seyakanthan_jeyakandan02

படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும்

இலக்குவனார் திருவள்ளுவன்

  30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன் படைப்புகள் சிலவற்றையும் படித்துள்ளதையும் குறிப்பிட்டேன். அளவு கடந்த அவர்களின் கலப்பு நடையும் தடம்புரண்டுபோனதால் செயகாந்தன் பிந்தைய படைப்புகளும் பிடிக்காமல் போனதையும் குறிப்பிட்டேன்.

  அப்பொழுது அவர், “இது குறித்துப் பேசத்தான் நான் விரும்புகின்றேன். இப்படி மொழிக் கொலை புரிபவர்களுக்கு அரசே விருதுகள் தருகின்றதே! ‘தமிழ்! தமிழ்!’ என்று முழங்கும் தமிழர்கள் தமிழ்க்கொலை புரிவோர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே!” என வருத்தத்துடன் தெரிவித்தார். இவர்கள் மட்டுமல்ல, “இக்கால எழுத்தளார்கள் பேச்சு மொழிக்கு முதன்மை கொடுத்து இவ்வாறு மொழிக் கொலை புரிகிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று திரண்டு தடுத்தால்தான் முடியும்” என்றேன். சிறுகதைகள், புதுக்கவிதைகள் என எழுதிப் பாடமாக வைத்துப் பணம்பண்ணுவதில் ஆர்வம் காட்டும் தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழைக் காப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் குறிப்பிட்டேன்.

 முன்பு அவரிடம் பாரதிதாசனின் அழகின் சிரிப்பினை மொழிபெயர்க்குமாறு கூறியிருந்தேன். மிகவும் எளிமையாக உள்ளதால் மொழிபெயர்க்க இயலவில்லை என்றார். (கடினமாக இருந்தால் மாற்றுச் சொற்களைக் கையாளும் வாய்ப்பு இருக்கும். எளிமையில் அவ்வாறு செய்ய இயலாது என விளக்கினார்.) எனவே, அவரிடம் தமிழ்ச்சிறுகதைகளை மொழிபெயர்க்குமாறு கூறினேன்.

  தமிழின் கலப்பு நடையால் எதையும்மொழிபெயர்க்கப் பிடிக்கவில்லை என்றார். “தமிழ்ப்பேச்சு நடையை அவ்வாறே குறிக்கமாட்டீர்கள் அல்லவா” எனக் கேட்டேன். “ஆம்” என்றார். உடனே செயகாந்தனின் ‘கருணையினால் அல்ல’, ‘புதுச் செருப்பு கடிக்கும்’ என்னும் சிறுகதைகளைப் படிக்குமாறு கூறினேன். தனிமனித உணர்வுகளையும் மாறுபட்ட கோணங்களையும் துல்லியமாகப் படைப்பவர் செயகாந்தன். எனவே, அவரது கதைகளை மொழி பெயர்க்கலாம் என்றேன். சரி என்றவர். சில வாரங்கள் கழித்து மீண்டும் வந்தார். தான் செயகாந்தன் சிறுகதைகளைச் சப்பானிய மொழியில் பெயர்க்க விரும்புவதால், அவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். செயகாந்தனிடம் தொலைபேசியில் வருவதற்கு இசைவும் நாளும் கேட்டு, இருவரும் நண்பர் முனைவர் பொன்.ஆசைத்தம்பியுடன் அவரது வீட்டிற்குச் சென்றோம். சப்பானியமொழி மூலம் தமிழ்ப்பாடநூல் எழுதியவர் என்று முனைவர் யமாசித்தாவை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். மகிழ்ச்சியாகவும் நன்கு அறிமுகமானவர்போலும் மூவருடனும் அவர் பேசினார்.

  தமிழில் ஈடுபாடு காட்டும் அயல்நாட்டவரைச் சந்தித்ததாலா அல்லது சப்பானிய மக்களுக்குத் தம் படைப்புகள் அறிமுகமாகப்போகிறது என்பதாலா அல்லது அவர் இயல்பு இதுதானா என மகிழ்ச்சியின் காரணம் எனக்குப் புரியாமல் இருந்தது. தன் நூல்கள் எதுவும் தன்னிடம் இல்லை எனவும், கூடுதலாகப் புத்தகங்கள் கொடுத்தால் பணம் தந்ததாகப் பதிப்பகத்தார் கணக்கு வைத்துக் கொள்வார்கள் என்றும் தன்னுடைய ‘மூங்கில் காட்டினுள்ளே’ நூல் மீனாட்சி பதிப்பகத்தில் இருக்கிறது என்றும் தான் அவர்களிடம் தெரிவிப்பதாகவும் போய் வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். எப்பொழுது வேண்டுமானாலும் தன்னைச் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார். விடைபெற்றபின்பு பதிப்பகம் சென்றோம். அங்கு மற்றொரு நூலையும் அவர்கள் தந்தனர். முனைவர் யமசித்தாவின் சப்பானிய மொழி பெயர்ப்புப் பணி முடிந்ததாகக் கேள்விப்பட்டேன். அவருடன் தொடர்பு விடுபட்டதால் நூல் வெளிவந்த விவரம் தெரியவில்லை. (‘முத்து’ முதலான தமிழ்ப்படங்கள் சப்பான் நாட்டில் வெற்றிகொடி நாட்டியதற்கு இவரின் மொழிமாற்றுப்பணியே முதன்மை என அறிந்தாலும் அவருடனான தொடர்பு விடுபட்டுப்போயிற்று.)

  செயகாந்தன் [சித்திரை 11, 1965 / ஏப்பிரல் 24, 1934 – பங்குனி 25, 2046 ஏப்பிரல் 08, 2015] காலமான செய்தி யறி்ந்ததும் அவரைச் சந்தித்ததும் தொடர்பான நிகழ்வுகளும் நினைவில் ஓடியதால் இதை முதலில் குறிப்பிட்டேன். அது மட்டுமல்ல, அடுத்து நான் சொல்லப்போவது வெறுப்பினால் அல்ல; நடுநிலை உணர்வினால்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

  நல்ல எழுத்தாளரான செயகாந்தன் செல்வமும் செல்வாக்கும் சேரச் சேர தடம் புரண்டுபோனதால்தான் பலரின் தாக்குதலுக்கும் ஆளானார். “அடித்தட்டு-நடுத்தர மக்களின் வாழ்வியல் உண்மைகளைச் சிறுகதைகளாகவும் புதினங்களாகவும் துணிச்சலாக எழுதிய எழுத்தாளர் செயகாந்தன் தன் எழுத்துகளை நிறுத்தி, எப்போதோ தற்கொலைசெய்து கொண்டார். இப்போது மரணமடைந்திருப்பவர் இயல்பான மனிதர் செயகாந்தன்” என மாவலி(பதில்களில்) குறிப்பிட்டிருப்பதே நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ், தமிழருக்கு எதிரான போக்கையே விரும்பி ஏற்றுக்கொண்ட செயகாந்தனை நாம் எப்படிப் பாராட்ட முடியும்? செயகாந்தனின் போக்கு பிடிக்காமல்போனதால், மனத்திற்குப் பிடித்த அவரது படைப்புகளும் பாத்திரங்களும் பிடிக்காமல் போய்விடுமா என எண்ணியது ஒரு காலம். ஆனால், இந்திய அரசிற்கு உளவுத்துறை மூலம் தன்னை விற்றுக்கொண்டு தமிழுக்கு எதிராகவே செயல்பட்ட அவரின் படைப்புகளைப் போற்றுவதும் தவறே என்னும் எண்ணத்திற்குத் தள்ளிவிட்டவர் அவரேதான்!

  ஒருமுறை மதுரையில் செயகாந்தன் வழக்கம்போல் போதையில், “தவளை தன்னைச் சோதனைக்கூடத்தில் அறுத்துப்பார்க்கப் பிறக்கவில்லை. என்னுடைய படைப்புகளைப் பற்றிக்கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை” என்றார். உடனே முனைவர் தமிழண்ணல் மறுமொழியாக,   “ஆய்வுக்கூடத்திற்குக் கொண்டுவரப்பட்டதென்றால், தவளை கவலைப்படுமே என எண்ணி அதை யாரும் அறுக்காமல் விடுவதில்லை. எழுத்தாளர்கள் படைப்பு வெளியில் வந்துவிட்டன என்றால் அவை மக்களின் சொத்துகள். எனவே, திறனாய்வு இருக்கத்தான் செய்யும்” என்றார். எனவே, ஒருபுறம் செயகாந்தன் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் தமிழறிஞர்களின் கண்டனங்களும் அவரை இறக்கிக்கொண்டுதான் இருந்தன.

  ‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூட புண்ணிய பாடையாக கொண்டாடி வரும் சமற்கிருத பாடை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வபாடை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாடைகளையெல்லாம் மனித பாடையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாடைக்கு தனிப் பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாடையென்கிறோம்.’ எனத் தன்னை ஆரியத்திற்கு விற்றுக்கொண்டதற்கு உரியவாறு மொழிந்துள்ளார்.“சமற்கிருதம் உயர்வானது, ” என்று சொன்னதோடு நிறுத்தியிருந்தால் அவரின் கருத்து என விட்டிருக்கலாம். ஆனால், ‘தமிழ்…. தமிழ் என்பவர்கள் தங்களைத் தாங்களே நக்கிக்கொள்ளும் நாய்கள்” என்று தமிழால் தமிழரால் வாழ்வில் உயர்ந்தவர் தமிழைத்தாழ்த்திக் கூறும்பொழுது அவரை எப்படி நாம் பாராட்ட முடியும்?

 தான் கைக்கூலி வாங்கிக்கொண்டு   இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்தபடுகொலைகளையும் கற்பழிப்புகளையும் கண்டித்த மனித நேயர்களைக் கைக்கூலி என்றார்; இந்திய அமைதி் கொல்லும் படையின் கற்பழிப்புகளை நியாயப்படுத்தினார். பேச்சாற்றல் மிக்க எழுத்தாளர்கள் மிகக்குறைவே! அவர்களுள் ஒருவராகவும் தன்னை விரைந்து விற்கும் தன்மையும் உடையவராக இருந்தமையால் இந்தியஅரசு அவருக்கு நல்ல விலை கொடுத்தது.

 1972இல் இவருக்குச்சாகித்ய அகாதமி விருது கிடைத்தபொழுது மகிழ்ந்தவரகள், இவருக்கு ஞானபீட விருதும்(2002), தாமரையணி(பத்மபூசன்) விருதும் (2009) வழங்கியபொழுது தமிழைரைத் தாழ்த்தியதால் பெற்ற விருது என்று மகிழவில்லை.

 தமிழர்களை நாய்களாகச் சொன்னதற்கு எதிர்ப்பு வந்து ஒரு கூட்டத்தில் சமற்கிருதத்தில் பேசுமாறு கூறியதும், தமிழால் தான் வளர்ந்த உண்மையை ஒப்புக்கொண்டு வருந்துவதாகவும் ஆனால், தன் கருத்தில் மாற்றமில்லை என்றும் ஆணவமாகக் கூறியவர். தமிழையும் தமிழரையும் பழித்தும் இழித்தும் பேசி உயர்வடைந்த இவரை நாம் எப்படிப் போற்ற முடியும்?

 உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்

     உருவெ டுப்பது கவிதை;

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

     தெரிந்து ரைப்பது கவிதை!

என்னும் கவிமணி தேசிகவிநாயகம் அவர்களின் இலக்கணம் கதைப்படைப்புகளுக்கும் பேச்சுக்கும் பொருந்தும். ஆனால், தெள்ளத் தெளிந்த தமிழில் படைக்காதவற்றை எப்படி பாராட்டுவது? ஈழத்தில் நடைபெற்ற படுகொலை உண்மையை மறைத்து கொலையாளிகளைப் போற்றிய நாவை எப்படி நாம் போராட்டுவது? எனவேதான் ஒரு பக்கம், செயகாந்தனுக்கு இரங்கல் புகழ்மாலைகள் குவிந்தாலும் மற்றொரு பக்கம் கண்டனக் கணைகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

  எனவே, இன்றைய படைப்பாளர்கள் செயகாந்தன் வாழ்க்கையைப் பாடமாகக் கொள்ள வேண்டும். தம்மிடம் எத்தகைய திறமை அல்லது எழுத்தாற்றல் இருந்தாலும் அறவழியிலிருந்து தடம் புரளும் பொழுது மக்களும் தங்கள் பாதையிலிருந்து தடம் புரளச் செய்துவிடுவார்கள்; மனித நேயத்தை மறக்கும்பொழுது மக்களும் தங்கள் மீதான நேயத்தை மறப்பார்கள்; மொழி, இன, நாட்டு நலனைத் துறக்கும் பொழுது மக்களும் தங்கள்மீது கொண்டுள்ள பற்றைத் துறப்பார்கள்.

 எனவேதான், சிறுகதையாசிரியராக, புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, நூலாசிரியராக, திரைப் பாடலாசிரியராக, திரைக்கதை உரையாடலாசிரியராக, திரைப்பட இயக்குநராக, திரைப்பட ஆக்குநராக, சொற்பொழிவாளராக, அமைப்புகளின் பொறுப்பாளராக எனப் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தி மக்களின் கருத்தைக் கவர்ந்தாலும் பாதை மாறிய செயகாந்தன் புகழின் உயரத்திலிருந்து பள்ளத்திற்குத் தள்ளப்பட்டார். எனவே, படைப்பாளர்களே! மக்களின் உண்மை வாழ்க்கையை மனித நேயத்துடன் படையுங்கள்! அவலம் கண்டவிடத்துத் துணிந்து எதிர்ப்பு தெரிவித்து படிப்போரை ஒன்று திரட்டுங்கள். விருதுகளுக்காகவும் சிறப்புகளுக்காகவும் உங்களை ஆள்வோர்க்கும் மொழி, இனப் பகைவர்களுக்கும் விற்றுவிடாதீர்கள்! விற்றால் வரும் சிறப்பு நிலையானதல்ல! ஆனால், உண்மைத் தொண்டால் கிடைக்கும் சிறப்பு உலகினும் உயர்ந்தது என்பதை உணருங்கள்!

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து. ( திருவள்ளுவர், திருக்குறள் 1080)

என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழாதீர்கள்!

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர் (திருவள்ளுவர், திருக்குறள் 954)

என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள்!

செயகாந்தனின் நல்ல படைப்புகள் நிலைக்கட்டும்!

பொல்லாக் கருத்துகள் ஒழியட்டும்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்