பறை எனும் தகவல் ஊடகம்
எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை.
அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு, பஞ்சுமரபு, தாளசமத்திரம், பஞ்சபாரதீயம் சுத்தாநந்தப் பிரகாசம், இசைமரபு, பரத சேனாபதீயம் போன்றவற்றைக் கூறுகிறார். இவற்றுள் பஞ்சமரபு, தாளசமுத்திரம், பரதசேனாபதீயம் என்ற நூல்கள் மட்டுமே இப்போது வழக்கில் உள்ளன.
தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மிக விரைந்து ஓடும் மனிதனைவிட, குதிரையை விட ஒலி இன்னும் மிக விரைவாகச் செல்லும் தன்மையது என்பதை அறிந்திருந்தான். பறை அல்லது ‘டாம்டாம்’ இவற்றில் அடிக்கும் குறிக்கோள் மூலம் செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினர். ஒவ்வொரு குறியீட்டைக் குறிக்கவும் ஒவ்வொரு வகையாக அடித்தனர். வெகு தொலைவில் உள்ள மலையுச்சில் ஒருவன் இவ்வாறு பறையறைந்து செய்தி அறிவிப்பான். அடுத்த மலையிலுள்ளவன் அதைக்கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதேபோல் செய்தியைக் குறியீட்டின் மூலம் அனுப்புவான். இவ்வாறு தொடர்ந்து அனுப்பப்படும் செய்தி பல நூற்றுக்கணக்கான கற்களுக்கு அப்பால் உள்ள மக்களைச் சென்றடைந்தது.
கால்வாய்களைக் காத்துநின்ற உழவர்கள் வெள்ளம் வந்ததும் அதைப் பறையறைந்து தெரிவித்தனர். இளநெல்லின் கண்ணும், அரிந்துவைத்த நெற்கதிகர்களிடத்தும் ஒருங்கே புனல் பரந்தது என்று துடியை முழக்கிப் புனல் பரந்த செய்தியை அறிவித்தனர். புதுப்புனல் மிக்குக் கரையையுடைத்துப் பெருகிவருங்கால் உடைமடையைக் கட்டுதற்குப் பறையையறைந்து, கடையரைத் தருவித்து தொகுத்தனர். கரை காப்போர் தம் காவற்பறையை முழக்கிக் கரையை அடைக்க ஆளேறுமாறு ஏவினர்.
நல்ல பதிவு, நன்றி! கட்டுரை மிகச் சுருக்கமாக முடிந்துவிட்டது-போல் தோன்றுகிறது.
சங்கப்பாடல்களில் நாம் பார்க்கும் துடியன், பறையன், பாணன், கூத்தன், பொருநன், விறலி … ஆகியோர் இன்றேல் … இன்று நாம் விலையாக்கிக் களிக்கும் இயல், இசை, நாடகத்தமிழாகிய, தமிழின் முக்கூறுகள் இல்லை. இதையுணராமல் இவர்களை “low caste, low birth” ஆட்கள் என்று சொல்லத்தொடங்கி இன்றும் தொடரும் மேற்கத்தியப்பார்வையைப் பற்றி என்ன சொல்லவென்று தெரியவில்லை. அவர்தம் கட்டுரைகள் என் குருதியழுத்தத்தைக் கூட்டுகின்றன.
இராசம் அம்மா
பதிற்றுப்பத்தின் 62 ஆம் பாட்டின் வரிகளில்:
அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
”தோட்டிசெப்பிப்பணிந்து” என்பதன் பொருளை ஆயலாம்.
– வேந்தன் அரசு
அன்பார்ந்த அய்யா,
மிக நல்ல பயனுள்ள தகவல். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரையிலிருந்து செல்லும் வழியில், ஊர் நுழைவதற்கு முன், சிறிய மண்டபம் ஒன்று முப்புறம் திறப்பாக இருக்கும். இங்கிருந்து நெருப்பு பந்தம் அசைப்பதன் மூலமும், மிகப் பெரிய பறை ஒலி மூலமும் தகவல்களை அனுப்புவார்கள் என்று என் தாத்தா கூறக் கேட்டுள்ளேன். இன்னும் அந்த மண்டபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த முறை அங்கு செல்கையில் உறுதிப்படுத்துகிறேன்.
அன்புடன்
பெ.சந்திர போசு
சென்னை.
முனைவர் இராசம் அம்மையார், முனைவர் சந்திரபோசு இருவருக்கும் நன்றி.
அம்மையீர், தமிழ்ச்சிமிழ் என்னும் எனது தொகுப்பில் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் குறிப்புகளைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் தொடக்கத்தில் வரும் பகுதி என எண்ணுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!
மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் அக்கையாரே.
முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
செல்வா