செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி
(ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி)
20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம்
நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளாக பதிவாகின்றன. இளையோரை பக்குவப்படுத்த வேண்டிய ஊடகங்களும், அரசும் அவர்களை நுகர்வோர்களாக மட்டுமே சுருக்கிக் கருதும் காரணத்தால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
வட அமெரிக்காவில் நடைபெற்று வருவதைப் போலவே, சீனாவிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன. உலகிலேயே நு-பேசி(ஐ-போன்), (ஆண்டிராய்டு) தன்னியக்கக் கைப்பேசிகள் அதிகம் புழங்கும் சீனாவில், அதன் மீதான அளவுக்கு மீறிய நுகர்வின் சமூக விளைவுகளே இவை!
கடந்த 2010 – மார்ச்சில், புசியன் மாகாணத்தின்(Fujian province) நன்பிங்கு(Nanping) நகரின் பள்ளியில், செங்கு மின்செங் Zheng Minsheng (郑民生) என்பவன் 8 பள்ளிக் குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்றான். கைது செய்யப்பட்ட அவனை, ஒரே மாதத்தில் உசாவித் தூக்கிலிட்டுக் கொன்றது சீன அரசு. ஆனால், தூக்குத் தண்டனைகள் இது போன்ற குற்றம் இழைப்போருக்கு அச்சத்தைத் தருவதே இல்லை.
அவன் தூக்கிலிடப்பட்ட அன்றே, குவான்டங்கு(Guangdong) மாகாணத்தின் (இ)லைசு(Leizhou) நகரில், சென் கான்பிங்கு[Chen Kangbing (陈康炳)] என்ற 33 அகவை இளைஞன், அங்கிருந்த ஆங்குஃபு தொடக்கப் பள்ளியில் (Hongfu Primary School) புகுந்து கத்தியால் தாக்கியதில் 16 பள்ளி மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர் சூன் மாதம் தூக்கிலிடப்பட்டார்.
ஏப்பிரல் 29 அன்று, தய்சிங்கு(Taixing) நகரில், சியாங்குசு(Jiangsu / Kiangsu ) பகுதியில் 47 அகவையான சு யு யுவான்(Xu Yuyuan)என்பவன் சோங்குசின் இளமழலைப் பள்ளியில் (Zhongxin Kindergarten) புகுந்து தாக்கியதில், 28 பள்ளி மாணவர்களும், 2 ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர். மாணவர்களில் கணிசமானவர்கள் 4 அகவைக் குழந்தைகள் ஆவர்.
இதற்கு அடுத்த நாள், வாங்கு யோங்கலை(Wang Yonglai) என்பவன் சான்டொங்கு(Shandong) மாகாணத்தில், வெய்ஃபாங்கு(Weifang) என்ற ஊரில், சுத்தியலைக் கொண்டு பள்ளி மாணவர்களைத் தாக்கிவிட்டுத் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றான்.
மே 12 – 2010இல், 48 அகவையான வு ஃகூவன்மிங்கு என்பவன், நான் தங்கியிருக்கும் சான்சி மாகாணத்தின் அன்சோங்கு என்ற ஊரில், 7 குழந்தைகள் உட்பட 8 பேரைக் கொன்றதுடன், 11 பேரைக் கோடரியால் காயப்படுத்தினான்.
இது போல, கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் தொடர்ந்து நடைபெற்ற பள்ளி வன்முறை நிகழ்வுகளில் மட்டும் சற்றொப்ப 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 115 பேர் காயப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று ஒருங்கிணைக்கப்படாமல் நடைபெற்றாலும், இவை அனைத்திலும் உள்ள ஒற்றுமை இக் கொலையாளர்கள் அனைவரும் மனநிலையில் பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் என்பதாகும்.
கடந்த 2000ஆம் ஆண்டு, சீனாவின் இளையோர் மீது மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறிக் காணாட்டங்கள்(வீடியோகேம்கள்) சீனாவில் தடை செய்யப்பட்டன. அதன்பின், நேரடியாக காணாட்டங்களை(வீடியோ கேம்களை)ச் சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் காரணமாகப் பல முன்னணி பன்னாட்டு பெரு நிறுவனங்கள் சீனாவில் கோலோச்ச இசைவளிக்கப்பட்டன.
இங்கு கோலோச்ச இசைவளிக்கப்பட்ட நிறுவனங்கள், கொல்லைப் புற வழியாக காணாட்ட விளையாட்டுகளை இறக்கின. இணையத்தில் நேரடியாகச் சென்று விளையாடும் வழியிலான இணைய இணைவுக் காணாட்டங்கள் (on-line video games) வந்தன. ஆப்பிள் – சாம்சங் என பல பன்னாட்டு நிறுவனங்களின் தன்னியக்க (ஆண்டிராய்டு வகை)க் கைப்பேசிகளும், அதிவேக இணைய இணைப்புகளும் இதைச் சாத்தியப்படுத்தின. இதன் விளைவாகச் சீனாவின் தற்போதைய இளையோர் சமூகம் இது போன்ற உளவியல் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்நிலையைத் தீவிரமாக்கும் வகையில், கடந்த சனவரி மாதம், காணாட்ட(வீடியோ) விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 14 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக் கொள்வதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் இம்முடிவுக்கு, மைக்ரோசாப்டு, சோனி நிறுவனங்கள் நன்றி தெரிவித்துள்ளன(!). இந்தத் தடை விலக்கலின் தாக்கம், விரைவில் சீனாவில் பள்ளிக் குழந்தைகள் மீதான தாக்குதல்களாகவும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளாகவும் எதிரொலிக்கலாம். ஆனால், இதன் எதிரொலி மிகவும் வன்மையானதாக அமையும்.
உலகமயச் சந்தைப் பொருளாதாரம், எப்பொதும் பொருளியல் சுரண்டலோடு நின்றுவிடுவதில்லை. அது, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் கடுமையானவை. ஒரு கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரையும் தனித் தனியே சிந்திக்கும் உதிரிகளாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோராகவே வைத்திருப்பதைத்தான் உலகமய நுகர்வியவெறிப் பண்பாடு தமது இலக்காக வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே, உலகெங்கும் குடும்பங்கள் சிதைகின்ற போக்கும், இதன் காரணமாக தனித்து விடப்படும் குழந்தைகளும், இளைஞர்களும் காணாட்டவிளையாட்டு முதலான செயற்கை இன்பங்களில் மூழ்கும் போக்கும் வளர்ந்து வருகின்றது.
இப்போக்கை நன்கு வளர்த்துவிட்டு, அதிலிருந்து ஆதாயம் சம்பாதிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் இலக்கு. அந்த இலக்கிற்கு உதவி செய்கின்ற அரசாக, சீனப் பொதுவுடைமை அரசு விளங்குகிறது. சமஉடைமை(சோசலிச) இலக்கை அடைவதற்கு, சந்தைப் பொருளியலில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்றார் டெங்கு சியோபிங்கு. நல்ல ஆப்பிள்களுடன், ஒரே ஓர் அழுகிய ஆப்பிள் பழத்தை வைத்தால் கூட அது மொத்தத்தையும் அழுகவைத்துவிடும் என்ற எளிய உண்மை அவருக்குப் புரியாமல் போனது வியப்பு!. அதன் விளைவுகளைத்தான் இன்று சீனா பட்டுக் கொண்டுள்ளது.
Leave a Reply