(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 32 (2.02) – தொடர்ச்சி)

தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல்

33.உயிர்த்துணை கொள்ளல்

  1. உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை.

உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும்.

  1. அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே.

வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை.

  1. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம்.

ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது.

  1. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல்.

ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல் வேண்டும்.

  1. கொளுமுன் கொண்டிடிற் குற்றம் பலவாம்.

ஆராயாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது பலவகைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

  1. துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்.

வாழ்க்கைத் துணையை இழந்தவரைத் திருமணம் செய்வது மிகச் சிறந்த செயலாகும்.

  1. விரும்பா தவரை விரும்புதல் பாவம்.

தம்மை விரும்பாதவரை விரும்புதல் கொடிய செயல் ஆகும்.

  1. துணைநலங் குடிமையே தூய்மையே யொழுக்கமே;

வாழ்க்கைத் துணையின் பண்புகள் நற்குடிப்பிறப்பு, (எண்ணத்திலும், சொல்லிலும், உடலிலும்)தூய்மை, ஒழுக்கம்;

  1. பருவமே யெழிலே பண்பே யின்சொலே;

மற்றும் இளமை, அழகு, நற்பண்புகள், இனிமையான சொல்;

  1. வரவினுள் வாழ்தலே மடிதுயி லிலாமையே.

மற்றும் வாழ்க்கைத் துணையின் வருமானத்திற்குள் வாழும் திறமை, சோம்பலின்மை, அதிகமாகத் தூங்காத தன்மை ஆகியவை ஆகும்.

 

– வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum