bharathidasan09

  புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும் என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு வந்தது. பாரதிதாசன்! இந்தப் பெயர் தமிழர் தம் நெஞ்சத்தில் இடம் பெற்ற காலம் (18.8.39) முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் கிளர்ந்தெழுந்த நேரம்! “இந்தி எப்பக்கம் வந்து புகுந்துவிடும் எத்தனை பட்டாளம் கூட்டிவரும் தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம். பங்கம் விளைந்திடில் உங்கள் தாய்மொழிக்கே பச்சை இரத்தம் பறிமாறிடுவோம்! நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!” என்றெல்லாம் திரு.விக.வும் தமிழர் தலைவராக இருந்த பெரியாரும், படைநடத்திப் பெருமையுற்ற அஞ்சாநெஞ்சன் அழகிரியும் பாரதிதாசனின் போர்ப் பாட்டுக்களையே மொழிப்போரின் குரலாகக் கொண்டனர். தன்மான இயக்கத்தின் தளபதிகள் பலரில் ஒருவராக, கவிஞரும் உயர்ந்தார். அவரது ஆற்றலை அறிவுச் செல்வத்தை, புலமை விவரத்தை, புரட்சியின் வளர்ச்சியை, இதயத்தின் விடுதலை வேட்கையை வீரப் பண்ணிசைக்கும் பாவேந்தரை, தமிழக மக்களின் இதயத்திற்குக் குடியேற்றிய அரும்பணி அறிஞர் அண்ணா அவர்களுடையதாகும்! பள்ளியாசிரியராக இருந்த பாவேந்தரை பைந்தமிழகத்தின் புரட்சிக் கவிஞராக, அவரைச் சூழ்ந்திருந்த அரசியல் இருளையும் தேசீயத் திரையையும் கிழித்து வெண்ணிலா உலாவுக்கு உதவியவர் அண்ணாதாம்.

  இருபதாண்டுகளுக்கு முன்னால் இன்றைய தமிழகம் இல்லை. தமிழர் தலைவர்களுக்கு இன்றுள்ள சிறப்பு அன்றில்லை. அதிகாரம் அடக்குமுறை இவற்றின் அணைப்பு மட்டுமன்று; அக்கிரகாரப் பெருமையென்று ஒன்றிருந்தால்தான் அறிஞர்களும் மதிக்கப்பட்ட காலம்! தேசீய மாயையும் ஆரிய மோகமும் ஆதிக்க வல்லாரிகளை ஆட்டிப் படைத்திட்ட காலமாகும். 1945ஆம் ஆண்டில் பாரதிதாசன் அவர்களுக்கு தமிழர்கள் பொற்கிழியும் பொன்னாடையும் வழங்கினர். ரூ.25,000 பணமுடிப்பு வழங்கிய விழாவில் பன்மொழிப் புலவர்களும் பல்வேறு அரசியல் துறையினரும் கூடினர்; வாழ்த்தினர். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் என்ற கவிஞரின் சொல் அன்று தான் செயல்பட்டது? பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா, பேராசிரியர் சேதுப்பிள்ளை, ம.பொ.சிவஞானம், செங்கல்வராயன், சீவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், உமர்நாத்து, எண்ணற்றோர் அவரவர் நிலைக்கேற்ப கவிஞரைப் பாராட்டினர். திராவிடர் கழக முகாமிலே இருந்தாலும் தாயகத்தின் புகழ் வளர்க்கும் வல்லவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். பெரியாரும் கவிஞரும் அண்ணாவும் என்ற அழகான சொற்றொடர் இடைக்காலத்தில் அழிந்துபோனது வேதனைக்குரியதாகும்! பாமரர் இதயம் முதல் பல்கலைக்கழக மண்டபங்கள் வரை பாரதிதாசன் பாடல்களும் படங்களும் எழில் செய்தன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் எம்.இரத்தினசாமி அவர்கள் தலைமையில் புரட்சிக் கவிஞரின் படத்தை அறிஞர் அண்ணா அவர்கள் என்றும் மறக்கமுடியாத இன்றும் சிறப்புக்குரிய உரை நிகழ்த்தித் திறந்து வைத்தார்கள்! ‘‘ஏ! தாழ்ந்த தமிழகமே!’’ என்ற புத்தக வடிவில் இருப்பது அந்தப் பேருரை தான்! ‘‘உண்மைக் கவிஞனைப் போற்று! உயிர்க் கவிஞனைப் போற்று! உயிர்க் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று! புதுமைக் கவிகளைப் போற்று! புத்துணர்ச்சி கவிஞரைப் போற்று! தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தாழ்ந்த தமிழகமே! தலை நிமிர்ந்து நில்! தாயக விடுதலை விரும்பும் வீரக்கவிகளைப் போற்று! என்றெல்லாம் அண்ணா வேண்டினார், மறுமலர்ச்சித் தமிழகத்தில்.

  பாரதிதாசன் பரம்பரை உயர்ந்தது! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது கவிதைப் பணியினைக் கழகப்பணியாக உருவாக்கினார். தமிழகமெங்கும் அவர்தம் கவிதைக் குரல்கேட்டது! பல்கலைக் கழகத்திலேயிருந்து தமிழகமெங்கும் புயலெனச் சுழன்ற நெடுஞ்செழியன் கவிஞரின் கவிதைகளை எங்கும் எடுத்துச் சொன்னார்.

‘‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா

மகாராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா

கொலைவாளினை எட்டாமிகு கொடியோர் செயல் அற’’

என்ற உணர்ச்சியுரையை கேட்டவர்கள் விடுதலைக் கிளர்ச்சிக்குத் தம் உடலுழைப்பினைத் தந்துதவினார்.

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்

வெற்றித் தோள்கள்…. சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு’’

என்ற செந்தமிழ்த் தேன்சுவைப் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் இன்னும் தெவிட்டாதே! பேராசிரியர் அன்பழகன் அவர்களது திருமண வாழ்த்துச் செய்தியாக புரட்சிக் கவிஞர் பாடினர்! அந்தப் பாட்டு தமிழர் தம் மங்கிய உணர்வை கயங்கிய உள்ளத்தைக் கிளரச் செய்தது! ‘‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா – எலியென உனை இகழ்ந்தவர் மருள புலியென செயல்படு!’’ என்றெல்லாம் அவர் சொன்ன பொன்மொழிகள் அறிவியக்கப் பணியாளர்களுக்கு படைக்கலன்களாக அமைந்தன. திராவிடர் கழக அரசியல் கலகக்களங்களைக் கண்டவர் கவிஞர்! புதுவையில் காலிகள் அவரை கல்லால் அடித்தனர் – கருஞ்சட்டையைக் கிழித்தனர் – கலைஞர் கருணாநிதியும் அப்போதுதான் அடிபட்டார்! அன்றைய மாநாட்டு நிகழ்ச்சியின் போது பிற்பகலில் அழகிரி அவர்கள் பேசும்போது, ‘‘காலையில் நான் வராதபோது நடக்கக் கூடாத நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக மலரட்டும். அன்றோர் நாள் சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டபின் இன்றுவரை சாக்ரடீசைத் தேடுகிறார்கள். நமக்கொரு சாக்ரடீசு கிடைக்கவில்லை. அன்றோர் நாள் ஆப்ரகாம்லிங்கனைச் சுட்டுக் கொன்றுவிட்டபின் இன்றுவரை இலிங்கனைத் தேடுகிறார்கள்; ஆனால் நமக்கொரு ஆப்ரகாம் இலிங்கன் கிடைக்கவில்லை. இன்றும் நமது புரட்சிக் கவிஞரைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டால், பின்னால் பல ஆண்டுகள் நமக்கொரு புரட்சிக் கவிஞர் கிடைக்கவில்லையே என்று கொன்றவர்களே வருத்தப்படுவார்கள் என்று நெஞ்சத்தின் அதிர்ச்சியைக் கண்ணீரால் காட்டினார். கல்லால் அடித்த புதுவை மக்கள் கவிஞரை மக்கள் அணியின் தூதுவராகச் சட்டமன்றம் அனுப்பினர். பணியாற்றினார்; பாராட்டுரைகள் பலபெற்றார். மக்கள் கவிஞராக மறுமலர்ச்சித் தென்றலாகத் தமிழ்ப் பகைவரின் வைரியாக, வைரம் பாய்ந்த உள்ளத்தவராக உழைத்தார்! உயர்ந்தார்! தமிழகத்தின் சிற்றூர் அனைத்தும் புரட்சிக் கவிஞரின் பண்பாடின! பாண்டியன் பரிசு, இசையமுது கவிதைத் தொகுப்புகள், தமிழியக்கம், சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, பொன்முடிதன் காவியம், கவிதை, கட்டுரை ஆராய்ச்சியுரைகள் என்ற நீண்ட பட்டியல் நினைவிலே நிற்பவைகள் தான்! பாவேந்தர் பாரதிதாசன் ‘குயில்’ என்ற கவிதை இதழ் இன்பத் தமிழ்ச் சுரங்கம் – சுவைசொட்டும் சுவடியாக இன்றும் இலங்குகின்றன! எழுத்தால் வடிக்க இயலாத ஏற்றமும் சிறப்பும் புகழும் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் தமது 73வது அகவையில் திராவிடத்திரு நாட்டின் மக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்க 21-4-64இல் பிரிவுற்றார்! மணிவிழாக் கண்ட மாபெரும் கவிஞரை மறக்கமுடியாத நாம் மாண்டசெய்தியையும் கேட்டுவிட்டோம் ‘வளமார் எமது திராவிடம் வாழ்க வாழ்கவே’’ எனக் கவிஞர் வாழ்த்திய தாயகத்தின் விடுதலை விரும்பும் மக்கள் வீழ்ந்தாலும் பாவேந்தரின் பாக்கள் பாசமுள்ளவர் தம் நேச உள்ளங்களில் தவழும்! பாரதிதாசரின் மரபு பார் முழுதும் புகழ்பரவ பாடிச் செல்லட்டுமே!

குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964