(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – தொடர்ச்சி)

எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத்

தனக்குத்தாய் நாடியே சென்றாள்தனக்குத்தா

யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண்

டேகு மளித்திவ் வுலகு

-நாலடியார், இளமை நிலையாமை 15

பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு.

சொல் விளக்கம்: எனக்கு= என்; தாய் ஆகியாள்= தாயானவள்; என்னை= என்னை; ஈங்கு=இவ்வுலகத்தில்; இட்டு= பெற்றுவைத்து; தனக்கு=தன்; தாய்=இறந்த தாயை; நாடி=தேடி; சென்றாள்=இறந்தாள்; தனக்கு=அவளுக்கு; தாய் ஆகியவளும்= தாயானவளும்; அது ஆனாள் = அதுபோல்; தாய் தாய்க்கொண்டு=; தாயின் தாய் அவள் தாயைத் தேடிக்கொண்டு; ஏகும்=போகும்; இ உலகு= இவ்வுலகமானது; அளித்து=இயல்பு உடையது.

தாய்மார்களைத் தேடித் தாய்மார்கள் செல்லவில்லை. பிறக்கும் யாவருமே முன்னோர் வழியில் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கிச் செல்கின்றனர். யாரும் இதற்கு விலக்கு அல்ல. இதனைக் கூறி நிலையாமையை உணர்த்தி இறக்கும் முன்னரே பொழுதே சிறக்க வாழ் என அறிவுறுத்துகிறது நாலடியார்.

கங்காரு’ திரைப்படத்தில் வரும் கவிஞர் வைரமுத்துவின்

தாயும் கொஞ்ச காலம்,

தகப்பனும் கொஞ்ச காலம்.

ஊரும் கொஞ்ச காலம் – அந்த

உறவும் கொஞ்ச காலம்

என்னும் பாடல், தாய், தந்தை உறவு யாவுமே கொஞ்சகாலம்தான் என்னும் நிலையாமையைக் கூறுகிறது. இவ்வுலகமானது, தாயைத் தேடிக்கொண்டு போகும் இயல்பை யுடையது. நாலடியாரும் தாய் தன் தாயை அவளும் தன் தாயைத் தேடிச் செல்வதை எடுத்துக்காட்டாகக் கூறுவதன் மூலம் தந்தை, பிற உறவுகள் உயிரினங்களின் நிலையாமையை உணர்த்துகிறது.

வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து  செல்லும் நிலையாமை கொண்டது வாழ்வு!