பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே
பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2
சுவிசு நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து 72,80,000 கோடிஉரூபாய் மதிப்பிலான தாலர் பணம் அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதது.
இந்தியாவிலிருந்து மொரிசியசு முதலான நாடுகளுக்குக்கருப்புப்பணம் சென்று வெள்ளைப்பணமாக மீண்டும் இந்திய முதலீடாக மாறுகிறது என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
நைசீரியா, கானா, பாக்கித்தான், சிம்பாவே, வடகொரியா, சோவியத்து ஒன்றியம், ஆத்திரேலியா, மியான்மர் முதலான பல நாடுகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் தத்தம் நாட்டுப் பணத்தாள்களைச்செல்லாதனவாக ஆக்கியுள்ளன. ஆனால், எல்லா நாடுகளிலும் அதன்பின்னர் விலைவாசி உயர்ந்தது; எதிர்பார்த்த பயன் கிட்டவில்லை.
இந்திய விடுதலைக்கு முன்னர், 1946-ம் ஆண்டு, பிரித்தானிய அரசு உரூ1,000, உரூ 10,000 பணத்தாள்களைத் தடைசெய்தது. இந்தியா 1954- இல் 5,000 உரூபாய் பணத்தாள்களை அறிமுகப்படுத்திப் புழக்கத்தில் விடப்பட்டது. சனதா ஆட்சியில், தை 03, 2009 / சனவரி 16, 1978 இல் அப்போதைய தலைமையர் மொரார்சி(தேசாய்) அனைத்து வானொலி நிலையங்கள் வழியாக ‘அரசு சார்பில் புழக்கத்தில் விடப்பட்ட 1000, 5000 மற்றும் 10000 உரூபாய் பணத்தாள்கள் செல்லா ‘ என அறிவித்தார். 1970 இல் அளித்த வாஞ்சு(Wanchoo) குழுவின் அறிக்கைக்கிணங்கவும் அப்போதைய குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ(ரெட்டி) ஒப்புதலுடனும் இவ்வாறு அறிவித்தார்.
இதன் பின்னர்க் கருப்புப்பணம் பயன்பாட்டு வடிவம் மாறி பெருகியதே தவிர, குறையவில்லை.
கருப்புப்பணம் குறித்து மத்திய அரசு ஏறத்தாழ 40 குழுக்களை 1947 இலிலிருந்து இதுவரை அமைத்துள்ளது. எனினும் பொதுவாக எக்குழுவின் பரிந்துரையையும் முழுமையாக ஏற்றதில்லை. இக்குழுக்களிலேயே, பலர் பணத்தாள்களைச் செல்லாது ஆக்குவதால் பயன் இல்லை என்று தெரிவித்தனர்.
பெரு நிறுவனங்களும் நிறுவன முதலாளிகளும் முறையாக வரி கட்டினால், கூடுதலாக ஆண்டிற்கு 7.5 நூறாயிரம் கோடி உரூபாய் திரளும் என்கிறார் பொருளியல் பேராசிரியர் அருண்குமார். இத்தொகை வழக்கமாக அரசு ஆண்டிற்குப் பெறும் வரித்தொகை(உரூபாய் 6.4 நூறாயிரம் கோடி) யைவிடஅதிகம் என்கிறார்.
இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 1,28,79,022 கோடி இந்திய உரூபாய்கள். இவர்களிடம் முறையாக வரி பெற்றால் வேறு யாரிடமும் வரி பெற வேண்டா.
ஏழைகளின் வேளாண்கடன், கல்விக்கடன், சிறுதொழில் கடன் முதலான கடன்தொகைகளைத் திரும்பப்பெறுவதற்காக வங்கிகள் மேற்கொள்ளும் அடாவடி முயற்சிகளால் பலர் இறந்துள்ளனர். அதற்கெல்லாம் அரசு மனமிரங்கவில்லை. ஆனால், பாரதிய அரசு வங்கி (SBI ) கருப்புப்பண முதலை விசய் மல்லையா முதலான 63 கோடீசுவரர்களின் உரூ.7,016 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் திரும்பிவராப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் 31 கோடீசுவரர்களின் கடன்தொகையில் பாதியைத் தள்ளுபடி செய்துள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் எத்தனைக் கோடீசுவரர்களுக்கு வாழ்வளிக்கப் போகின்றனவோ!
வருமான வரி செலுத்திய பின்னர் வேறு வரி இல்லை என்றால் வரவேற்கலாம். ஆனால், விற்பனை வரி என்ற ஏதேனும் பெயரில் நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசிற்கு வரி செலுத்தி வருகின்றோம். வருமானவரியும் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகா அளவிலும், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டிற்கு 12 நூறாயிரம் என்ற அளவிலும் இருந்தால், வரி ஏய்ப்பு இருக்காது. அரசிற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
வருமான வரி மூலம்அரசு பெறும் தொகையைவிட, அத்துறைக்கென ஊதியம், அலுவலக வாடகை, அறைகலன்கள், பணியாளருக்கான படிகள்போன்றவற்றிற்காக் செலவிடுவது மிகுதி என்கின்றனர். எனவே, வருமான வரித்துறையை மூடி விட்டுப், பணம்வழங்கும் அல்லது பெறும் இடத்தில் குறிப்பிட்ட விகிதத்தில் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை அனைவர்க்கும் பின்பற்றினால் அரசிற்குக் கூடுதல் ஆதாயம் கிட்டும். வரி ஏய்ப்பும் நடைபெறாது.
வரிவிதிப்பு முறையை வழிப்பறிக்கொள்ளைபோல் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பிற்கு வாசலைத் திறக்கும் முறையை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். அப்பொழுது கருப்புப்பணம் தானாகவே ஒழிந்துவிடும்.
கருப்புப்பணம் உருவாகும் வாயிலை அடைக்காமல் அள்ளித்தெளித்த அவசரக் கோலமாக 500 உருபாய்த்தாள்களும் 1000 உரூபாய்த்தாள்களும் செல்லா என அறிவித்து, வங்கிகளிலும் பணப்பொறியகங்களிலும் போதிய பண இருப்பு வழங்காமல், மக்களை வரிசைகளில் கால்கடுக்க நிற்க வைத்தும் வங்கிகளுக்கு அலைய வைத்தும், நலியச்செய்தும், ஏறத்தாழ ஐம்பதின்மர் உயிர்இழந்து அவர்கள் குடும்பத்தினரை நட்டாற்றில் விடச்செய்தும், புகழ்பாடிகளால் மயங்கி, அருளற்று நடந்து கொள்ளும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொறுப்புகளிலிருந்து அகற்றப்படும் நாள் வருவதாக!
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (திருவள்ளுவர், திருக்குறள் 640)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி:
http://articles.economictimes.indiatimes.com/keyword/fake-currency
http://indianexpress.com/about/fake-indian-currency-notes/
http://www.sunday-guardian.com/news/40-committees-worked-on-black-money
Leave a Reply