நாணுத்தரும்
– முனைவர் ஔவை நடராசன்
ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம் முதலான மொழிகள் தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் தமிழ் உரையாடலில் இழைய விடுதலால் இனிய தமிழ்ச் சொற்கள் மறைந்து போவதை நாம் அறிவோம். இலண்டன் மாநகரில் தமிழர் ஒருவரோடு ஒரு செருமானிய அறிஞர் உரையாடியபோது அத்தமிழர் தம் உரையாடலில் தமிழ்ச் சொற்களோடு ஆங்கிலச் சொற்களையும் கலந்து பேசினராம். அது தமிழுக்கு ஆக்கமன்று. “இனிய தமிழுக்கு நேரும் பெரிய இடையூறு” என அவர் குறிப்பதோடு அது பெரியதொரு தீவினையென்றும் அச் செருமானியர் குறித்துள்ளார். இக்கலவைச் சொற்களால் புதிய மொழி ஒன்று தோற்றம் பெற்றாலும் வியப்பதற்கில்லை என்கிறார்.
( I only want to express my concern about what I consider to be a very dangerous situation. Here lies a fertile ground for yet another language as is the case of Malayalam and Telugu, with all the fissile and divisive consequences that it implies.)
(Tamil Culture, Page 137, Oct.-Dec. 1963)
மேலை நாட்டார் செல்வத்தினைக் கொண்டு தொழில் வளம் பெருக்குதலில் தளராத அரசியற் பெருமக்கள், இச் செருமானிய அறிஞரான எயின்சு டிட்டில்பாக்கு என்பவர் கூறும் இம் மொழியியல் உண்மையைப் போற்றுவாராக! இங்ஙனம் சான்றோர் கூறும் உரைகளை எண்ணாது, ஒரு மொழியினைப் புகுத்துவதில் ஆர்வம் காட்டுவதால் தமிழரின் இலம்பாடு நாணுத்தரும் என்றன்றோ இரங்க வேண்டியுள்ளது.
– குறள்நெறி 1.4.1964, பக்கம் 16
Leave a Reply