பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ்

பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம்

 

  பருமாவில்  தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்.

  அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து  கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன்.

  பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர் மியான்மர் அல்லது மியன்மா.(ர் அல்லது R என்னும் எழுத்திற்கு ஒலிப்பில்லை.) ஆனால் சங்கக்காலத்தில் இதன் பெயர் காழகம். அப்பொழுது தமிழ்நாட்டிற்கும் காழகத்திற்கும் வணிகஉறவு இருந்துள்ளது.

  காழகத்திலிருந்து அரியனவும் பெரியனவும் ஆகிய விளைபொருள்கள், உற்பத்திப்பொருள்கள் நெருக்கமாகத் துறைமுகங்களில் குறிக்கப் பட்டிருந்தமையைப் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.

  அதே நேரம் காழகம் என்பது அங்கே உருவாக்கப்படும் ஆடைக்கும் பெயராக இருந்துள்ளது. ஒளிமிகுந்த வண்ண ஆடையை உடுத்தியவன் (ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த வுடையினன்) எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார். இவைபோல் மேலும் பல குறிப்புகள் உள்ளன. இப்பொழுதுவரை கைலி எனப்பெறும் வண்ண வேட்டிதான் பருமாவின் ஆண் பெண் இருபாலருக்குமான தேசிய ஆடையாக உள்ளது. ‘காழகம்’ என்பது ‘காழி’ எனச் சுருங்கிப் பின்னர் ‘காலி’ என்றாகிக்  ‘கைலி’ என மாறியிருக்கலாம்.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு மியன்மாவுக்கும் நமக்கும் உள்ளது..

   சங்கக் காலத்தில் தமிழ் வணிகர்களும் கி.பி.3ஆம் நூற்றாண்டில் புத்தச்சமயம் பரப்ப வந்த தமி்ழர்களும்  இங்கு வாழ்ந்துள்ளனர். எனவே, பருமாவில் தமிழர்களின் இருப்பு தொன்மையானது.  . இடைக்காலச் சோழர்காலத்திலும் தமிழர்கள் இங்கே வந்து வாழ்ந்திருக்கின்றனர்.

  “கடந்த நூற்றாண்டில் மியன்மாவில்  26 இலட்சம் தமிழர்கள் இருந்ததாகவும் இப்பொழுது 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளதாகவும் அங்கே உள்ள மூத்த தமிழர்கள் தெரிவிக்கின்றனர். வேறு சிலர் 15 இலட்சம் தமிழர்கள்  இருப்பதாகக்  கூறுகின்றனர்” என்ற இலக்குவனார் திருவள்ளுவன் இப்போதைய நிலைக்கு வந்தார்.

  பருமிய இளைஞர்கள் தமிழில் நன்கு பேசினாலும் அவர்களுக்கிடையே பருமிய மொழியில்தான் பேசிக் கொள்கின்றனர்.சிறுவர் சிறுமி்யருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்கள் பருமிய வழிக்கல்வியில் படித்து வருவதாலும் வீட்டில் பருமியமொழியே பேசப்படுவதாலும் தமிழை அயல்மொழியாகக் கருதுகின்றனர். பருமிய ஆட்சிமுறையால் தமிழ் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டமையால், தமிழ் கற்க வழியின்றிப் பருமிய மொழியைப் படித்து அதையே தாய்மொழிபோல் எண்ணுகின்றனர்.

   எனினும் தமிழன்பர்கள், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்க்கல்விப் பள்ளிகளை நடத்தித் தமிழுணர்வை இளந்தலைமுறையினருக்கு உணரத்தி வருகின்றனர். ‘இளந்தமிழர் இயக்கம்’ நடத்தி இளம்பெண்களும் இளைஞர்களும் பொதுப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றிவருவது மகிழ்ச்சியாக உள்ளது.  என்றாலும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படாதவரை  தமிழ் உரிய வளர்ச்சியைப் பெற இயலாது.

  தமிழ்தான் நம் அடையாளம் எனத் தமிழமைப்பினர் உணர்த்தி வருகின்றனர். ஆனால் அந்த அடையாளம் அரசால் பறிக்கப்பட்டுள்ள சூழலில் அடையாளத்தை எளிதில் மீட்க இயலாது அல்லவா?

   ஏறத்தாழ 15  இலட்சம் தமிழர்கள் அங்கு வாழ்கின்றனர். யாரும் எக்கட்சியிலும் ஈடுபடுவதில்லை. பிற இனத்தவருடன் தோழமையுடனே வாழ்கின்றனர். எனினும் 1962 இல் அரசுப்ணிகளில் இருந்து தமிழர்கள் நீக்கப்பட்டனர். இப்பொழுது வரை அரசுப்பணிகளில் தமிழர்கள் இல்லை. அரசுப்பணிகளில் தமிழர் பணியாற்றுவது தமிழர் நலன் மேம்பட உதவும். அதே நேரம், நம்மோடு ஒப்பிடுகையில் பருமியத்தமிழர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டும்படியாக உள்ளது

   ஆரவாரச்செயல்களை அருஞ்செயல்களாக  எண்ணாமல்,  தமிழ்நூல்கள் அளித்தல்,  தமிழாசிரியருக்குப் பயிற்சி அளித்தல் முதலான உதவிகளுடன் பருமா நாட்டில் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஒரு பாடமொழியாகக் கற்பிக்கப்பட உரிய வழிவகைகளை ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும். ” என்ற திருவள்ளுவன் இலக்குவனார் தொடர்ந்தார்.

  மியன்மாவில்  இறையன்பர்கள் தமிழ்க்கல்வியைத்தந்து வருகின்றனர். வள்ளலார் பிறந்தநாள் விழா போன்ற இறைநெறி விழா நடத்தும் பொழுது, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேலைகளும்  நூலும் உணவும் அளிப்பதுடன் தமிழ்த்தேவையையும் உணர்த்துகின்றனர்.

  தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம் 75 தமிழ்ப்பள்ளிகளையும் கலைமகள் தமிழ்க்கல்வி நிறுவனம் 50 பள்ளிகளையும் நடத்தி வருகின்றன. திருக்குறள் கழகம் திருக்குறள் வகுப்புகளை நடத்தி வருகின்றது. இவர்கள் படிப்பதற்காகப்  பாடநூல்களும் வெளியிட்டுள்ளர். இதே போலப் பிற அமைப்புகளும் செயல்படுகின்றன. எனினும் பணியாற்றும்  ஆசிரியர்கள் மிகக் குறைந்ததொகை பெற்றுக்கொண்டு தொண்டாகக் கருதித்தமிழ் கற்றுத் தருகின்றனர். மேலும் இவ்வாறு தமிழ் பயில்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐயாயிரம்தான் எண்ணும்பொழுது  இவர்கள் செல்ல வேண்டிய தொலைவு மிகுதியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 மியன்மா இந்து தமிழ் மன்றம், பெரியார் சுயமரியாதை இயக்கம், அகில மியன்மா தமிழ் இந்து நிதி சேமிப்பு நிறுவனம், பகுத்தறிவியக்கம், தமிழர் அறநெறிக்கழகம், திருக்குறள் நெறி பரப்பு மையம், முதலானவற்றின் தலைமை அமைப்புகள், கி்ளை அமைப்புகள். இளைஞர் அணிகள் மூலமும் பார்க்ககுலத் தமிழர் கல்வி  அறக்கட்ட ளைபோன்ற சாதி அமைப்புகள் மூலமும் தமிழ்க்கல்வியை வளர்த்து வருகின்றனர். இவை தவிர, இசுலாமிய தமிழ் அமைப்புகளும் கிறித்துவத் தமிழ் அமைப்புகளும் தமிழ்க்கல்வியை ஊக்கப்படுத்தி வருகின்றன.

  இரசிகரஞ்சனி, தொண்டன், பாலபர்மா, சாந்தி, உதயசூரியன், சுதந்திர இந்துத்தான், தனவசிகன் எனத் தமிழ் இதழ்கள் பல வந்து கொண்டிருந்தன. ஆனால், 1962  ஆம் ஆண்டு படைத்துறையாட்சி இதழ்கள், பள்ளிக்கூடங்கள், தொழில்நிலையங்கள் என அனைத்தையும் அரசுடையமமையாக்கி இவற்றைத்தடை செய்துவிட்டது.

 கடந்த ஓராண்டாக வெளிவரும் ‘தமிழ்மாலை’ என்னும் திரைச்செய்தி, ஆரூடம்(சோதிடம்) சார்ந்த  திங்களிருமுறை விளம்பர இதழில் கதை, கட்டுரை, கவிதைகளும் இடம் பெறுகின்றன. ‘நமது நல்ல காலம்’, ‘உங்கள் எதிர்காலம்’  என மேலும் இரண்டு இதழ்களும் வருகின்றன. இவை தமிழை நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன எனச் சொல்ல இயலுமே தவிர,  அதற்குமேல் செயலாற்றும் வாய்ப்பு இவ்விதழ்களுக்கு இல்லை.

  மியன்மாவில் குடியாட்சி மலர்ந்துள்ள இன்றைய சூழலில் நம் அரசு நம் நாட்டு இலக்கிய இதழ்கள், நாளிதழ்கள், அரசியல் இதழ்கள், என அனைத்துவகை இதழ்களும் அங்கே விற்கப்பட ஆவன செய்ய வேண்டும்.

  தமிழ் வளர்ச்சித்துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து ஒரு குழுவை அமைத்து மியன்மாவிற்குச்சென்று  முழுமையான தமிழ்க்கல்வியை அளிக்க என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும்.

  தமிழைத் தொலைத்த  மியன்மாவில் இன்றைய தமிழர்கள் தமிழைத் துளிர்க்கச் செய்து வருகின்றனர். அரசின் உடன்பாடும் ஒத்துழைப்பும் இல்லாமல் முழுமையான தமிழ்க்கல்வியை அளிக்க இயலாது. எனவே, பருமிய / மி்யன்மா அரசு தமிழைக் கல்விமொழியாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மியன்மாவில் தமிழ் மீண்டும் தழைக்க உதவ வேண்டும்.” என்று முடித்தார் இலக்குவனார் திருவள்ளுவன்.

பருமியப் பள்ளிகளில் தமிழ் இடம்பெற  ஆவன செய்யுமா தமிழக அரசு?

ஆரா, இணையாசிரியர், தமிழக அரசியல் ;aaraa

– ஆரா, ‘தமிழக அரசியல்’, 05.11.2016