல் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டதால் இப்போது அந்நடுகல் ஒரு தெருவின் மையத்தில் உள்ளது. தொடர்ந்து வீடுகட்டி குடியேற்றப்பட்டால் இந்நடுகல் காணாமல் போய்விடும் நிலை ஏற்படும். மற்றொன்று 2011 ஆண்டு குளத்தின் அருகில் மணல் தோண்டும் போது எடுத்து வீசப்பட்டிருந்தது. (File:HS-06.jpg)
அது தற்போது (2014 இல் ) எங்குள்ளது என்று தெரியவில்லை. இது போல் பல நடுகற்கள் தற்போது பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. ஏரி, குளம் போன்றவையும் தற்போது அதிக அளவு கவரப்பட்டு(ஆக்கிரமிக்கப்பட்டு) வரப்படுவதால் அப்பகுதியில் உள்ள நடுகற்களும் காணாமல் போகும் நிலையில் உள்ளன. இந்நிலை தொடரும் போது ஒவ்வொரு நடுகல்லும் காலத்தால் அழிந்து போகும் நிலை ஏற்படும்; வரலாற்று ஆர்வலர்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.
ச.பாலமுருகன் துணை வட்டாட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருவண்ணாமலை கைபேசி – 9047578421 மின்வரி balu_606902@yahoo.com
Leave a Reply