போலி நல்லிணக்கமும் நீதியும்:nallinakkamumneedhiyum

இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம்

பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை

  வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.

 சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற குறளுக்கு இலக்கணம்.

  மகளிர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பன்னாட்டுத் தூதுவர் கேதரீன் இரசல் தம்மைச் சந்தித்தபோது, தாயகத் தமிழரின் உள்ளக் கிடக்கையைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் முதல்வர். அதிலும் குறிப்பாக, ‘நல்லிணக்கம்’ என்கிற சொல்லை நார் நாராகக் கிழித்திருக்கிறார்.

  எதையுமே சுற்றிவளைத்துப் பேசி, சொல் மோசடிகளால் பூசிமெழுகுகிற அமெரிக்காவுக்கு, விக்னேசுவரனின் ஒளிவுமறைவற்ற கருத்துக்கள், எப்போதும்போல இப்போதும், ஒரு புதிய பட்டறிவாகத்தான் இருந்திருக்கும்.

  இனப்படுகொலையை மூடி மறைக்கவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும், ‘நல்லிணக்கம்’ என்கிற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது இலங்கை. இது உலகெங்கிலும் நடைமுறையில் இருக்கிற பாசிசப் பண்பு(!).

  தாங்கள் கொன்றுகுவித்தவர்களைத் தவிர எஞ்சியிருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலம் போடுவதும், ‘புனர்வாழ்வு’ ‘நல்லிணக்கம்’ என்றெல்லாம் கதைப்பதும் பாசிச சக்திகளின் வழக்கமாகிவிட்டது. கண்ணெதிரில் கணவனைக் கொன்றவர்கள், மனைவிக்கு பட்டுத்துணியில் வெள்ளைச் சேலை வாங்கிக் கொடுக்கும் வக்கிரத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

  நல்லிணக்கம் – என்கிற உன்னதமான சொல்லை வைத்து தனது கோரமுகத்தை மூடிமறைக்க இலங்கை முயல்வது, ஆகப்பெரிய கயமைத்தனம். அந்தச் சொல்லை இலங்கை ஏன் பயன்படுத்துகிறது – என்பதை அறிந்தும், நம்மில் சிலரே ‘நல்லிணக்க’ வகுப்பெடுப்பது அதைக்காட்டிலும் கயமைத்தனம். இந்த இரண்டையும் சேர்த்தே தோலுரிக்கிறது, விக்னேசுவரனின் சொற்கள்.

  “நல்லிணக்கம் என்று – தான் நினைப்பதைத்தான் இலங்கை அரசு   எம்மீது திணிக்கிறது. நல்லிணக்கம் என்பது திணிக்கப்படுவதல்ல. மத்திய அரசுடன் (விருப்பத்துடன்) சேர்ந்து நாம் பயணிப்பதுதான் உண்மையான நல்லிணக்கமாக இருக்கும்…..

  67 ஆண்டுகளாக இலங்கையில் (தமிழ்மக்களுக்கு) என்ன நடந்தது என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். அவர்கள் இதை உணரவேண்டியதும், அவர்களுக்கு இதை உணர்த்த வேண்டியதும் கட்டாயம். அவர்கள் அதை உணர்ந்தால்தான், இரு இனங்களும் நல்லிணக்கத்தோடு இணைந்து பயணம் செய்ய முடியும். இதை உணராவிட்டால், நல்லிணக்கமும் கிடைக்காது, நன்மையும் கிடைக்காது…..

  இலங்கையில் உள்ள மற்ற மாகாணங்களைப் போலவே எம்மையும் கையாளுகிறது மத்திய அரசு. இது தவறான போக்கு. எமது பகுதிகளில் இவ்வளவு காலமாக நடந்ததென்ன என்பதை அறிந்தும் இப்படி நடந்துகொள்வது தவறு. எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட வேண்டும். அவர்களது நிலை உயர்த்தப்பட வேண்டும். அதன்பிறகே மற்ற மாகாணங்களைப் போல எம்மையும் கருத முடியும்…”

  இது அமெரிக்காவுக்காக மட்டுமே விக்னேசுவரன் தெரிவித்திருக்கிற கருத்துக்களல்ல! பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் சேர்த்தே, இருக்கிற நிலவரத்தை யதார்த்தமாக தெரிவித்திருக்கிறார்.

  தமிழர் தாயகத்தில் பெண்கள் சந்தித்துவருகிற இன்னல்கள், 20க்கும் 40க்கும் இடைப்பட்ட அகவையில் கணவனை இழந்திருக்கும் இளம்பெண்களின் சிக்கல்கள் – என்று ஒன்றுவிடாமல் கேதரீனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் விக்னேசுவரன். கேதரீன் அதை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டார் என்பது தெரியவில்லை.

  ஒரே ஓர் உண்மையை மட்டும் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கேதரீன், நவநீதம் பிள்ளையல்ல! ‘சுற்றி நிற்கிற அரசு முகவர்கள் பற்றிக் கவலைப்படாதே… என்ன நடந்ததென்று என் காதுகளில் சொல்’ என்று எமது ஈழத்து உடன்பிறந்தாள்களை அருகே அழைத்து, அவர்களது கண்ணீர்க் கதைகளைக் கண்கலங்க கேட்டவர் நவ்விப் பிள்ளை. கேதரீன், பாதிக்கப்பட்ட உடன்பிறந்தாள்களில் எவரையும் சந்திக்கவுமில்லை, அவர்கள் குரலைக் கேட்கவுமில்லை, மகளிர்தொடர்பான பன்னாட்டுத் தூதுவர் என்பதை எந்தவகையிலும் அவர் மெய்ப்பிக்கவில்லை.

  இந்த ‘நல்லிணக்க’ மோசடியைத் தொடக்கத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார், விக்னேசுவரன். ‘முதலில் நல்லிணக்கம், அதன்பிறகே மற்றதெல்லாம்’ என்கிற அபத்தக் கருத்தை மெத்தப்படித்த மேதாவிகள் சிலரே பரப்பிக் கொண்டிருந்தபோது, ‘முதலில் நீதி, அதன்பிறகே மற்றதெல்லாம்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்தவர் விக்னேசுவரன். தேர்வு எழுதிய பிறகு முடிவை வெளியிடுவதுதானே முறை!

  அமெரிக்காவிலிருந்து கேதரீன் மட்டுமே வந்துபோகவில்லை. விக்னேசுவரனின் நாடி பிடித்துப் பார்க்க யாராவதொருவரை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது அமெரிக்கா. ‘நீதியை மறுக்கிற நல்லிணக்கத்தால் பயனில்லை’ என்று ஒவ்வொருவரிடமும் தெளிவாகச் சொல்லி அனுப்புகிறார் விக்னேசுவரன்.

  விக்னேசுவரன் பயன்படுத்தியிருக்கிற ‘நல்லிணக்கத் திணிப்பு’ என்கிற சொல் இன்றைய நிலையில் அதி முதன்மை பெறுகிறது. ஈழத்தில் மட்டுமில்லை, உலகின் எந்தெந்த மூலையில் இன அழிப்பு நடைபெற்றிருக்கிறதோ, நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தகுந்த வலுவான சொற்சேர்க்கை அது.

  எமது இனம், திருக்குறளைப் போல எவ்வளவோ அறிவுச் செல்வங்களை இந்தப் பூவுலகுக்கு வாரி வழங்கிய இனம். விக்னேசுவரன் அந்த அறிவுக் கொடையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

  முதல்வர் தேர்தலில் போட்டியிட்டபோதே, வல்வெட்டித்துறை கூட்டத்தில், ‘மக்களுக்காகப் போரிட்ட ஒரு மகத்தான வீரனின் மண்ணில் நின்று பேசுகிறேன்’ என்று இதயத்திலிருந்து பேசியவர் விக்னேசுவரன். பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களை வழங்கும் வேலையில்   இராணுவம் ஈடுபட்டிருக்கிறது – என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியவர். அதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களைப் பார்த்து, ‘புலிகள் இருந்தபோது எமது தாயக மண்ணில் போதைப் பொருள் பாவனை இருந்ததா’ என்று கம்பீரத்தோடு திருப்பிக் கேட்டவர்.

  வடகிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாமல் இயல்பான வாழ்க்கை திரும்பாது – என்கிற விக்னேசுவரனின் வாதத்தை, இன்று ஒட்டுமொத்த உலகும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான அவரது குரல், இன்று பன்னாட்டின் குரலாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

  நடந்தது இனப்படுகொலைதான் – என்கிற உண்மையை உலகறியப் பறைசாற்றியதில் விக்னேசுவரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. நடந்த இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை கோரும் அவரது தீர்மானத்தின் எதிரொலியை, ஐ.நா.மனித உரிமை ஆணையர் உசெய்னின் அறிக்கையைப் படித்தவர்கள் உணரமுடியும்.

  நல்லிணக்கத் திணிப்பு – என்கிற விக்னேசுவரனின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பின்னோக்கிப் பார்த்தால், தமிழினத்தின் மீது காலங்காலமாக என்னென்ன திணிக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. சிங்கக் கொடியைத் திணிக்க முயற்சி நடந்தது, சிங்களத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, பௌத்தச் சின்னமான சிறீயைத் திணிக்க முயற்சி நடந்தது, பௌத்தக் கலாச்சாரத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, இந்திய இராணுவத்தைத் திணிக்க முயற்சி நடந்தது, இப்போது சிங்கள இராணுவத்தின் துணையுடன் சிங்கள அடையாளத்தைத் திணிக்கும் முயற்சி தொடர்கிறது.

  இந்தத் திணிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள்தாம், விக்னேசுவரன் பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல, இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும்! தந்தை செல்வாவில் தொடங்கிய போராட்டங்கள்தான், பிரபாகரன் வழியில் தொடர்ந்தன.ஓர் இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டம்தான், ஆயுதப் போராட்டமாக மாறியது.

  ஈழத்தில் நடந்தது இன்னாசெய்யாமை(அகிம்சை)ப் போராட்டமோ, ஆயுதப் போராட்டமோ, எதுவாயினும் அதற்கு அடிப்படையாக இருந்தது –   சிங்கள அரசுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு. அதற்குத்தான் நீதி கேட்கிறோம் நாம். ‘நசுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு.. அதன்பிறகு ஒன்றாய்ச் சேர்வோம்… நல்லிணக்கத்துடன் வாழ்வோம்‘ என்கிறோம் நாம். ‘நீதி நியாயமெல்லாம் எதற்கு, நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் போதாதா’ என்கிறார்கள் அவர்கள். இது நாய்வாலை நறுக்கி நாய்க்கே சுடுசாறு வைக்கிற கதை. இதை எப்படி ஏற்பது?

  ‘உண்மையைக் கண்டறிய முயன்றால், இரண்டு இனங்களுக்கும் இடையில் பகைமைதான் அதிகரிக்கும்’ என்று எச்சரிக்கும் சிங்களத் தலைவர்கள், இதற்குப் பிறகும் உண்மைகளைக் கண்டறியாவிட்டால், இவ்வளவுக்குப் பிறகும் குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால், எம் இனம் புல் பூண்டற்று அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்கிறார்களா இல்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான், சிங்கள இனத்தின் விலங்குகளுக்கு எம்மை இரையாகச் சொல்கிறார்கள் அவர்கள்!

இலங்கை மாதிரி, ஒரு நயவஞ்சக நரியை உலக வரைபடத்தில் வேறெங்கேனும் யாரேனும் தேட முடியுமா? அது செனிவாவில் சாது போலப் பேசும், கொழும்பில் கடவுள் போலப் பேசும், வன்னியில் மிருகம்போலப் பேசும்.

 

  செனிவா தீர்மானத்தை, அது அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக நாம் எதிர்க்கவில்லை. பன்னாட்டு விசாரணை – என்கிற சொல்இல்லாததால்தான் எதிர்த்தோம். பன்னாட்டு விசாரணை நடக்காவிட்டால் இலங்கை   ஒட்டுமொத்த உலகையும் முட்டாளாக்கிவிடும் என்று எச்சரித்தோம். நம்மில் சிலருக்கே இதை விளங்கிக் கொள்கிற நுண்ணறிவு இல்லாத நிலையில், பன்னாட்டினருக்கு இது எப்படி விளங்கியிருக்கும்?

  இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளலாம், அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வெளிநாட்டு நீதிபதிகள் முதன்மை.முக்கியம்… என்றெல்லாம் அபத்தமாக ஒரு தீர்மானம் வடிவமைக்கப்பட்டவுடன், இலங்கை தானும் வந்து ஒட்டிக் கொண்டது. ‘நானும் சேர்ந்தே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறேன்’ என்று புல்புல்தாரா வாசித்தது. அப்பாவி ஆட்டுக்குட்டிகள் மாதிரி நம்மைச் சேர்ந்தவர்களும் புல்லரிப்போடு பார்த்து, புளகாங்கிதம் அடைந்தனர்.

  கொழும்பில் வந்து இறங்கிய உடனேயே, ‘வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கே மூச்’ என்று மைத்திரியில் தொடங்கி அத்தனைப் பேரும் அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தனர். கற்பழிப்பிலும் கடத்தலிலும் சிசுக்கொலையிலும் தங்கள் ஆண்மையைக் காட்டிய பொறுக்கிகளைப் ‘போர்க் கதாநாயகர்கள்’ என்று அவர்கள் போற்றியதைப் பார்த்து, அந்தப் பொறுக்கிகளே கூட வெட்கப்பட்டிருக்கக் கூடும்.

  “செனிவா தீர்மான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மகிந்த இராசபக்ச, கோதபாய இராசபக்ச மற்றும் முப்படையினர் தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று மைத்திரி அரசின் சார்பில் அமைச்சர் மகிந்த அமரவீர வெளிப்படையாகவே அறிவித்துவிட, திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் முழிக்கிறது அமெரிக்கா.

  இரணிலுக்கும் மைத்திரிக்கும் அமெரிக்காவைச் சமாளிப்பதைவிட, மகிந்தனைச் சமாளிப்பதுதான் முக்கியம். “போரை வென்று கொடுத்தவர்களைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முயல்கிறார்கள்” என்கிற மகிந்த தரப்புக் குற்றச்சாட்டு, தங்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

  புலிகளின் ஆதரவாளர்கள் – என்கிற ஐயத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – என்கிற கோரிக்கையை ஏற்க முரண்டுபிடிக்கிறது மைத்திரி அரசு. அதே அரசுதான், ஆயிரமாயிரம் தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்த ராணுவப் பொறுக்கிகளைக் கூண்டில் கூட ஏற்ற மாட்டோம் என்று அவசர அவசரமாக வாக்குறுதி அளிக்கிறது. இந்த இலங்கையுடன் என்ன நல்லிணக்கத்தைப் பேணச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை!

  இந்த வார ‘நியூயார்க்கு டைம்சு‘ கட்டுரை ஒன்று, போர் நடக்கும் பகுதிகளில் நடக்கிற பாலியல் வன்முறையைக் கடுமையாகச் சாடியுள்ளது. ‘இலக்கின்றி நடக்கிற துப்பாக்கிச்சூட்டுடன் இதை ஒப்பிடவே முடியாது. பாலியல் வன்முறைகள் தற்செயலாக நடப்பதில்லை. அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. கூடவே, ‘பாலியல் வன்முறைக்கு இடம்கொடுத்துவிடவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் கவனமாக இருந்தது’ என்று பாராட்டியும் இருக்கிறது.

  இலங்கை தன்னுடைய இராணுவத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு நின்றுவிடவில்லை. பாலியல் வன்முறை முதலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் படையினரின் வழக்குச் செலவை அரசே ஏற்கும் – என்று கூசாமல் அறிவிக்கவும் செய்கிறது. இப்படி அறிவிக்கிற ஓர் அரசை நம்புங்கள் என்று எப்படிச் சொல்ல முடிகிறது அமெரிக்காவாலும் இந்தியாவாலும்! உங்களுக்கு நீங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்களா?

  பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவிப் பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அரசு, குற்றவாளிகளுக்கு உதவுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது. அந்த நாட்டிடமிருந்து என்ன நல்லிணக்கத்தை எதிர்பார்க்கச் சொல்கிறார்கள்? விக்னேசுவரன் சொல்வதைப் போல இது ‘நல்லிணக்கத் திணிப்பு’ அல்லாமல் வேறென்ன?

  • புகழேந்தி தங்கராசு

    விக்னேசுவரன்,புகழேந்தி:vigneswaran_and_pughazhenthi

thamizhagaarasiyal_attai01

 

ஐப்பசி 15, 2046 / 01.11.2015